"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் ம...
திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்
மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
கௌரியின் சொந்த ஊர் பீட் மாவட்டம் ஆகும். இவர்கள் மும்பை ஒர்லி பகுதியில் வசித்து வந்தனர். திடீரென கௌரி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கௌரியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கௌரியின் தந்தை அசோக் போலீஸில் கொடுத்துள்ள புகாரில்,
“எனது மகளை ஆனந்தும், அவரது பெற்றோரும், சகோதரரும், சகோதரியும் சேர்ந்து வீட்டு வேலை செய்வது தொடர்பாக அடிக்கடி சித்திரவதை மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அவர்கள் வேறு வீட்டிற்கு மாறியுள்ளனர். அந்நேரம் பொருட்களை மாற்றும் போது கர்ப்ப பரிசோதனை அறிக்கை ஒன்று கௌரியிடம் கிடைத்தது.
அது கிரண் என்பவரின் கர்ப்பப் பரிசோதனை அறிக்கையாகும். அதில் ஆனந்த் – கிரண் மனைவி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை கேட்ட கௌரி, ஆனந்திடம் வாக்குவாதம் செய்தபோது, ‘நான் தற்கொலை செய்து கொள்வேன்; அதற்குக் காரணம் நீதான் என்று எழுதி வைத்துவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இது பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால், ஆனந்துக்கு வேறு திருமணம் செய்து வைப்பேன் என்று ஆனந்தின் சகோதரி சீத்தல் மிரட்டியுள்ளார். நாங்கள் அக்டோபர் 3-ம் தேதி ஆனந்தின் பிறந்தநாளுக்காக திடீரென அவர்களது வீட்டிற்கு சென்றோம். அப்போது கௌரியின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்தன.
அது குறித்து விசாரித்தபோது, ஆனந்தின் மிரட்டல் மற்றும் சித்திரவதை பற்றிச் தெரிவித்தார். அதன் பிறகு கடந்த 22-ம் தேதி திடீரென ஆனந்த் எங்களுக்கு போன் செய்து, கௌரி தற்கொலை செய்து கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் மும்பை வந்தபோதும், கௌரி தற்கொலை செய்து கொண்டதாகவே ஆனந்த் கூறினார். இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார், ஆனந்த், அவரது சகோதரி சீத்தல் மற்றும் சகோதரர் அஜய் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்து, ஆனந்தை கைது செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பங்கஜா முண்டே, “இதை கேட்டவுடன் நான் நொறுங்கிப்போனேன். ஆனந்த் அழுதபடியே போனில் பேசினார். இச்சம்பவத்திற்கு யார் காரணம் என்றாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கௌரியின் தந்தையிடமும் பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.



















