"திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது" - டிடிவி தினகரன்
`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை
திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் முதலமைச்சருக்கு உள்ளது. அதனால் தான், விரிவான திட்ட அறிக்கையை சரியாக சமர்ப்பிக்கவில்லை. அப்படி, சரியாக சமர்ப்பித்ததாக இருந்தால் தமிழகம் வந்து பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும். தற்பொழுது டெல்லி சென்று பிரதமரை பார்ப்பேன் எனக் கூறுவது அரசியலுக்காக தான்.
மெட்ரோ தரவே மாட்டோம் என மத்திய அரசு கூறவில்லை. விரிவான திட்ட அறிக்கையில் தான் குறைபாடு உள்ளது. எனவே, அதை தான் மத்திய அரசு நிராகரித்துள்ளது. சரியான திட்ட அறிக்கையை தயாரித்து மீண்டும் மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். மெட்ரோ ரயில் விவகாரத்தில் தமிழக அரசு தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறதே தவிர, நாங்கள் செய்யவில்லை.

தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்
பா.ஜ.க ஆட்சியில் தான் தமிழகத்திற்கான நிதி பகிர்வு 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மெட்ரோ திட்டத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கியது சென்னை மெட்ரோ திட்டத்திற்கு தான். நான்காண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பணி செய்துள்ளார் என கூற முடியாத நிலையில் தான் கனிமொழி உள்ளார். மத்திய அரசை குறை கூறிக்கொண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.
நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு சரியாக பராமரிப்பது கிடையாது. விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை கொண்டு வந்தாலும், அதை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது. நெல் ஈரப்பதம் இல்லாமல் கொண்டு வருவதற்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை சரியாக தமிழக அரசு செலவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஆனால், பிரதமர் மீது அபாண்டமாக அவர் பழி சுமத்துகிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது
டி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பொய் சொல்கிறார்கள். டி.ஜி.பி நியமன நடைமுறை குறித்து அமைச்சர் ரகுபதிக்கு எதுவும் தெரியவில்லை. தமிழக அரசு அனுப்பும் ஐந்து பேரில் மூன்று பேரை யு.பி.எஸ்.சி, டி.ஜி.பி-யாக தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசிடம் தெரிவிக்கும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்பொழுது அனுப்பிய மூன்று பேரும் நேர்மையான அதிகாரிகளாக இருப்பதால் அவர்களை டி.ஜி.பி-யாக நியமிப்பதில் முதல்வருக்கு விருப்பமில்லை. அதனால், அவருக்கு விருப்பமான நபரை நியமிக்கும் முறைக்கு அவர் காத்திருக்கிறார். டி.ஜி.பி நியமிக்கப்படாததால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது. அவருக்கு என்ன பேசுகிறோம் என்பதே தெரியவில்லை. பீகாரில் 6.5% போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல, தமிழ்நாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள். எனவே, அனைவரும் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் சுத்தம் செய்ய வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் பணியை அனைத்து அதிகாரிகளும் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க தான் அரசியல் செய்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான அலை உருவாகியுள்ளது. வரும் தேர்தலில் மக்கள் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள். கனிமவளக் கொள்ளையில் தி.மு.க-வின் தலைவர்களும், தொண்டர்களும் தான் ஈடுபட்டுள்ளார்கள். தொழில் முதலீடு எனக் கூறி சிறு சிறு நிறுவனங்களை தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைக்கிறார்கள். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில்லை" என்றார்.














