``சி.வி.சண்முகம் சொல்வது 100% உண்மை!" - விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த்
Anand Megalingam: Visa நிராகரிப்பு டு NASA..! ஒரு டிராக்டர் ஓட்டுநர் மகனின் 'வேற லெவல்' கம்பேக் கதை!
சினிமாவில் வருவது போன்ற ஒரு 'கம் பேக்' ஸ்டோரி நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு கதைதான் இந்திய விண்வெளித் துறையில் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.
இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் விண்வெளித் துறையின் முக்கிய முகங்களில் ஒருவரான டாக்டர். ஆனந்த் மேகலிங்கத்தின் வாழ்க்கை, பலருக்கும் ஒரு உந்துசக்தி. ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து, அமெரிக்காவின் நாசா (NASA) தொடர்புடைய விண்வெளித் திட்டங்களில் பங்கேற்பது வரையிலான அவரது பயணம், நிராகரிப்புகள் ஒருபோதும் நிரந்தரமல்ல என்பதை உரக்கச் சொல்கிறது.

ஸ்பேஸ் ஸோன் இந்தியா (Space Zone India) நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டாக்டர் ஆனந்தின் கதை, கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணம். பல ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளித் துறையில் புதிய வாய்ப்புகளைத் தேடி அமெரிக்கா செல்ல முயன்றபோது, அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிராகரிப்பு பலரையும் முடக்கிப் போட்டிருக்கும். ஆனால், சில வருடங்கள் கழித்து, அதே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தேர்ந்தெடுத்த ஒரு மதிப்புமிக்க சர்வதேச தலைமைத்துவத் திட்டத்திற்காக, அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றதுதான் கதையின் ஹைலைட். உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெறும் 23 நிபுணர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவால்கள் நிறைந்த ஆரம்ப காலம்!
இன்றைய பல டெக் ஜாம்பவான்களைப் போல, டாக்டர் ஆனந்த் பெரிய வசதியான குடும்பத்தில் இருந்து வரவில்லை. ஒரு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு டிராக்டர் ஓட்டுநராக இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். போதிய வசதிகள் இல்லாத சூழலில், தினமும் சுமார் ஆறு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்குச் சென்று படித்திருக்கிறார். இந்த தினசரிப் போராட்டம்தான், பிற்காலத்தில் விண்வெளித் துறையின் கடினமான சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மன உறுதியையும், விடாமுயற்சியையும் அவருக்குள் விதைத்திருக்கிறது.

கல்வியிலும் அவரது பாதை ஒரு நேர்கோடாக இருக்கவில்லை. முதலில், ஒரு நிலையான வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கணினி அறிவியல் (Computer Science) படிப்பில் சேர்ந்தார். ஆனால், அந்தத் துறையுடன் தன்னால் ஒன்ற முடியவில்லை என்பதை உணர்ந்த அவர், கல்லூரியை பாதியிலேயே விட்டு வெளியேறினார்.
இது அவரது லட்சியங்களுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளியாக அமைந்திருக்கக்கூடும். ஆனால், அந்தத் தோல்விதான் அவரது வாழ்க்கையை மாற்றிய ஒரு 'டர்னிங் பாயின்ட்' ஆக அமைந்தது என்கிறார்.
தனக்கு உண்மையிலேயே உத்வேகம் அளித்த ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் (Aeronautical Engineering) துறைக்கு மாறினார். இந்த முடிவு அவரது கல்விப் பயணத்தையே மாற்றி எழுதியது. தங்கப் பதக்கத்துடன், 9.8 CGPA என்ற சிறந்த மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றார். இது அவரது கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு சாதனையாகப் பார்க்கப்பட்டது.
ஸ்பேஸ் ஸோன் இந்தியா மற்றும் புதிய சாதனைகள்!
இந்தியா உலக விண்வெளிப் போட்டியில் வெறும் பங்கேற்பாளராக இருக்கக்கூடாது, ஒரு தலைவராக மாற வேண்டும் என்ற கனவுடன் 'ஸ்பேஸ் ஸோன் இந்தியா' நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த லட்சியப் பயணத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவளித்தவர்களில் அவரது தந்தையும் ஒருவர். குறைந்த முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் அதிகம் பேசப்படும் ஒரு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
RHUMI-H என்ற திட்டத்தின் மூலம், மொபைல் தளத்திலிருந்து ஏவப்பட்ட இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை உருவாக்கி பெரிய கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து வந்த RHUMI-1 திட்டம், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.

நிராகரிப்பு முதல் அங்கீகாரம் வரை!
இத்தனை வெற்றிகளுக்கு மத்தியிலும், அமெரிக்க விசா நிராகரிப்பு ஒரு தடையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், டாக்டர் ஆனந்த் அதைக் கண்டு துவளவில்லை. அப்போது அவர் சொன்ன, “எல்லைகள் மனிதர்களுக்குத்தான். கண்டுபிடிப்புகளுக்கு எல்லைகள் இல்லை” என்ற வார்த்தைகள், அவரது தத்துவமாகவே மாறியது.
சில வருடங்கள் கழித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்திய ஒரு மாத காலத் தீவிரப் பயிற்சியில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள், விண்வெளிப் படைத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் விண்வெளித் துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்த அனுபவம், இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்களை வலுப்படுத்தப் பெரிதும் உதவும் என்று டாக்டர் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது, ஸ்பேஸ் ஸோன் இந்தியா தனது அடுத்த பெரிய மைல்கல்லான 'RHUMI Twin Mission' திட்டத்திற்குத் தயாராகி வருகிறது.
இந்தியாவின் தனியார் விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக, சென்னையிலிருந்து ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவும் லட்சியத் திட்டம் இது. நிராகரிப்புகள் முடிவல்ல, அவை புதிய தொடக்கங்களுக்கான படிக்கட்டுகள் என்பதை டாக்டர் ஆனந்தின் வாழ்க்கை அழுத்தமாகச் சொல்கிறது.!



















