Sai Abhyankkar: "ரீல்ஸ்களில் வரவேண்டும் என்பதற்காக பாடல்கள் செய்யமாட்டேன்" - சாய...
Assembly Elections: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!- முழு விவரம்
தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணிகளை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா என நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தேதியை இன்று அறிவிப்பதாக தகவல் வந்திருந்தது.
இந்த 5 மாநிலங்களின் ஆட்சிகாலம் வருகிற மே மற்றும் ஜூன் மாதங்களில் தேதிகளில் முடிவடைகிறது. தேர்தல் சட்டங்களின்படி, ஆணையம் அந்தத் தேதிகளுக்கு முன்பாகவே தேர்தல்களை நடத்தவிருக்கிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதி தொடர்பாக, "மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் வாக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலம்.
லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுடன் இணைந்து, சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் அமைதியான தேர்தல்கள் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், தெளிவான சின்னங்கள்,தன்னார்வலர்களின் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்களிக்கும் அறைக்குள் போதுமான வெளிச்சமும், போதிய நிழலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நமது மதிப்பிற்குரிய மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனிப்பும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய ஏற்பாடுகள் மூலம் அனைத்து வாக்காளர்களும் எளிதாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்ய ஆணையம் முழு அக்கறை செலுத்தி வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்று யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும்.மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்." எனக் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6-ம் தேதி என அறிவித்திருக்கிறார்கள். அந்த வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவித்திருக்கிறார்.



















