செய்திகள் :

BB Tamil 9 Day 56: மொட்டைக் கடுதாசி விளையாட்டு; ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’- பிரஜின் அதிரடி

post image

‘உக்காருங்க கம்ருதீன்.. உக்காருங்க பாரு’... என்று கறாரான விசாரணையின் மூலம் அதட்டிக் கொண்டிருக்காமல், மொட்டை கடுதாசி, ரெட் & கிரீன் டாஸ்க்குகளின் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாகவே சென்றது. இந்த ஃபார்மட்டை வீக்கெண்ட் எபிசோடுகளில் பின்பற்றலாம். நோ எவிக்ஷன், ஆதிரை ரீ என்ட்ரி போன்ற ஆச்சரியங்கள் கூடுதல் போனஸ்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 56

“குழந்தைகளா.. நேத்து ஹோம் ஒர்க் தந்தேனே.. எழுதிட்டீங்களா.. மொட்டை கடுதாசியை வாசிங்க” என்று ஆரம்பித்து வைத்தார் விசே.

‘போதும். போதும். ரொம்ப லெக்ன்த்தா போயிட்டு இருக்கு’ என்கிற வடிவேலு வசனம் மாதிரி முதல் கடிதமே பலருக்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்தது. கடிதத்தை யார் எழுதியது என்பதை பார்வையாளர்களுக்கு தெரியுமாறு போட்டுக் கொடுத்தார் பிக் பாஸ்.

முதல் கடிதம் திவ்யா எழுதியது. பாருவிற்கு ‘கம்முவோட உன் லூட்டி தாங்க முடியல’ என்றும், வியானாவிற்கு ‘FJவோட தேவையில்லாத வேலையை பண்ணிட்டு இருக்க’ என்றும் விக்ரமிற்கு ‘யாரு சாமி நீ.. எங்கிருந்து வந்திருக்க?’ என்றும் சபரிக்கு ‘நூறு நாள் வேலைத் திட்டத்தில் வந்தவர்’ என்றும் சுபிக்ஷாவிற்கு ‘கடல்ன்ற ஏரியாவைத் தாண்டி வெளிய வாம்மா’ என்றும் பொறாமையைக் கொட்டியிருந்தார் திவ்யா.

அடுத்த கடிதம் சபரி எழுதியது. இவர் FJ மற்றும் வியானவிற்கு எழுதியிருந்தார். “டேய் FJ எப்பப்பாரு வியானா கூட கடலை போடற… முதல்ல தல வேலையை ஒழுங்கா பாரு. அப்புறமா தல தீபாவளி கொண்டாடற வேலையைப் பார்க்கலாம்” என்று ரைமிங்கில் கிண்டலடித்திருந்தார். ‘இந்த பேட்டர்னை பார்த்தா வினோத் எழுதியது மாதிரி இருக்குல்ல?’ என்று சரியான கிண்டலுடன் போட்டுக் கொடுத்தார் விசே. (நம்ம மைண்ட் வாய்ஸை இவர் கேட்ச் பண்ணிட்டாரு!)

அடுத்த கடிதம் வியானா எழுதியது. ‘டிரையாங்கிள் லவ் ஸ்டோரில மாட்டிட்டு முழிக்கறியே கம்மு… திவ்யா.. உன் கிட்ட பேசவே முடியல. மத்தவங்களுக்குப் பதிலா நீயே பேசிடற… பாரு.. மத்தவங்க மைண்டை வெச்சு நீயொரு மைண்ட் கேம் ஆடிடறே..” என்று புலம்பியிருந்தார் வியானா.

ரணகளமாக நடந்த மொட்டைக் கடுதாசி விளையாட்டு

அடுத்த கடிதத்தில் பிரஜினை கிண்டலடித்திருந்தார் அமித். “ஏம்ப்பா.. நீ வில்லன் மாதிரி முகத்தை வெச்சிட்டிருக்கப்ப எல்லாம் எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.. கூடவே எரிச்சலாவும் இருக்கும். உனக்குப் போய் பெஸ்ட் ஃபெர்பார்மர் தந்தப்ப கூடுதல் காண்டாச்சு.. என்று பிரஜினை டார்கெட் செய்திருந்தார் அமித். இந்தக் கடிதத்தை வாசித்த பாரு, கடைசியல் ‘இப்படிக்கு கனி’ என்று எக்ஸ்ட்ரா பிட்டை போட “உங்களுக்கு எப்பத்தான் இந்த வன்மம் குறையும்?” என்று கிண்டலடித்தார் விசே.

அடுத்த கடிதம் பாரு எழுதியது. கம்முவிற்கு அட்ரஸ் செய்து “தாடியில்லாம உன்னைப் பார்க்க பச்சைக் குழந்தை மாதிரி இருக்கு. தூக்கி வெச்சு கொஞ்சணும் மாதிரி இருக்கு. நம்மளை உன் பிரெண்டு சேத்து வைப்பா” என்கிற வாசகங்களையெல்லாம் கேட்கும் போது சந்தேகமே இல்லாமல் அது பாரு எழுதியது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். (நீ ஊதவே வேணாம் மொமன்ட்!). ‘மொட்டைக் கடுதாசிகூட உங்களுக்கு எழுதத் தெரியல’ என்று விசே சொன்னதை பாரு நிரூபித்துவிட்டார்.

கடிதத்தின் இன்னொரு பகுதியில் ‘டேய் விசித்திர விக்ரம்.. உன் காமெடியும் சரியில்ல. டைமிங்கும் சரியில்ல’ என்பது மாதிரி எழுதியிருந்தார் பாரு. ‘ஒண்ணு காதல் கடிதம்.. இன்னொன்னு காண்டு கடிதம்’ என்று கிண்டலடித்த விசே ‘இதை பாரு எழுதியிருப்பாங்களோ.. ச்சே.. ச்சே.. இருக்காது” என்று பட்டவர்த்தனமாக கிண்டலடித்தார்.

போட்டியாளர்களின் ரகசிய எரிச்சலும் கோபமும் வெளிப்பட்ட தருணங்கள்

அடுத்த கடிதம் விக்ரம் எழுதியது. “கம்மு.. நீ பண்ற வேலை ரொம்ப நாள் தாங்காது.. பாரு.. Secretly love you.. Catch if you can’ என்று எழுதியிருந்தார். பொதுவான வாசகமாக “இந்த வினோத்தை நாமினேட் பண்ணித் தொலைங்களேன்’ என்று பொருமியிருந்தார். விக்ரம் எழுதிய கடிதத்தை அமித் எழுதியதாக நினைத்துக்கொண்டு ‘சார்..நீங்கதானே எழுதியது..?’ என்று பிரேக்கில் பாரு கேட்க ‘கருமம்.. கருமம்.. நான் ஏன் அதை எழுதப் போறேன்?” என்று தலையில் அடித்துக் கொண்டார் அமித்.

அடுத்த கடிதம் கனி எழுதியது. பாருவிற்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் “உன்னை மாதிரி கேவலமான மைண்ட் செட் உள்ள ஆளை நான் பார்த்ததே இல்லை. உன்னை இனிமேல் என் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது” என்று ரகசிய வன்மத்தைக் கொட்டியிருந்தார்.

‘திவ்யா.. பொறுமையா.. ரூடா பேசாத.. எரிச்சலா வருது. பாரு.. எப்பவும் உன்னைப் பத்திதான் யோசிக்கற.. இந்தச் சுவர் இன்னமும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?” என்று எழுதியிருந்தவர் கம்ருதீன். சபாஷ்.. சரியான வாசகம்.

அடுத்த கடிதம் சுபிக்ஷா எழுதியது. FJ-க்கு கனி தருகிற செல்லத்தைக் கண்டித்து விட்டு ‘டெடிகேஷன் இல்ல’ என்று சபரியைத் திட்டி விட்டு, கடைசியில் ‘வியானா.. பிரெண்ட்ஷிப்புன்னு சொல்லிட்டு FJ கூட ஒண்ணு பண்ற.. இந்த ஷோவிற்கு தேவையில்லாத ஆணியா மாறிட்டு வர்ற’ என்று தன் தோழியை வாரியிருந்தார் சுபி.

தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி - பாருவின் நிரந்தர ஃபார்முலா

அடுத்த கடிதம் அரோரா எழுதியது. பாருவிற்கு ஆரம்பித்தது கடிதம். “சார்.. எனக்கு மட்டும் ரொம்ப லென்க்த்தா எழுதறாங்க.. மனசு வலிக்குது” என்று பாரு சிணுங்க.. “மத்தவங்க லெட்டரை படிக்கறப்ப மட்டும் ஜாலியா இருந்துதுல்ல?” என்று விசே ஜாலியாக மடக்கியவுடன் அசட்டுத்தனமான இளிப்புடன் அமர்ந்தார் பாரு.

அரோரா அப்படி என்னதான் எழுதியிருந்தார்? “ஏம்மா.. பாரு.. ‘திவ்யா பாயிண்ட் பாயிண்டா பேசுவா..ன்னு சொல்லியே அவளைக் கவிழ்த்துட்டேன்.. இதுதான் என் ராஜதந்திரம்ன்னு’ என் கிட்ட சொன்னே.. அப்ப எல்லார்கூடயும் ஒரு ஸ்ட்ராட்டஜியோடத்தான் பழகுவியா.. சபரி அழறப்ப போய் ஜாலியா எட்டிப் பார்த்த.. ஒருத்தர் அழறத பார்த்து ரசிப்பாங்களா.. என்ன இது கேவலமான பிழைப்பு’ என்றெல்லாம் பாருவை டேமேஜ் செய்திருந்தார் அரோரா.

FJ எழுதிய கடிதத்தில் பாருவிற்கு என்றால் மட்டும் கம்மு காட்டும் சிறப்புச் சலுகையை சாடியிருந்தார். பிரஜின் திவ்யாவிற்கு எழுதிய கடிதத்தில் “மாற்றம் செய்வேன்னு வந்தீங்க.. ஒரு மாற்றமும் இல்ல. கூட்டத்துல ஒருத்தரா மாறீட்டிங்க” என்று வாரியிருந்தார்.

ரம்யா எழுதியிருந்த கடிதம். FJவிற்கான செய்தி “ஏம்ப்பா.. வியானாவிற்கு சேவகனாவே மாறிட்ட. அவளுக்கு ஊட்டி விடறே.. அவ துணியை காயப் போடற. செருப்பை துடைச்சு வெக்கற” என்று வீட்டு தலயை பங்கமாக டேமேஜ் செய்திருந்தார் ரம்யா. (‘எதுக்கு வந்தோம்ன்றதையே மறந்துட்டு சமையக்காரனாவே மாறிட்டான்’ மொமண்ட்!)

தன்னைப் பற்றிய கடிதங்கள் வரும் போது முகம் சிணுங்கும் பாரு, மற்றவர்களின் கடிதத்தை படிக்கும் போது மட்டும் ஓவரான உற்சாகத்துடனும் மிகையான பில்டப்புடனும் வாசிப்பதை விசே கிண்டலடித்தார். (தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா கெட்டி சட்னின்ற தத்துவத்தை பாரு என்றைக்கும் கை விட மாட்டார்). வரிகள் புரியாமல் வாய்க்குள்ளேயே வாசித்து விட்டு ‘இப்ப ரெடி சார்’ என்று பாரு சொல்ல .’இதான அந்தக் கடிதத்துல எழுதியிருக்கு.. உக்காருங்க..’ என்று வரிசையாகச் சொல்லி ‘எத்தனை முறை கேக்கறது.. உக்காருங்க போரடிக்குது” என்று பாருவை விசே செய்த பங்கம் சுவாரசியமான காட்சி.

தனக்குத் தானே போட்டுக் கொடுத்துக்கொண்ட வினோத்

விக்ரம் குறித்து சான்ட்ரா எழுதிய கடிதத்தின் மூலம், சான்ட்ராவிற்கு ரைமிங்காக கிண்டலடிக்கத் தெரியும் என்பதை அறிய முடிந்தது. “விக்ரம்.. உங்க காமெடி சென்ஸ்ல சென்ஸே இல்ல. நீங்க பண்ற நக்கல், விக்கற மாதிரிதான் இருக்குது. நீங்க தூங்கும் போது மட்டும்தான் வீடு அமைதியா நல்லா இருக்கு. இப்படிக்கு உங்க ரசிகை” என்று விக்கல்ஸை நக்கல்ஸ் செய்திருந்தார் சான்ட்ரா.

வினோத் எழுதிய கடிதத்தை அரோரா வாசிக்கும்போது ஒரு காமெடி நடந்தது. சில வரிகளை வாசிக்க அரோரா தடுமாறும்போது வினோத் ‘சரியாப் படிம்மா’ என்று எடுத்துக் கொடுத்தார். இதன் மூலம் அதை அவர்தான் எழுதியது என்பது பட்டவர்த்தனமாக புரிந்தது. ‘இப்படியா ஒருத்தன் இருப்பான்.. எல்லாத்துலயும் ஆர்வம்’ என்று கிண்டலடித்தார் விசே. திவ்யாவிற்கும் இது புரிந்துவிட்டது. திவ்யா யாரையும் மதிக்காமல் சரியாகப் பேசாமல் உர்ரென்று இருப்பதை வினோத் எழுதியிருந்தார்.

‘எனக்கு எந்த லெட்டருமே வரலை’ என்று சான்ட்ரா சிணுங்க “பிரஜின் அடிப்பாரோன்னு பயமா இருக்குமோ?” என்று கிண்டலடித்தார் விசே. பிறகு இந்த மொட்டைக் கடுதாசி எழுத வைத்ததின் நோக்கம் பற்றி விவரித்தது சிறப்பு.

நமக்கும் கூட சில நெருங்கிய நண்பர்கள் இருப்பார்கள். நம்மிடமுள்ள குறைகளை எப்படி சொல்வது என்று சொல்லாமல் தயங்கி விடுவார்கள். நம்மிடமுள்ள குறைகள் மறைமுகமாக வெளிப்படும்போது ‘என்னைப் பத்தி இப்படியா நெனக்கற.. ச்சீ நீயெல்லாம் ஒரு நண்பனா?” என்று கோபம் கொள்வது அறியாமை. மாறாக அந்தக் குறைகள் உண்மை என்று தெரிந்தால் அவற்றை திருத்திக் கொள்வதுதான் நல்லது. குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டுபவன்தான் உண்மையான நண்பனாக இருப்பான். கூட இருந்து கும்மியடிப்பவன் நண்பன் அல்ல.

“இந்த லெட்டர் யாரு எழுதியதுன்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க.. என்ன எழுதியிருக்கீன்னு பாருங்க.. அதன் மூலமா உங்களைப் பத்தி நீங்களே புரிஞ்சுக்க முடியும்” என்று விளக்கினார் விசே.

பாருவின் கிச்சன் அலப்பறைகள் - ஒரு ஜாலியான குறும்படம்

“ஓகே. ஒரு குறும்படம் பார்க்கலாமா?” என்று விசே பில்டப் கொடுக்க “பாரு செஞ்ச சமையல் லட்சணம் பத்தியா?” என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டார் சான்ட்ரா. ‘உனக்கு பேட்டிங்கும் வரல. பௌலிங்கும் வரல.. சொன்னாவும் கேக்க மாட்டேன்ற’ என்கிற காமெடி மாதிரி கிச்சன் ஏரியாவில் பாரு பட்ட அவஸ்தைகளைப் பற்றிய குறும்படம் அது.

‘கிச்சன் ஏரியால பாரு தனியா நிக்கும்போது வேடிக்கை பார்த்தீங்கள்ல?’ என்று முந்தைய எபிசோடில் கண்டித்த அதே விசே, இப்போதோ “பாரு செஞ்ச சமையலை சாப்பிட்டு எப்படித்தான் உயிர் வாழ்ந்தீங்களோ?” என்று கிண்டடிலத்தார். இனிமேலாவது பாரு சமையல் கற்றுக் கொள்வாரா அல்லது புலம்பித் தீர்ப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சிவப்பு மற்றும் பச்சைத் துண்டுகளை வைத்து அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் விசே. ‘இந்த போட்டியாளருடன் உறவை நீட்டிக்க விரும்புகிறேன் மற்றும் இந்த போட்டியாளருடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று ஒவ்வொருவரும் தோ்வு செய்து சொல்ல வேண்டும். நீட்டிப்பு என்றால் பச்சை. துண்டிப்பு என்றால் சிவப்பு.

முதலில் எழுந்த ரம்யா, கனியின் உறவைத் துண்டிப்பதாகச் சொன்னது நல்ல அறிகுறி. கனியின் நிழலில் வாழ்வதுபோன்ற ஃபீலீங்காம். அடுத்ததாக அவர் சொன்னது அதிர்ச்சி. பாருவுடன் உறவை மலர வைக்கப் போகிறாராம். எதிரியை அருகிலேயே வைத்துக்கொள்ளும் உத்திபோல.

சிவப்பு, பச்சை விளையாட்டு - மைண்ட் வாய்ஸ் மோதல்கள்

அடுத்ததாக வந்த திவ்யா, கம்ருதின் உடன் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை விவரித்துவிட்டு ‘இனிமே இந்தாளு மூஞ்சிலயே முழிக்க வேண்டாம்’ என்று கண்கலங்கினார். உறவை நீட்டிக்க விரும்பும் நபர் பிரஜினாம். (மொட்டைக் கடுதாசி டாஸ்க்கில் திவ்யாவிற்கு அட்வைஸ் எழுதியவர் பிரஜின்தான்!)

அடுத்து எழுந்த அமித், வியானாவுடன் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடி விட்டு, மகள் ஃபீலிங் வருவதால் அந்த உறவு என்னை பலவீனமாக்கும் என்று சொன்னது சிறப்பு. நல்லவரான சபரியுடன் உறவை நீட்டிக்க விரும்புகிறாராம்.

பாருவின் முகத்திலேயே விழிக்க விரும்பாத FJ, வினோத்துடன் நட்பை நீட்டிக்க விரும்பினார். இதற்குப் பழிவாங்கிய பாரு, ‘அடிபட்டதுன்னு பொய் சொல்லி சமைக்க விட்டான். மனிதாபிமானமே இல்லாத பய’ என்று FJவைத் தேர்ந்தெடுத்தார். உறவை நீட்டிக்க விரும்புவுது அரோராவிடம் என்று சொல்லி ஆச்சரியம் தந்தார். அவருடைய நல்ல குணம் இப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறதாம். (பகையாளியை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும் உத்தியா?!)

இந்த சீசனில் வெற்றியை நோக்கி உன்னிப்பாக ஆடுபவர்கள் என்று சுபிக்ஷாவையும் விக்ரமையும் சொல்லலாம். வந்த வேலையை நோக்கிக் குறிவைத்து நகர்கிறார்கள். “வியானாவோட நட்பை வெளில போய் வெச்சுக்கறேன். ஆனா இங்க துண்டிக்க விரும்பறேன்” என்று சுபிக்ஷா எடுத்தது சரியான முடிவு. விக்ரமுடன் நட்பை நீட்டிக்க விரும்புகிறாராம். (சுபிக்ஷா முடிவு காரணமாக கண்கலங்கினார் வியானா).

விக்ரமிற்கு பச்சையையும் ரம்யாவிற்கு சிவப்பையும் தந்தார் கனி. ‘பொண்ணு ஃபீலிங்’ என்று அமித் தவிர்க்க நினைத்தாலும் ‘அப்பா ஃபீலிங்’ என்று அமித்திற்கு பச்சை அளித்து ஒட்டிக் கொண்டார் வியானா. (சுவாரசியமான முரண்பாடு!) சுபிக்ஷாவிற்கு அரை மனதுடன் சிவப்பு அளித்து கண்கலங்கினார் வியானா.

‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ - அதிரடியாக அறிவித்த பிரஜின்

‘சான்ட்ராவுடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று அறிவித்து ஆச்சரியமூட்டினார் பிரஜின். இது அவர் மனதார எடுத்து முடிவு என்றால் அது சரியான மூவ். விக்ரமின் தேர்வுகளை விசேவே மனமார பாராட்டினார். “பாருவை எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் பாருவோட தொடர்ந்து சண்டை போடறது ஜாலியா இருக்கு. அது ஒரு மாதிரியான ஃபிலீங். அப்புறமா ரெண்டு பேரும் ஜாலியா பேசிப்போம். இந்த உறவு நீடிக்கணும்” என்று சுவாரசியமாக விவரித்தார் விக்ரம். (உங்களை எனக்குப் பிடிக்காதுங்க.. ஆனாலும் லவ் யூங்க மோமெண்ட்).

‘சாண்ட்ரா ஆரம்பத்துல சிரிச்சு பேசினாங்க.. அதை வெச்சு என்ன பிரயோசனம்.. அப்புறம் கோபமா சண்டை போட்டாங்க.. அப்ப பொறுமையா ஹாண்டில் பண்ணிட்டேன்.. ஆனா அந்தக் கோபத்தை மறுபடி பார்க்கணும்” என்று விக்ரம் வித்தியாசமாக சொன்ன பதில்களுக்கு ரசித்து கைத்தட்டினார் விசே. (யாரு சாமி.. இவன்.. என்னைப் பார்க்கற மாதிரியே இருக்கு.. - பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ்!)

அடுத்து எழுந்த கம்மு, புது மாப்பிள்ளை போல வெட்கப்பட்டு தலைகுனிந்து தயங்கி நிற்க “சரி.. நீங்க வெக்கப்படுங்க.. நான் ஒரு பிரேக் போயிட்டு வரேன்” என்று ஜாலியாகக் கிளம்பிவிட்டார் விசே.

பிறகு திரும்பி வந்து ‘முடிவு செஞ்சிட்டீங்களா?” என்று கேட்க, உறவை நீட்டிக்க விரும்புவதாக அரோராவை கம்மு தேர்ந்தெடுத்தார். பாசிட்டிவிட்டி நிறைய இருக்கிறதாம். காமிரா சரியாக பாருவை ஜூம் செய்ய, சிரித்து சமாளித்தார் பாரு. திவ்யாவுடனான உறவைத் துண்டிக்க விரும்புவதாக கம்மு சொல்ல ‘ஹப்பாடா.. நிம்மதி.. ஒழிஞ்சு போ’ என்கிற ஃபீலிங்கை காட்டினார் திவ்யா. (இங்கயும் பிரச்னையா?’ என்று சிரித்தார் விசே)

கம்மு - அம்மு -பாரு - முக்கோணக் காதல் இம்சைகள்

அடுத்து எழுந்த அரோரா, பாருவுடனான உறவைத் துண்டிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பாரு நட்பை நீட்டிக்க விரும்புவது அரோராவுடன். (இன்ட்ரஸ்டிங்!). இதற்கு அரோரா சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது. “கம்முவோட நான் பேசினா பாரு சந்தோஷமா இருக்காங்க. பேசலைன்னா கசப்பாயிடறாங்க. நான் யார் கூட பேசணும்ன்னு அவங்க முடிவு பண்ணக்கூடாது. அதனால இந்த உறவு வேணாம்’ என்று விளக்கமளித்தார். (என்ன முக்கினாலும் இந்த முக்கோணக் காதலை புரிஞ்சுக்க முடியாதுபோல!)

நட்பை நீட்டிக்க விரும்புவதாக அரோரா தெரிவித்தது, விக்ரமுடன். ‘நல்லது எது செஞ்சாலும் நல்லா பாராட்றாராம். மோட்டிவேட் பண்றாராம்’.

ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தவுடன் எவிக்ஷன் ஆட்டத்தை ஆரம்பித்தார் விசே. காப்பாற்றப்பட்டவர்கள் போக கடைசியாக எஞ்சியவர்கள் ரம்யா, சான்ட்ரா மற்றும் வியானா. வாக்குகளின் கடைசியாக இருப்பவர் ரம்யா என்று சொல்கிறார்கள். எனவே அவர்தான் எவிக்ட் ஆகியிருக்க வேண்டும்.

ஆனால் எவிக்ஷன் கார்டை கிழித்தெறிவதின் மூலம் ‘நோ எவிக்ஷன்’ என்பதை விசே அறிவிக்க மக்களுக்கு சந்தோஷம். “இந்த வாரம் தப்பிச்சிட்டம்னு நெனக்காதீங்க. அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம்” என்று எச்சரித்த விசே, ‘இது என்ன பிரமாதம்.. இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு. சர்ப்ரைஸ்’ என்று சொல்லி விட்டு கிளம்ப, போட்டியாளர்களுக்கு மண்டையில் நண்டு பிறாண்டியது.

ரம்யா வீட்டுத் தல - ஆதிரை ரீ என்ட்ரி - சுவாரசியம் நிகழுமா?

அது என்ன சர்ப்ரைஸ் என்று பார்த்தால் ஆதிரையின் ரீ என்ட்ரி. மாறாக ஒரு புதிய சுவாரசியமான போட்டியாளரை இறக்கியிருக்கலாம். ஆதிரையைப் பார்த்ததும் திகைப்பை மறைத்துச் சிரித்தார் FJ. வியானாவின் முகமும் மாறியது. ‘இத நான் எதிர்பார்த்தேன்’ என்று சிரிப்புடன் துள்ளிக் குதித்தார், வன்மம் கொண்ட பாரு.

“அவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்திருக்காங்க. அவங்களுக்கு பிளஸ்-ஆ இருக்கும்” என்று முனகினார் விக்ரம். ஆதிரையின் வருகையையொட்டி FJ- வியானா சந்திப்பு நடந்தது. “அவங்க வந்துட்டாங்கன்றதுக்காக நாம பிரெண்டா இருக்கக்கூடாதுன்னு அவசியமில்ல. எப்பவும்போல இருப்போம். தள்ளி நின்னாதான் ஃபேக்காக தெரியும்.” என்கிற மாதிரி இருவரும் பேசிக் கொண்டார்கள்.

இந்த வாரத்தின் தலைவராக ரம்யா தோ்வாகியிருப்பதை பிரமோ காட்டுகிறது. தலயாக எப்படி அவர் செயல்படுவார், ஆதிரையின் வரவு என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் போன்ற விஷயங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

BB Tamil 9: "வாழ்த்துகள் ரம்யா" - பிக் பாஸ் சொன்னதும் நெகிழ்ந்த ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு... மேலும் பார்க்க

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும... மேலும் பார்க்க

BB Tamil 9: "இவரை நம்பாதீங்க சாண்ட்ரா" - பிரஜினைச் சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 55: FJ-வை ரோஸ்ட் செய்த வி.சே; புதுவரவாக உள்ளே நுழைகிறாரா ஒருவர்?

வெற்றி தொடரும்போது அந்தப் போதையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் வளர்ச்சிக்கான பாதை. இந்த சீசனில் இரண்டாம் முறை தலைவராகும் அரிய வாய்ப்பைப் பெற்ற FJ, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் அலட்சி... மேலும் பார்க்க

BB Tamil 9: "FJ என் ப்ரெண்ட்னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல" - ஹவுஸ் மேட்ஸின் மொட்டை கடுதாசிகள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: அரங்கேறிய இரண்டு ட்விஸ்டுகள்; மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்?

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் 9 பாதி நாட்களைக் கடந்து விட்டது.இதில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வார... மேலும் பார்க்க