``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' - தேர்தல் பிரசா...
``கஜானா சாவி என்னிடம்தான், எங்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி'' - தேர்தல் பிரசாரத்தில் அஜித்பவார்
மகாராஷ்டிராவில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்ட நிலையில் ஆளும் கட்சி தலைவர்கள்தான் ஒவ்வொரு இடமும் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆளும் பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனால் துணை முதல்வர் அஜித்பவார் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசும்போது பல சர்ச்சைக்குறிய தகவல்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே எங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட்டால்தான் நிதி ஒதுக்குவேன் என்று கூறி வந்தார்.
இப்போது புதிதாக, மகாராஷ்டிரா கஜானா சாவி என்னிடம் தான் இருக்கிறது. எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் நிதி ஒதுக்குவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அஜித்பவாரின் இக்கருத்துக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
மகாராஷ்டிரா கஜானாவின் சாவி அஜித்பவாரிடம் இல்லை என்றும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசிடம் இருக்கிறது என்றும் பா.ஜ.க மற்றும் சிவசேனா தலைவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

இதையடுத்து தனது கருத்துக்கு அஜித்பவார் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், ''இதற்கு முன்பு கஜானா தொடர்பாக நான் பேசியது பரபரப்பான கட்டத்தில் பேசியது. கவனமாக சிந்திக்காமல் பேசிவிட்டேன். நிதி தொடர்பான இறுதி அதிகாரம் என்னிடம் மட்டுமல்லாது, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடமும், குறிப்பாக மகாராஷ்டிரா மக்களிடமும் தான் இருக்கிறது. கஜானா சாவி என்னிடம் இருப்பதாக நான் கூறியிருக்கலாம். ஆனால் உண்மையில் கஜானா மக்களுக்குறியது'' என்று தெரிவித்தார்.
நாளை பதிவாகும் வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகிறது. அடுத்த கட்டமாக மும்பை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது.















