செய்திகள் :

Bike Ambulance Dada: தாயை இழந்த வலி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காத்த சேவை; பத்ம ஸ்ரீ கரீமுல் ஹக் கதை!

post image

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய துயரங்கள், நம்மை முடக்கிப்போடலாம் அல்லது மற்றவர்களுக்கு அந்தத் துயரம் நேராமல் தடுக்க நம்மை ஒரு பெரும் சக்தியாக உருமாற்றலாம்.

இதில் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்து, இன்று ஒரு மாபெரும் உத்வேகமாகத் திகழ்பவர்தான் மேற்கு வங்கத்தின் கரீமுல் ஹக் (Karimul Haque).

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தலாபரி என்னும் குக்கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கரீமுல், ஒரு சாதாரண தேயிலைத் தோட்டத் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

வறுமையின் காரணமாக அவருக்கு முறையான உயர்கல்வி கிடைக்கவில்லை. தனது குடும்ப வறுமையைப் போக்க தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டார்.

கரீமுல் ஹக்
கரீமுல் ஹக்

1995-ம் ஆண்டு கரீமுல் ஹக்கின் வாழ்க்கையில் ஒரு இருண்ட அத்தியாயம். அவரது தாய் சஃபிரான் நெசா திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். நள்ளிரவு நேரம், போதிய போக்குவரத்து வசதியோ, ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு பணமோ அவரிடம் இல்லை. தனது கண்முன்னேயே எந்த மருத்துவ உதவியும் இன்றி தன் தாயை மரணத்திடம் பறிகொடுத்தார்.

இந்தத் துயரம் அவரை உறங்கவிடாமல் செய்தது. "என் தாய்க்கு நேர்ந்த கதி, இந்தக் கிராமத்தில் வேறு யாருக்கும் வரக்கூடாது" என்ற வலிமையான சபதத்தை அவர் மனதுக்குள் எடுத்தார்.

தாயின் மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து, 2007-ல் தேயிலைத் தோட்டத்தில் அவருடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த அஸிஸுல் என்ற சக தொழிலாளி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாகச் செயல்பட்ட கரீமுல், அவரைத் தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமரவைத்து, தனது முதுகோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு, கரடுமுரடான கிராமத்துப் பாதைகளைக் கடந்து ஜல்பைகுரி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அந்தத் தொழிலாளியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

அப்போதுதான் கரீமுல் ஹக்கிற்கு ஒரு திறப்பு கிடைத்தது. ஆம்புலன்ஸ் செல்ல முடியாத ஒற்றையடிப்பாதைகள் கொண்ட கிராமங்களுக்கு, மோட்டார் சைக்கிள்தான் மிகச்சிறந்த உயிர்காக்கும் வாகனம் என்பதை உணர்ந்தார். அதற்காக வங்கியில் சிறு கடன் பெற்று தனது பைக்கையே ஒரு ஆம்புலன்ஸாக மாற்றினார்.

கரீமுல் ஹக்
கரீமுல் ஹக்

கடந்த பல ஆண்டுகளாக, மழை, குளிர், நள்ளிரவு என எதைப் பற்றியும் கவலைப்படாமல் 24/7 இலவச சேவையாக கிராம மக்களுக்காகத் தனது பைக் ஆம்புலன்ஸை ஓட்டி வருகிறார். இதற்காக அவர் யாரிடமும் ஒரு ரூபாய் கூட கட்டணமாகப் பெறுவதில்லை.

இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் உயிர்களை, சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளார்.

தேயிலைத் தோட்டத்தில் அவருக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் (மாதம் சுமார் 4000 - 5000 ரூபாய்), ஒரு கணிசமான பகுதியைத் தனது பைக் ஆம்புலன்ஸின் பெட்ரோல் செலவுக்காகவும், ஏழை நோயாளிகளின் மருத்துவச் செலவுக்காகவும் அர்ப்பணிக்கிறார்.

இவரது மனைவி, மகன்களும் இவரது சேவைக்கு முழுப் பக்கபலமாக உள்ளனர். ஆரம்பத்தில் இவரது செயலைப் பார்த்து திகைத்த கிராம மக்கள், இன்று இவரை `பைக் ஆம்புலன்ஸ் தாதா' (அண்ணன்) என்றும் கடவுளின் மறுஉருவம் என்றும் அழைக்கின்றனர்.

வெறும் வாகன ஓட்டியாக மட்டுமல்லாமல், உள்ளூர் மருத்துவர்களிடம் அடிப்படை முதலுதவிப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். இதனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நோயாளிகளுக்குத் தேவையான முதலுதவிகளையும் அவரே செய்கிறார்.

வெறும் பைக் ஆம்புலன்ஸோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது வீட்டின் ஒரு பகுதியிலேயே சிறிய மருத்துவ முகாம் ஒன்றை அமைத்து, மருத்துவர்களைத் தனது கிராமத்திற்கு வரவழைத்து மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளையும் இலவசமாகச் செய்து வருகிறார்.

கரீமுல் ஹக்
கரீமுல் ஹக்

இவரது தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய அரசு 2017-ம் ஆண்டு நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.

நம்மிடம் என்ன இல்லை என்பதை நினைத்து வருந்துவதை விட, இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று சிந்திப்பதே உண்மையான வாழ்க்கை.

எந்த வசதியும் இல்லாத ஒரு சாதாரணத் தேயிலைத் தோட்டத் தொழிலாளியால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றால், நம்மாலும் இந்தச் சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்க முடியும்தானே... சக உயிர்களிடத்தில் அன்பு செய்வோம், மனிதனாக வாழ்வோம்.

`எங்க மக்கள் கல்வியை முழுமையா எல்லாரும் ஏத்துக்கணும்' - நாடோடிப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ரோஸி!

தமிழகத்தில் ஏராளமான பழங்குடியின சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களில் காடுமலைகளில் நிலையாக இருப்பவர்கள் தவிர பருவகாலங்களுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் நாடோடிப் பழங்குடியினரும் இருக்கின்றனர்.... மேலும் பார்க்க

"வலது கை செய்கின்ற உதவி இடது கைக்குத் தெரியக்கூடாது" - சமூக சேவையில் 'தூய யோவான்' மாணவர் படை!

திருநெல்வேலியில் இயங்கி வரும் 'தூய யோவான் நிறுவனம்' மக்களுக்குத் தேவையான சமூக சேவைகளைச் சமூகப்பொறுப்போடு வழங்கி வருகிறது. இதனை மனநேயத்தன்மையோடு முன்னெடுத்து வருபவர்கள் கல்லூரி படிக்கக் கூடிய மாணவர் பட... மேலும் பார்க்க

சொகுசு வேலையை உதறிவிட்டு ராணுவத்தில் சாதனை; ஐ.நா விருது வென்ற மேஜர் அபிலாஷா பராக்!

தேச எல்லையைத் தாண்டி, சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார் மேஜர் அபிலாஷா பராக் (Major Abhilasha Barak). லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் (UNIFIL) ஒரு பகுதியாகச் சேவையாற்றி வரும... மேலும் பார்க்க

Anand Megalingam: Visa நிராகரிப்பு டு NASA..! ஒரு டிராக்டர் ஓட்டுநர் மகனின் 'வேற லெவல்' கம்பேக் கதை!

சினிமாவில் வருவது போன்ற ஒரு 'கம் பேக்' ஸ்டோரி நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு கதைதான் இந்திய விண்வெளித் துறையில் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. இந்தியாவின் வளர்ந்து வ... மேலும் பார்க்க

6,000 யூதர்களைக் காப்பாற்றிய `ஜப்பானிய ஷிண்ட்லர்’ சியுனே சுகிஹாரா! - 2ம் உலகப்போரின் நிஜ நாயகன்!

இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில், ஒற்றை மெழுகுவர்த்தியாக நின்று பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றிய ஒரு மாமனிதரின் கதை இது. "இன்றைய நாளில் எப்படிப்பட்ட நல்விளைவை இந்த உலகில் ஏற்படுத்தப் போகிறேன்?" என... மேலும் பார்க்க