கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண...
Bose Venkat: ``நான் அப்போ ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்'' - தன் ஆசான் குறித்து மனம் திறந்த போஸ் வெங்கட்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்துவந்த நிலையில் நேற்று காலை (நவ. 17) உயிரிழந்துள்ளார்.
கோபாலி ரஜினிகாந்த் மட்டுமின்றி அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி ஆகிய நடிகர்களுக்கும் ஆக்டிங் மாஸ்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது. சில இயக்குநர்களையும் உருவாக்கியிருக்கிறார்.

இவர் தொடர்பாக நடிகர் போஸ் வெங்கட் தன் முகநூல் பக்கத்தில், ``“கோபாலி” என்கிற நாராயணசாமி. என் வாத்தியார். 1997-ல் நான் ஆட்டோ ஓட்டுனராக இருந்த நேரம். ஆட்டோ ஓட்டும்போதும் உலகத் திரைப்படங்களை பார்க்கும் பழக்கம் இருந்தது.
அப்போது உட்லண்ட்ஸ், சத்யம், பிலிம்சேம்பரில் ஒரே நேரத்தில் படங்கள் ஓடும். அப்படி படம் பார்க்கும் போது, சேம்பரில் ஒரு ஹங்கேரியன் படம் பார்க்கச் சென்றிருந்தேன். அருகில் ஒரு பெரியவர் படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்.
பல இடங்களில் சிரிக்கவும் செய்தார். மொழி புரியாத நான் அவரை பின் தொடர்ந்தேன். அவர் சிரித்தால், நானும் சிரிப்பேன். படம் முடிந்ததும் என்னிடம் கேட்டார் 'புரிந்ததா' என்று. 'இல்லை' என்றேன். 'பின்பு எப்படி சிரித்தாய்?' என கேட்டார். 'உங்களை பின் தொடர்ந்தேன்' என்றேன்.
'என்ன ஆசை? எதற்காக சென்னை வந்தாய்?' என கேட்டார். 'நடிகனாக வேண்டும்' என்றேன். சிரித்துவிட்டு சென்றுவிட்டார். நான் தியேட்டரை விட்டு சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்தேன். கலர் சட்டையை மாற்றி காக்கி சட்டையை அணிந்து சவாரிக்கு காத்திருந்தேன்.

'ஆட்டோ வருமா...?' திரும்பி பார்த்தேன். என் அருகில் படம் பார்த்த அவர். 'ஆட்டோ ஓட்டுகிறாயா...?' 'ஆமாம்...' 'தி நகர் போகணும்...' 'ம்...' என்று கூட்டிச்சென்றேன்.
ஒரு பெரிய வீட்டருகே நிறுத்தச்சொன்னார். அதான் அவர் வீடு. பணம் கொடுத்தார். என்னிடம் 'உள்ளே வா, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போகலாம்' என்றார். தயங்கியபடி, 'சரி' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். பெரிய ஆச்சாரமான ஐயர் வீடு.
நான் தயங்கியபடி நின்றேன். அவர் என்னை பார்த்து 'வா...' என்று சொல்லி, நடு வீட்டிற்குள் பூஜையறைக்கே கூட்டிச்சென்றார். 'கும்பிட்டுக்கோ.. நீ பெரிய நடிகனா வருவ...' என்றார். எனக்கொன்றும் புரியவில்லை. பின்பு அவர் சொன்னது, 'நான் கோபாலி.. தூர்தர்சன் முன்னாள் இயக்குனர். DFA வந்தபொழுது முதல் நடிப்புக்கான ஆசிரியர் (film chamber).
ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சீனிவாசன்(மலையாளம்) போன்றோருக்கு நான் தான் ஆசிரியர். பாலச்சந்தரிடம் ரஜினியை முதலில் அறிமுகப்படுத்தியவன்" என்றார். ஆடிப்போய்விட்டேன். 'நாளையிலிருந்து தினமும் நீயும் வா... வந்து படி' என்றார். ஒன்றும் புரியாதவனாய் வீடு வந்தேன். மறுதினம் 100 ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கோடு சென்றேன்.
என் படிப்பு தொடங்கியது. ஆட்டோவும் ஓட்டிக்கொண்டு, படிப்பையும் தொடர்ந்தேன். அம்மா (அவர் மனைவி) பெரும்பாலும் என்னை சாப்பிடாமல் அனுப்பமாட்டார். ஜோசியரிடம் என்னை கூட்டிச்செல்வார். 'பெரிய நடிகனாவானா?' என்று ஆவளுடன் கேட்பார்.
அவர் ஆசைப்படி நடிகனானேன். அதில் பல திருத்தங்கள் செய்தார். நல்ல நடிகன் என்ற பெயர் பெற்றேன்.
(சில வருடம் கழித்து நான் கொடுத்த அதே 100 ரூபாயை எனக்கு gift ஆக கொடுத்தார்) அபேர்பட்ட நல்ல மனிதன். என் சினிமா புகழ் அனைத்தும் என் ஆசான் கோபாலியின் காலடியில்.
இப்போது இயற்கை எய்திவிட்டார், என் ஆசான். அவர் அடிக்கடி எனக்கு சொல்லும் வேதம் 'எல்லாருக்கும் சோறு போடு...' நிச்சயமாக செய்கிறேன். (ரஜினி சார் மீது பெரிய அன்பு வைத்திருந்தார். இன்று அந்த அன்பிற்காக அஞ்சலி செலுத்த வந்த ரஜினி சாருக்கு கோடி நன்றிகள்) உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் குருவே" எனப் பதிவிட்டிருக்கிறார்.













