அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்...
Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்!
சென்னை புத்தகக் கண்காட்சி ஒய்.எம். சி. ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1000 க்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் என மாபெரும் அறிவுத் திருவிழாவாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் பதிப்பாளர்கள் அரிய நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு வாசகர்களின் வரவேற்பும் அமோகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆழி பதிப்பகம் கொண்டு வந்திருக்கும், 'திராவிட நூலகம்' என்னும் கருத்தாக்கத்திலான 100 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் செவ்வியல் பதிப்புகளாகக் கருதப்படும் இந்த 100 நூல்கள் தமிழக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திராவிட இயக்கம் குறித்த முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. பராசக்தி திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது அண்ணாவின், 'தீ பரவட்டும்' நூல். திராவிட நூலகம் தொகுப்பில் இந்த நூலும் இடம்பிடித்திருக்கிறது. இதை இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள். 100 நூல்களையும் மொத்தமாகவும் தங்கள் வசதிக்கேற்ப தனி நூல்களாகவும் பலரும் வாங்கிச் செல்கிறார்கள். பெரும் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்தத் திட்டம் குறித்து ஆழி பதிப்பகம் ஆழி செந்தில் நாதனிடம் கேட்டோம்.

"திராவிட நூலகம் என்னும் இந்தக் கருத்தாக்கம் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை ஒட்டி உதித்த சிந்தனை. அதைத் தற்போது செய்துமுடித்திருக்கிறோம். 1916 - ம் ஆண்டு நீதிக்கட்சித் தலைவர்கள் சேர்ந்து வெளியிட்ட, ' பார்ப்பனரல்லாதோர் அறிக்கை' என்னும் நூலே இதன் முதல் நூலானது. இதைத்தான் திராவிட இயக்கத்தின் மூலப்பத்திரம் என்பார்கள். அதைத் தொடர்ந்து பண்டித எஸ். முத்துசாமி பிள்ளை எழுதிய 'நீதிக்கட்சியின் வரலாறு' என்னும் நூலை உருவாக்கினோம். இவர்தான் பெரியார் நடத்திய 'குடியரசு' இதழில் ஆசிரியராக இருந்தவர். இது முக்கியமான ஆவணம்.
அதன் பிறகு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் எழுதியிருக்கும் 'தாசிகள் மோசவலை', முக்கியமான சமூகப் படைப்பு. இதன் முக்கியம் என்னவென்றால், இந்த நூல் வெளியானதும் விழிப்புணர்வு ஏற்பட்டு தாசிமுறை ஒழிப்பு கொண்டுவரப்பட்டது என்பதுதான். அதன் பிறகு 1950-ம் ஆண்டு வெளியான இந்திய அரசியல் அமைப்பு வெளியானபோது அதில் இருக்கக்கூடிய குறைபாடுகளைப் பற்றி எழுதப்பட்ட ஒரு முக்கியமான புத்தகம் மா. இளஞ்செழியனுடைய 'இந்திய அரசியல் சித்திரம்'. மிகவும் விரிவான இந்த நூல் வெளியான காலத்தில் பல பிரச்னைகளை சந்தித்தது. எனவே இந்தத் தொகுப்பில் இது இடம்பெற வேண்டும் என்று முடிவுசெய்தோம். புலவர் குழந்தை, முடியரசன், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் நூல்களும் திராவிட இயக்க வரலாற்றில் முக்கியமானவை என்பதால் அவற்றையும் தொகுத்தோம்.
பொதுவாக பேராசிரியர் அன்பழகன் என்றால் அவரின் மேடைப்பேச்சுகளைத்தான் பலரும் புகழ்வார்கள். ஆனால் அவர் அற்புதமான எழுத்தாளர். அவருடைய நூல்களை வாசிக்கும்போது அதை அறிந்துகொள்ள முடியும். எனவே அவரது நூல்களையும் பதிப்பித்திருக்கிறோம்.
கலைஞரின் படைப்புகள் இந்தத் தொகுப்பில் முக்கியமானவை. 'சங்கத் தமிழ்', 'தொல்காப்பியப் பூங்கா', 'நெஞ்சுக்கு நீதி - 6 பாகங்கள்' என கலைஞரின் படைப்புகள் பல இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நெஞ்சுக்கு நீதி நூலின் முக்கியத்துவம் என்னவென்றால் 50 ஆண்டுகால வரலாற்றை ஒரு வரலாற்று ஆய்வாளனைப்போல அவர் பதிவு செய்துவைத்திருக்கிறார். அதைப் படித்தாலே தமிழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றை ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.
இந்தத் தொகுப்பில் முக்கியமாக இடம் பிடித்திருப்பவை அறிஞர் அண்ணாவின் நூல்கள். அண்னாவின் சின்னச் சின்ன நூல்கள் அந்தக் காலத்தில் வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றன. அண்ணாவின் 'பணத்தோட்டம்' பொருளாதார நூல்/ தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்காக எழுதப்பட்ட நூல். 'தீ பரவட்டும்', 'நீதிதேவன் மயக்கம்', போன்றவை முக்கியமான சில நூல்கள். 'வேலைக்காரி,' 'ஆரிய மாயை,' 'ஆரிய மாயை,' 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்,' 'மாஜி கடவுள்கள்' போன்ற நூல்கள் வெளிவந்த காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில தாக்கத்தை ஏற்படுத்தியவை.

ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு, புலவர் கோவிந்தன் போன்றோரின் நூல்களும் முக்கியமானவை. அந்தக் காலத்திலேயே ரோமானிய, கிரேக்க, ஐரோப்பிய வரலாற்றை கொண்டு தமிழக வரலாற்றைப் பேசுவார்கள். நமக்கு ஒரு முன் உதாரணங்களாக அந்த நாடுகளையும் அங்கு நடந்த போராட்டங்களையும் பேசும் நூல்கள் இவர்களுடையன. சொல்லப்போனால் இதுதான் திராவிட இயக்க நூல்களின் முக்கியமான செயல்பாடு.
இங்கர்சால் என்ன செய்தார்... பிரெஞ்சு புரட்சியில் என்ன நடந்தது... எமிலி ஜோலா என்ன செய்தார்... இரண்டாம் உலகப்போர் எப்படிப்பட்டது என்பன குறித்து சாதாரண மக்களுக்கு கதைகளாகச் சொல்லும் நூல்கள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. அப்படிப் பட்ட நூல்களை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டியது நம் கடமை.
வரும் தலைமுறையிடம் இந்த வரலாற்றைக் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியமும் நமக்கு உள்ளது. மேலும் இன்று திராவிட இயக்கம் குறித்த ஆய்வுகள் பல நடைபெறுகின்றன. அப்படி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மொத்த ஆவணங்களையும் திரட்டி, 'திராவிட நூலகம்' என்னும் தலைப்பில் வைக்க விரும்பினோம். அதன்பலன் தான் இந்த வெளியீடு. இந்த நூல்களின் வடிவமைப்பில் இருந்து அட்டைப்படம் வரைக்கும் ஒரு செவ்வியல் தன்மையோடு செய்திருக்கிறோம். ஒரு பெரிய பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை எங்கள் பதிப்பகத்தின் சிறு குழுவைக் கொண்டு செய்துமுடித்திருக்கிறோம்.

இதுகுறித்து அறிந்த பல தமிழார்வலர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்கள். இதுகுறித்த தகவல் பரவப் பரவ இன்னும் நிறைய வாசகர்களைப் போய்ச் சேரும் என்று நம்புகிறோம்" என்றார்.



















