எஸ்.பி.வேலுமணியை வரவேற்க செல்லாத அதிமுக முக்கிய நிர்வாகிகள் – காரணம் என்ன?
`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்சர் வன்னிஅரசு பேட்டி
தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராக வி.சி.க.வைச் சேர்ந்த வன்னிஅரசு மே 22, 2026 அன்று பதவியேற்றார். அமைச்சர் வன்னிஅரசு அவர்களை சந்தித்து அண்மை நிகழ்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.
``வி.சி.க-வின் 35 ஆண்டுகால பயணத்தில் முதன்முறையாக ஒரு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. வி.சி.க - வின் தொண்டராக, நிர்வாகியாக இந்த அங்கீகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?"
“விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது தேர்தலில் அதிகாரம் பகிர்வது, முதலமைச்சர் ஆவது உள்ளிட்ட கனவுகளோடு தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. 90களின் தொடக்கத்தில் வி.சி.க-வின் முழக்கம் என்பது சமூக நீதிக்கான முழக்கமாக இருந்தது. ஒடுக்குமுறைக்கு எதிரான கழக முழக்கமாக இருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நீங்கள் சேர்வது என்றால், வாய்க்கரிசி போட்டுவிட்டு வாங்க என்று தான் தலைவர் எங்களை அழைத்தார். எம்.எல்.ஏ, எம்.பி ஆகணும் என்கிற கனவோடு வராதீர்கள் என்றுதான் எங்களை அழைத்தார்.
சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம், கிளர்ச்சி, புரட்சி உருவாக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களுடைய தலைமையில் அணிவகுப்போம் என்கிற அடிப்படையில் தான் இணைந்தோம். 1999 காலகட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு பாதையில் இருந்து விலகி, தேர்தல் பாதைக்கு வந்தோம்.
அதற்கு முன்பாக எழுப்பப்பட்ட முழக்கம் என்பது ‘உங்களில் எவனும் யோக்கியன் இல்லை, எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை‘ என்பது தான். இன்றைக்கு தேர்தலில் ஒரு சீர்திருத்தத்தை, தூய்மையான ஒரு அரசியலை முன் எடுப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்.
நாங்கள் கடந்து வந்த பாதை மற்ற கட்சிகளுடன் முற்றிலும் வேறுபட்டது. எங்களுடைய பாதை கரடு முரடான கற்கள், முட்கள் நிறைந்த பாதை. எரிக்கப்பட்ட குடிசைகளில் இருந்து நாங்கள் வந்திருக்கிறோம். வெட்டப்பட்ட சிந்திய ரத்தத்திலிருந்து கிளம்பி வந்திருக்கிறோம்.
சாதாரணமாக இந்த இடத்திற்கு வந்து விடவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரோடு கண்ணீராக வந்து இந்த களத்தில் நின்றிருக்கிறோம். அந்த வலியோடு தான் இப்போதும் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.”

``பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, நீண்ட காலத்திற்கு பிறகு அமைச்சர் பதவி பெற்று, தலைவர் உங்களை அமர வைக்கும் பொழுது எப்படி இருந்தது? என்ன நினைத்தீர்கள்?"
“கடந்து வந்த பாதை தான் எனக்கு நினைவில் வந்தது. மக்களை அழைத்து எப்படி இயேசு நாதர் விடியலை காண்பித்தாரோ, அதேபோல எங்கள் தலைவர் இந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்து, தியாகத்தோடு, முழுக்க முழுக்க கொள்கையோடு எங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.
தேர்தல் பாதையில் நாங்கள் வந்த உடனேயே ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம், எளிய மக்களுக்கும் ஜனநாயகம்’ என்பது தான் எங்களுடைய முழக்கமாக இருந்தது. கடைசி மனிதனுக்கான அதிகாரம் என்பது தற்போது கிடைத்துள்ள அதிகாரம்தான். எங்களுடைய தலைவர் அவர்களின் கால்கள் பயணிக்காத இடமே இல்லை, அவர் சந்திக்காத களமே இல்லை. அப்படி இந்த களத்திலிருந்து இந்த பயணத்திலிருந்து எங்களுடைய தலைவர் ஒருவரை தேர்ந்தெடுத்து இங்கே உட்கார வைக்கிறார் என்றால், அந்த இடத்தில் வன்னி அரசு என்பவர் இல்லை, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தான் அந்த இடத்தில் இருக்கிறார்.
லட்சக்கணக்கான மக்களின் அடையாளமாக, தமிழ்நாட்டின் உரிமைக்கான அடையாளமாக, தேசிய இனத்தினுடைய அடையாளத்தின் முகமாக, தமிழ் ஈழ முழக்கத்தினுடைய முகமாக, புலம்பெயர் தமிழர் உடைய கோரிக்கையினுடைய முகமாக இந்த அமைச்சர் பதவி இருக்கிறது. வெறும் ஒற்றை முகமாக இல்லாமல், இந்த அமைசர்ருக்கு பின்பு இத்தனை முகங்கள் இருக்கின்றது.”
``35 ஆண்டு காலத்திற்கு பிறகு இந்த பதவி கிடைக்கும் பொழுது, இதில் ஏராளமான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்? இதனை எப்படி பார்க்கிறீர்கள்?"
“காங்கிரஸ், இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்தார்கள். நாங்கள் தான் கடைசியாக ஆதரவு கொடுத்தோம். எங்களுக்காக தான் அவர்கள் காத்திருந்தார்கள். இடதுசாரி அரசியல் கட்சிகள் இந்த அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் விரும்பியதாக சொன்னார்கள். எல்லா மாநிலங்களிலும் முதலமைச்சர்களை கைப்பாவையாக வைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகள் முயற்சிகள் எடுக்கின்றது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்கள் முடிவெடுத்தோம்.
வி.சி.க - வின் முழக்கம் என்பது ‘பா.ஜ.க அல்லாத, ஆர்.எஸ்.எஸ் அல்லாத இந்தியா’ என்பது தான். இந்த சூழ்நிலையில் தான், எங்கள் ஆதரவு கேட்டு த.வெ.க சார்பில் முதல்வர் அவர்கள் கடிதம் கொடுத்திருந்தார்கள். அதன் படி எங்கள் தலைவர் அவர்கள் தலைமையில் உயர்நிலை குழுவோடு பேசி தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்க மாட்டோம்.”

``அந்த நேரத்தில் ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம்’ என்று ட்வீட் போட்டீர்கள். அந்த இடத்தில்தான் இவர்கள் பதவியை எதிர்பார்க்கிறார்கள் என்ற பெரிய விமர்சனம் முன் வைத்தார்கள்?"
“நாங்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாதா, அமைச்சர் ஆகக்கூடாதா, நாங்கள் முதல்வர் ஆககூடாதா. இதுபோன்ற கேள்விகளை எந்த மனநிலையில் வைத்து கேட்கிறார்கள். இவங்க எல்லாம் போய் அமைச்சர் ஆகனுமா என்கிற ஆதிக்க கேள்வியை தான் முன் வைக்கிறார்கள். நான் அதை அப்படி தான் பார்க்க முடிகிறது. காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல் கட்சிகள் அமைச்சரவையில் சேர்கிறார்கள். அது குறித்து யாரும் விமர்சனம் செய்வதில்லை. நாங்கள் வந்து அமைச்சரவில் சேர்கிறோம் என்பதற்காக மட்டும் விமர்சனம் செய்கிறார்கள். இது எது போன்ற பார்வை என்று நான் கேட்கிறேன். சாதிய உளவியலா இருக்கிறதே என்பது தான் என்னுடைய கேள்வி.”
``சாதிய உளவியல் விமர்சனம் மட்டும் தானா அல்லது திமுகவில் இத்தனை ஆண்டுகள் பக்கபலமாக இருந்துவிட்டு, தவெக பக்கம் போவதை விமர்சனம் செய்கிறார்களா? எப்படி இதை எடுத்துக்கொள்ள முடியும்?"
“திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் ஒருத்தர் மட்டும்தான் வெளியில் வந்தோமா. காங்கிரஸ் கட்சியினரை கூட இந்த அளவிற்கு விமர்சனம் செய்யவில்லை. என்ன நடந்தது என்பது எங்கள் தலைவருக்கும் திமுக தலைவருக்கும் தான் தெரியும். அங்கே பேசிவிட்டு வந்ததெல்லாம் விளக்கி சொல்லி இருக்கிறார். இந்த அளவிற்கு நேர்மையாக தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு உதாரணம் எங்கள் தலைவர் தான். அந்த கூட்டணியில் இருந்து சொல்லிவிட்டு தான் வெளியில் வருகிறோம். உடனே வந்து விடவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிப்படையாக வெளியில் வருகிறோம் என்றால், அதனை எல்லாம் தாண்டி விமர்சனம் செய்ய என்ன உள்ளது. காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல் போகும் போது வராத விமர்சனம் விசிக-வுக்கு மட்டும் வருகிறது என்றால், நாங்கள் அதிகாரத்திற்கு போகக்கூடாது, இப்படியே கிடக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இருப்பதாக தான் நான் நினைக்கிறேன். எங்களை விமர்சிப்பதிலும் அவர்களை விமர்சிப்பதிலும் காட்டாயம் வேறுபாடு உள்ளது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது நாங்கள் நீண்ட காலமாக எழுப்பிய முழக்கமாகும். இந்திய அளவிலேயே முதலில் நாங்கள் தான் இந்த முழக்கத்தை எழுப்பினோம்.”
``வி.சி.க-வில் ஒரு சிலருக்கு தவெக உடன் கூட்டணி வைத்தில் உடன்பாடு இல்லை என சொல்லப்படுகிறதே?"
“உயர்நிலை குழு கூட்டத்தில் பெரும்பான்மையாக சொல்லப்பட்ட கருத்தின் அடிப்படையில் தான் எங்களுடைய தலைவர் அவர்கள் முடிவெடுத்தார்கள். எல்லோரும் இதனை தாமதமாக முடிவெடுத்தார்கள் என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் மிக விரைவில் முடிவெடுத்து விட்டதால் இது தாமதமாக தெரிகிறது. உயர்நிலைக் குழு கூட்டத்தில் தவெக உடன் சேர்வதா வேண்டாமா என்கிற கலந்துரையாடல் தான் நடைபெற்றது. பெரும்பான்மையாக சேர வேண்டும் என்ற முடிவுக்கு இணங்க எங்களுடைய தலைவர் எழுச்சித் தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் எடுத்த முடிவுதான் இது.”
``சமூக நலத்துறை, சமூக நீதி துறையாக மாறி இருக்கிறது. இது தவெக-வின் முன் முடிவா? விசிக-வின் முயற்சியா?"
“நாங்கள் நீண்ட காலமாக சமூக நீதிக்கான ஒரு துறையை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். இது எல்லோருக்குமான நீதியை பெற்று தரக்கூடிய, எல்லோருக்குமான செயல் திட்டங்களை மையப்படுத்தக்கூடிய ஒரு துறையாக கொண்டுவர வேண்டும் என்று இது இருவரின் கூட்டு முயற்சியாக, இணைந்து பேசி தான் முடிவெடுத்துள்ளோம்.”

``வி.சி.க-வை ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாகவே பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தை தொல்.திருமாவளவன் வெளிப்படுத்தி இருந்தார். இப்போதைய அமைச்சரவையிலும் சமூக நலத்துறையே ஒதுக்கிறார்கள் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?"
“புறக்கணிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரச்சினை தான் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து பேசுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டங்களை முன்னெடுத்த பிறகு தான், சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பதை உருவாக்குகிறது. அதன் பிறகு தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் என்பதை சிபிஐ உருவாக்குகிறது.
தமிழ்நாட்டினுடைய பெரும்பான்மைச் சமூகம் அதனுடைய வலியை கூட பேச முடியாமல் இருக்கிறது. அவர்களுடைய வேதனையும் பகிர முடியாமல் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலிலும், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சுரண்டப்படுகிறார்கள், ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை நாங்கள் ஒரு கட்சியாக வெளியில் வந்த பிறகு தான் அனைவரும் பேச ஆரம்பிக்கிறார்கள்.
நீங்கள் தெருவுக்குள் நடக்காதீர்கள் என்று சொல்லும் பொழுது நாங்கள் நடத்தோம். குளத்தில் இறங்காதீர்கள் என்னும்பொழுது நாங்கள் இறங்கினோம். இதுதான் அடங்கமறு அத்துமீறு. நீங்கள் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதை நாங்கள் செய்வோம். நீங்க படிக்கக் கூடாது அப்படின்னா நாங்க படிப்போம். நீங்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்றால் நாங்கள் கால் மேல் கால் போட்டு அமர்வோம். இது சமூகத்திற்காக இளைஞர்களை உருவாக்கக்கூடிய ஒரு பண்பாட்டு மாற்றம். அதனை தான் நாங்கள் அரசியல் ரீதியாக கொண்டு வந்திருக்கிறோம்.
இன்றைக்கு பேசப்படாமல் போனதெல்லாம் பேசப்படுகிறது என்றால் நாங்கள் அரசியலுக்கு வந்ததால் தான். அதனால் நாங்கள் இதில் தான் இருப்போம். தலித்களின் பாதுகாப்பில் தான் தமிழ்நாட்டின் பாதுகாப்பு அடங்கியுள்ளது. இது ஒரு முக்கியமான கோட்பாடு. எந்த மாநில மாநாக இருந்தாலும் அந்த மாநிலத்தில் தலித்துகள், பழங்குடியினர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் மாநிலம் பாதுகாப்பாக, அரசாங்கம், சட்ட ஒழுங்கு பாதுகாப்பாக இருக்கும்.”
``களப்போராட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக உங்களை பார்த்திருக்கிறோம். தற்பொழுது அமைச்சராக உள்ளீர்கள். கோரிக்கைகள் முன்வைக்கும் இடத்திலிருந்து தற்பொழுதே அதனை நிறைவேற்றும் இடத்திற்கு வந்துள்ளீர்கள். எப்படி பார்க்கிறீர்கள்?"
“கால் நூற்றாண்டுக்கு மேலாக போராட்ட களத்தில் நான் இருந்துள்ளேன். என்ன கோரிக்கை என்ன பிரச்சனை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய தலைவர் எங்களை சந்தித்து பேசும் பொழுது நாம் தாட்கோ அலுவலகத்தில் மனு கொடுக்கும் நிலையில் இருக்கக் கூடாது. நாம் நிர்வாகம் செய்யக்கூடிய நிலைக்கு வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறினார். இது மனு கொடுக்கின்ற இயக்கமல்ல, போராடுகின்ற இயக்கம் என்று சொல்லியிருக்கிறார்.
அப்படிப்பட்ட நிலையிலிருந்து தற்போது நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என்றால், வருகிறவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாக தெரியும். நான் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து தான் வந்திருக்கிறேன். நானும் ஹாஸ்டலில் தங்கிவிட்டு தான் வந்திருக்கிறேன். எனவே ஹாஸ்டல் மாணவர்களுடைய வலி தேவை என்ன என்பது எனக்கு தெரியும். எனவே ஹாஸ்டல்களை ஹைடெக் ஆக மாற்றம் செய்ய எனக்கு தெரியும். அவர்களின் கண்ணீரை என்னுடைய கண்ணீராக நான் பார்க்கிறேன்.
இந்தத் துறையை நான் நேசித்து, காதலித்து இதில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். காலையில் நான் பத்து மணிக்கு எல்லாம் வந்துவிடுகிறேன். எட்டு மணிக்கு எல்லாம் வீட்டிற்கு சென்று விடுவார்கள். நான் 9 மணி வரை இங்கேயே இருந்து வருகின்ற எல்லோரையும் சந்தித்து விட்டு தான் செல்கிறேன். இந்தத் துறைக்கு அவ்வளவு கோரிக்கைகள் இருக்கின்றன. உடனடியாக அந்த அதிகாரிகளை கூப்பிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க சொல்வது, பேசுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறேன். உடனடியாக பணிகளை விரைந்து செய்கின்றேன்.”

``ஆ. ராசா போன்றோர் கடுமையான விமர்சனம் செய்துள்ளார்கள். தோழமையாக இருந்த கட்சிகளே இப்போது விமர்சிக்கும் போது எப்படி பாக்குறீங்க?"
``அண்ணன் ஆ. ராசா அவர்களை இப்போது மட்டும் அல்ல, எப்போதும் நாங்கள் நேசிப்பவர்கள். நான் பதவி ஏற்ற நாளில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அப்போதே ஆ. ராசா விமர்சனம் செய்து இருப்பது பற்றி அவரிடம் கூறினேன். எங்களுடைய தலைவர் பதிலுக்கு எந்த வித விமர்சனமும் வைக்க கூடாது என்று கூறி இருப்பதையும் கூறினேன். அவரும் அந்தப் பதிவை எடுக்க சொல்கிறேன் என்று உறுதியாக கூறினார். கூறிய அடுத்த நிமிடம் அந்தப் பதிவு நீக்கப்பட்டு இருந்தது.
அவர் போட்ட பதிவு நீக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் போட்ட பதிவு சரியா என்ற கேள்வியினை ஆ. ராசா அவர்களிடம் முன்வைக்கின்றேன். பெண்களை அவமதித்து, கொச்சைப்படுத்தி தந்தை பெரியாரின் கொள்கைக்கு எதிராக நீங்கள் பதிவு போட்டு இருக்கிறீர்கள். ஒரு பெண் திருமணம் முடித்தால் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டு இருக்கிறாள் என்ற ஆணாதிக்க மனநிலையில் இருந்து அண்ணன் ஆ.ராசா பேசி இருக்கிறார். அவர் கொண்ட கொள்கையின் அடிப்படையில் உறுதியாக இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டார். நான் தனிநபர் அடிப்படையில் பேசவில்லை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறேன். அவர் தந்தை பெரியாரின் கோட்பாட்டையும், அண்ணல் அம்பேத்கர் கோட்பாட்டையும் புரிந்திருந்தால் இப்படி பேசி இருக்க மாட்டார்."
``சமூக வலைதளத்தில் இருந்த இந்த மோதல் களத்திலும் எதிரொலித்திருக்கிறது. குன்னம் பகுதியில் திமுக-விசிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதே?"
``இன்றைக்கு எங்கள் தலைவர் விரிவாக நேரலையில் பேசி இருக்கிறார். நாங்கள் இதனை தொடர விரும்பவில்லை. மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டோம். என்ற சூழ்நிலையிலும் அதற்கான வாய்ப்புகள் தரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு கூட. நாங்கள் மிகவும் நாகரிகமான அரசியலை முன்னெடுக்கிறோம். நடுவில் நீங்கள் சண்டைக்கு வா என்று கூப்பிட்டாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையில் இதெல்லாம் ஒரு சாதாரண செயலாக தான் நாங்கள் பார்க்கிறோம். இதனை எல்லாம் நாங்கள் கடந்து தான் வந்திருக்கிறோம். இதுபோன்ற சமயங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று எங்கள் தலைவர் வழிகாட்டி இருக்கிறார். குன்னம் பகுதியில் நடந்த அந்த சம்பவத்திற்கு ஆ.ராசா அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆ. ராசா அவர்கள் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டும்."

இதற்கு பின்னணியில் ஆர்.ராசா தான் இருக்கிறார் என நினைக்கிறீர்களா?
``எந்த திமுக தலைவராவது அவர் செய்தது சரி என்று யாராவது சொல்லி இருக்கிறார்களா. யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவ்வளவு பெரிய தவறை ஆ.ராசா அவர்கள் செய்திருக்கிறார். அவர் வகிக்கின்ற பதவிக்கு, அந்தப் பதவிக்கு களங்கம் ஏற்படும் அளவிற்கு தவறை செய்திருக்கிறார்."
``தேர்தலுக்கு முன்பு த.வெ.க-வை, வி.சி.க கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. எந்த கோட்பாட்டின் அடிப்படையில் நீங்கள் ஆட்சியில் பங்கெடுக்கிறீர்கள் என்று காமன்மேன் பல பேர் கேள்வி எழுப்புகிறார்கள்?"
``எங்களுடைய தலைவர் வைக்கின்ற விமர்சனமும், நான் வைக்கின்ற விமர்சனமும் தனிநபர் அடிப்படையானதாக இருக்காது. ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் தான் விமர்சனங்களை வைக்கின்றோம். யாரையும் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வதில்லை. இடதுசாரிகளோடு இணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதித் தன்மை தான் எங்களை த.வெ.க பக்கம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. கோட்பாட்டின் அடிப்படையில் இந்த அரசனை நடத்த முடியும் என்ற அடிப்படையில் தான் எங்களுடைய தலைவர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்."
``கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பங்கெடுக்க விரும்பவில்லை, வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் நிலைப்பாட்டினை உயர்த்தி விசிக நிலைப்பாட்டினை விமர்சனம் செய்கிறார்களே?"
``இந்த ஆட்சியை அமைப்பதற்கு ஆதரவு கொடுப்பதற்கும், அரசாங்கத்தின் உள்ளே அமைச்சரவில் பங்கெடுப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன என அகராதிகளில் தேடி யாராவது கூறினால் நான் இதை பற்றி பேசலாம். எல்லாவற்றையும் கோட்பாட்டின் அடிப்படையில்தான் பயணப்படுகின்றோம்.
எங்கள் கோட்பாட்டுக்கு முரண்பாடாக இருக்கும் பொழுது எங்களுடைய தலைவர் அது குறித்து கட்டாயம் பேசுவார். முரண்பாடு ஏற்படும் போது அதனை திருத்துவார், வழிநடத்துவார். மும்மொழிக் கொள்கையை கொண்டு வந்தால் நாங்கள் வரட்டும் என்று ஆதரிப்போமா என்ன, நிச்சயம் அப்படி செய்ய மாட்டோம்.
மக்கள் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதான நம்பிக்கையே சிதைத்து விட்டோம் என்றால், அவங்க கட்சியை கலகலத்து போக வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதற்காக தான் இது போன்ற குற்றச்சாட்டுகள், அவதூறுகள் பரப்புகிறார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் வலுவாக மாநில உரிமையை பேசக்கூடிய கட்சியாகவும், சனாதன எதிர்ப்பை முன்வைக்கக்கூடிய கட்சியாகவும், பாஜக ஆர்எஸ்எஸ் சங்கப் பரிவார கும்பலுடைய அஜெண்டாவை அம்பலப்படுத்தக்கூடிய கட்சியாகவும் விசிக உள்ளது."
``ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. அதில் எல்லாம் உங்களுடைய கவனம், செயல்பாடுகள் எப்படி இருக்கும்?"
``நான் அமைச்சரவையில் பங்கெடுப்பதற்கு முன்பே, நம்பிக்கை கோரும் தீர்மானம் வந்த பொழுது, சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தனிச்சட்டம் வேண்டும் என்று என்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தேன். நீண்ட காலமாக இந்த கோரிக்கையை நாங்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். இடதுசாரிகளும் இந்த கோரிக்கையை முன்வைக்கிறார்கள். அதன் அடிப்படையில் முன்னாள் நீதி அரசர் கே என் பாட்ஷா அவர்களுடைய தலைமையில ஒரு குழு போடப்பட்டது. அந்தக் குழு கொண்டுவந்த அறிக்கையை பெற்று அதனை நடைபாண்டிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம்.
முதலமைச்சர் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம். அதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் பேசுகின்றோம். ஏற்கனவே விழிப்பு, கண்காணிப்பு குழு கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் நடக்கும். அதனையும் நாங்கள் முன்னெடுத்து கொண்டு சென்றிருக்கிறோம். போகப் போக அதற்கான செயல் திட்டங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்."














