Dhanush: "தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்" - நடிகர் தனுஷ்
Dhanush: "தாய் மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்" - நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் சென்னை சாலிகிராமத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டித் தந்திருக்கிறார்.
அந்தக் கட்டடத்திற்கு 'தனுஷ் பிளாக்' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்தக் கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தனுஷ், அவருடைய சகோதரிகள், பேட்ச் மாணவர்கள், அவருடைய கிளாஸ்மேட்டும் ஒளிப்பதிவாளருமான ஏ.குமரன் ஆகியோர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இந்தத் திறப்பு விழாவில் பேசிய தனுஷ், "நான் நிறைய பேரைச் சந்திக்கிறேன். அவர்களில் பத்தில் எட்டு பேருக்கு தமிழ் எழுத படிக்க வருவதில்லை.
ஆனால் ஆங்கிலம் நன்றாகத் தெரிகிறது. அது மிகவும் வருத்தமான விஷயம். நான் பெல்ஜியத்தில் ஒரு ஃபிரஞ்சு படத்தில் நடித்தபோது ஆங்கிலம் தெரியுமா? எனக் கேட்டார்கள். நான் தெரியும் எனச் சொன்னதும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள்? எனக் கேட்டதும், உங்கள் தாய் மொழி தானே உங்களுக்குத் தெரிய வேண்டும், ஆங்கிலம் உங்களுக்கு போனஸ் தானே என்றார்கள். உங்களுடைய தாய் மொழிதான் உங்களுக்கு முதலில் தெரிய வேண்டும்.

பத்தில் எட்டு பேருக்கு தமிழ் எழுத படிக்க வருவதில்லை. தமிழ் வரவில்லை எனச் சொல்வது பெருமையான விஷயம் கிடையாது. தாய் மொழி தெரியவில்லை என்றால், அது அவமானம்தான். கண்டிப்பாக தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.


















