Gold Rate: இன்றும் குறைந்த தங்கம்; மாறாத வெள்ளி; இன்றைய தங்கம் விலை என்ன?
Doctor Vikatan: இதய நலனைத் தெரிந்துகொள்ள பரிசோதனை மட்டும் போதுமா?!
Doctor Vikatan: வருடந்தோறும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்க்கிறோம். மற்ற டெஸ்ட்டுகளை பொறுத்தவரை பிரச்னையில்லை. இதய நலனைப் பொறுத்தவரை, இசிஜி மட்டும் செய்கிறார்கள். அது மட்டுமே போதுமா... ஆஞ்சியோகிராம் தேவைப்படுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

இதயத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள பல பரிசோதனைகள் உள்ளன. டிரெட்மில் டெஸ்ட், இசிஜி, எக்கோ... என அவரவர் தேவைக்கேற்ப, மருத்துவர் பரிசோதனையைப் பரிந்துரைப்பார். மிகவும் எளிமையான டெஸ்ட் என்பதால் பலரும் இசிஜி பரிசோதனையைச் செய்து பார்க்கிறார்கள். இதில் சில விஷயங்கள் தெரியும், சிலது தெரியாது.
'வருடம் தவறாமல் நான் இசிஜி டெஸ்ட் செய்து பார்த்துவிடுகிறேன்... என் இதயம் நன்றாக இருக்கிறது' என சிலர் அதை மட்டுமே செய்து கொண்டிருப்பது சரியானதல்ல. அதே மாதிரிதான் எக்கோ டெஸ்ட்டும். அதைச் செய்கிறபோது இதயத்தின் பம்ப்பிங் திறன் எப்படியிருக்கிறது என்று தெரியும். ஆனால், ரத்தக் குழாய்கள் எப்படியிருக்கின்றன என்பது எக்கோ டெஸ்ட்டில் தெரியாது. மருத்துவர் சந்தேகப்பட்டால் டிரெட்மில் டெஸ்ட் செய்யச் சொல்வார். எனவே, யாருக்கு, எந்த டெஸ்ட் என்பதை மருத்துவரிடம் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்யப்படும். ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது இசிஜியில் உறுதிசெய்யப்பட்டால், உடனே ஆஞ்சியோகிராம் வழியே அடைப்பைத் திறக்க வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸ் டெஸ்ட் மற்றும் டிரெட்மில் டெஸ்ட்டுகளில் அப்நார்மல் என வந்தாலும் உடனே ஆஞ்சியோகிராம் தேவைப்படலாம். மாரடைப்புக்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரியும்போது, மருத்துவர் உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்ய அறிவுறுத்துவார்.

ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பும் எல்லோருமே 40 ப்ளஸ்ஸில் ஆஞ்சியோகிராம் செய்துபார்க்கலாமா என சிலர் கேட்பதுண்டு. ஆஞ்சியோகிராம் என்பது ரத்தக்குழாய்களின் வழியே ஒருவித டையை செலுத்திச் செய்யப்படுகிற சிகிச்சை. துல்லியமான அறிகுறிகள் இருக்கும்போது இதைச் செய்தால் அடைப்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். 30 சதவிகித அடைப்பு இருப்பது தெரிந்தால், வருடா வருடம் அந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆஞ்சியோகிராம் செய்து பார்க்க வேண்டியதில்லை. 30 சதவிகித அடைப்பு இருந்தால் அது மேலும் அதிகமாவதை எப்படித் தவிர்க்கலாம் என்றுதான் மருத்துவர் யோசிப்பார். ரத்தச் சர்க்கரை அளவையும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தினமும் வேகமான நடைப்பயிற்சி செய்கிற ஒரு நபருக்கு ஆஞ்சியோகிராம் அவசியமில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















