சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோத...
Doctor Vikatan: பிரசவித்த பெண்களுக்கு பத்திய உணவு... ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தாதா?
Doctor Vikatan: பிரசவத்திற்குப் பிறகு கிராமங்களிலும் நகரங்களில் சிலரும் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
பத்தியச் சாப்பாடு கொடுப்பது பிரசவித்த பெண்களுக்கு உண்மையிலேயே ஆரோக்கியமானதா அல்லது அது ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்
பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு பத்திய உணவு கொடுப்பது என்பது நம்மிடையே நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கம்தான். ஆனால், பொதுமக்களிடையே 'பத்தியம்' என்றாலே அது சத்துகள் குறைந்த அல்லது மிகக் குறைவாகச் சாப்பிடக்கூடிய உணவு என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது.
உண்மையில், பிரசவத்திற்குப் பிந்தைய உணவியல் என்பது தாயின் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. ஒவ்வொரு பருவ வயதினருக்கும் தனித்தனி உணவியல் இருப்பது போல, பிரசவித்த பெண்களுக்கும் பிரத்யேக உணவியல் உள்ளது.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை, பிரசவித்த பெண்களுக்குப் பல வகையான லேகியங்கள் (உதாரணத்துக்கு, பிரசவ லேகியம்) பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த லேகியங்கள் கர்ப்பப்பையின் நிலையை விரைவாகப் பழையபடி சுருக்குவதற்கு உதவுகின்றன.
பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையில் தங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் முழுமையாக வெளியேறப் பயன்படுகின்றன. பிரசவத்தின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்த இழப்பு மற்றும் உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு மீண்டும் ஊட்டமளிக்கின்றன.
கிராமப்புறங்களில் பிரசவித்த பெண்களுக்கு ஊட்டக்கஞ்சி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதற்கான குறிப்புகள் சித்த மருத்துவத்திலும் காணப்படுகின்றன. இதில் பருப்பின் சாரங்கள் பிரதானமாக இருப்பதால், இந்தக் கஞ்சி புரதச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
செரிமான மண்டலத்திற்கு எந்தவித கடினமான வேலையையும் தராமல், மிக எளிதாகச் செரிமானமடையும் தன்மையைக் கொண்டது. கடினமான உணவுகள் உடலுக்கு மிக மெதுவாகவே ஆற்றலைத் தரும். ஆனால், இந்தக் கஞ்சி வகைகள் தேவையான ஆற்றலை உடனடியாக திசுக்களுக்கு வழங்கி உடம்பைத் தேற்றுகின்றன.

பத்தியக் கஞ்சியில் மிளகு சேர்த்துச் செய்வார்கள். பிரசவத்திற்குப் பின் உடல் சற்று குளிர்ந்து (சில்லென்று) இருக்கும் என்பதால், மிளகு சேர்ப்பது உடலுக்குத் தேவையான மிதமான வெப்பத்தைத் தரும்.
பிரசவித்த பெண்களுக்குக் கொடுக்கப்படும் உணவுகளில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய நெய் - பருப்பு சாதம் போன்ற உணவுகளும் அடங்கும்.
பத்திய உணவுகள் தாயின் உடல்நிலையைச் சீராக்குவதுடன், குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. இதற்காகத்தான் பால் சுறா மீன், கருவாடு போன்ற உணவுகளைப் பிரசவித்த பெண்களுக்குக் கொடுப்பார்கள்..
எனவே, பிரசவ கால பத்திய உணவு என்பது எக்காரணத்தைக் கொண்டும் சத்துக்குறைவான உணவு அல்ல. அது தாயின் செரிமானத்தை மேம்படுத்தி, உடனடி ஆற்றலைத் தந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, தாயும் சேயும் நலமுடன் இருக்கச் செய்யும் உன்னதமான உணவியல் முறை என்பதைப் புரிந்துகொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















