"இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே நோக்கம்"- சாண்ட்னரின் சர்ச்சை கருத்து; சூர்...
Doctor Vikatan: Soap அல்லது Syndet bar... சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்?
Doctor Vikatan: காலங்காலமாக நம்மில் பலரும் குளிப்பதற்கு சோப்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், சோப் பயன்படுத்தவே கூடாது, அது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும் என்றும், அதற்கு பதிலாக சிண்டெட் பார் என்பதையே பயன்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு வீடியோவில் பார்த்தேன். அதென்ன சிண்டெட் பார்.... சோப்புக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்.... இந்த இரண்டில் எது பெஸ்ட்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் தில்லைக்கரசி.

சருமத்துக்கு சோப் பயன்படுத்தலாமா அல்லது சிண்டெட் பார் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. முதலில் இவை இரண்டும் என்ன, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும் டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.
இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள 'ஆசிட் மேன்ட்டில்' (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடுகள் (ஆன்டி மைக்ரோபியல் பெப்டைடு) மற்றும் ஈரப்பதமூட்டும் காரணிகள் (மாய்ஸ்ச்சரைசிங் ) உள்ளன. சோப் உபயோகிக்கும்போது இவையும் சேர்ந்து நீக்கப்படும்.

சோப்பில் உள்ள அதிக பிஹெச் அளவு காரணமாக, இது சருமத்தில் எரிச்சலை (Irritation) உண்டாக்க வாய்ப்புள்ளது. நார்மலான சருமம் கொண்டவர்களுக்கு சோப் உபயோகிப்பதால் சருமம் வறட்சியடையலாம். ஏற்கெனவே வறண்ட சருமம் (Dry skin) உள்ளவர்கள் சோப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சரும வறட்சி மேலும் தீவிரமாகி, அரிப்பு ஏற்பட்டு சருமத்தின் பாதுகாப்புத் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
சிண்டெட் பார் (Syndet bar) என்பது வேதியியல் ரீதியாகத் தயாரிக்கப்படுகிற சுத்திகரிப்புப் பொருள். நமது சருமத்தின் பிஹெச் அளவானது 4.5 முதல் 5.5 வரை இருக்கும். இந்த பிஹெச் அளவுக்கேற்றபடி, சிண்டெட் பார் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான நறுமணங்களோ அல்லது தேவையற்ற எண்ணெய்களோ சேர்க்கப்படுவதில்லை. சிண்டெட் பார் பயன்படுத்தும்போது சருமத்தின் பாதுகாப்பு படலம் தக்க வைக்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சோப்பைவிட சிண்டெட் பாரே சிறந்தது. இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் எரிச்சலைத் தவிர்க்கவும் பெரிதும் உதவுகிறது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















