செய்திகள் :

E20 எத்தனால் பெட்ரோல்: வண்டிகளையே காலி பண்ணுதா? - உரிமையாளர்கள் புலம்பல், அரசு சொல்வது என்ன?

post image

`இதன் பெட்ரோல் தீர்ந்தே போவதில்லை' - மாருதி சுஸுகியின் இந்த விளம்பர வாசகங்கள் இந்திய வாகன ஓட்டிகளின் மனதோடு பின்னிப் பிணைந்தவை. ஒரு வாகனம் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதுதான் அதன் மதிப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணி. பல தசாப்தங்களுக்கு முன் ஹீரோ ஹோண்டாவின் "ஃபில் இட், ஷட் இட், ஃபர்கெட் இட்" விளம்பர பிரசாரமும் இதே உணர்வைத்தான் அடித்தளமாகக் கொண்டிருந்தது.

அதிக மைலேஜ் தரும் வாகனங்களே இங்கு 'கிங்'. ஆனால், அரசின் புதிய எத்தனால் கலப்புத் திட்டம் இந்த 'மைலேஜ் கிங்'களின் சிம்மாசனத்தையே அசைத்துப் பார்க்கிறதா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.

E20 Fuel

அப்படி என்னதான் நடந்தது? இந்திய அரசு, பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை, நிர்ணயிக்கப்பட்ட 2030-ஆம் ஆண்டுக்கு 5 ஆண்டுகள் முன்னதாகவே, அதாவது கடந்த ஆண்டே நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டது. இப்போது நாம் பெட்ரோல் பங்குகளில் நிரப்பும் சாதாரண பெட்ரோல் என்பது E20 எரிபொருள் தான் (80% பெட்ரோல், 20% எத்தனால்).

முன்பு 10% ஆக (E10) இருந்த எத்தனால் கலப்பு, வெறும் மூன்று ஆண்டுகளில் 20% ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக E10 தரச்சான்றிதழுடன் தயாரிக்கப்பட்ட பழைய கார்கள் மற்றும் பைக்குகளை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு இது ஒரு பெரிய இடியாக இறங்கியுள்ளது. போதிய அவகாசம் இல்லாமல் அமல்படுத்தப்பட்ட இந்த மாற்றத்தால், தங்கள் வாகனங்களின் மைலேஜ் கடுமையாகக் குறைந்துவிட்டதாகப் பலரும் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

புதிய E20 பெட்ரோலால் அப்படி என்னதான் பிரச்னை?

முக்கியமாக மூன்று சிக்கல்கள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவது, எரிபொருள் செயல்திறன் (Fuel Economy) கணிசமாகக் குறைவது. உங்கள் வாகனம் எப்போது தயாரிக்கப்பட்டது என்பதைப் பொறுத்து, மைலேஜில் பெரிய வீழ்ச்சி தெரிகிறது.

இரண்டாவதாக, எத்தனாலுக்கு நீரை ஈர்க்கும் தன்மை (Hygroscopic Nature) உண்டு. இதனால், E20 எரிபொருளைப் பழைய இன்ஜின்களில் பயன்படுத்தும்போது, சில உலோக மற்றும் ரப்பர் பாகங்களில் அரிப்பு (Corrosion) ஏற்பட்டு, அவை சேதமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மூன்றாவதாக, பிரேசில் போன்ற நாடுகளில் இருப்பது போல, வெவ்வேறு எத்தனால் கலப்பு விகிதங்களைக் கொண்ட எரிபொருட்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்போ, அதிக எத்தனால் கலப்புக்கு ஏற்ப விலை குறைப்போ இந்திய நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை. மைலேஜ் குறைந்தாலும், அதே விலையைக் கொடுத்து எரிபொருளை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.

E20 Blend Gasoline

அறிவியல் ரீதியாக இது நல்லதா, கெட்டதா?

வேதியியல் பார்வையில், எத்தனால் கலப்பது ஒரு நல்ல விஷயம்தான். பெட்ரோலுடன் ஒப்பிடும்போது எத்தனாலில் கார்பன் அளவு குறைவு. இதனால், வாகனம் வெளியிடும் புகையில் கார்பன் டை ஆக்சைடு அளவு குறையும். மேலும், எத்தனாலின் ஆக்டேன் எண் (Octane Number) மிகவும் அதிகம் (சுமார் 108 RON).

இது இன்ஜினுக்குள் எரிபொருள் சீராகவும் முழுமையாகவும் எரிய உதவும். இதன் காரணமாகவே, உயர் செயல்திறன் கொண்ட பந்தயக் கார்களில் எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இங்குதான் ஒரு ட்விஸ்ட். எத்தனாலின் கலோரிஃபிக் மதிப்பு (Calorific Value), அதாவது ஆற்றலை உருவாக்கும் திறன், பெட்ரோலை விட சுமார் 30% குறைவு. எளிமையாகச் சொன்னால், அதே அளவு எரிபொருள், குறைவான சக்தியையே கொடுக்கும். இதுதான் மைலேஜ் குறைவுக்கு அடிப்படைக் காரணம்.

அரசு மற்றும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்வது என்ன?

எரிபொருள் இறக்குமதியைக் குறைப்பது, உள்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு உதவுவது, மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது போன்ற காரணங்களுக்காகவே எத்தனால் கலப்பை ஊக்குவிப்பதாக அரசு கூறுகிறது. அரசின் கீழ் இயங்கும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI), E20 எரிபொருளால் வாகனங்களின் உலோகப் பாகங்களுக்குப் "குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை" என்று ஆய்வறிக்கை கொடுத்துள்ளது.

ஆனால், ARAI கொடுக்கும் மைலேஜ் புள்ளிவிவரங்கள் நிஜ உலக ஓட்டுதல் சூழ்நிலையில் இருந்து எவ்வளவு மாறுபடும் என்பது நாம் அறிந்ததே. வாகனங்கள் சேதமடைவதாகப் பரவும் காணொளிகள் ஆதாரமற்றவை என்றும் அரசு நிராகரிக்கிறது.

மைலேஜ்

வாகனத் தயாரிப்பாளர்களோ, வெளிப்படையாக E20-ஆல் பெரிய சிக்கல் இல்லை என்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் பேசும்போது, மைலேஜ் குறைவு என்பது நிஜம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், அரசு திட்டமிடும் அடுத்தகட்டமான E25 (25% எத்தனால்) கலப்புக்கு மாறும்போது, பழைய வாகனங்களில் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கவலை தெரிவிக்கின்றனர். புதிய E25-க்கு ஏற்றவாறு இன்ஜின்களை மறுவடிவமைப்பு செய்து, மீண்டும் சான்றிதழ் (Homologation) பெற வேண்டும். இதனால் வாகனங்களின் விலை உயரும், அந்தச் சுமையும் இறுதியில் நுகர்வோர் தலையில்தான் விழும்.

எத்தனால் கலப்புத் திட்டத்தில் பல தசாப்தங்களாக முன்னணியில் இருக்கும் பிரேசில், இதை எப்படிச் சிறப்பாகச் செய்கிறது? அங்குள்ள ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும், நுகர்வோருக்கு ஒரு தேர்வு உண்டு. அவர்கள் 27% எத்தனால் கலந்த பெட்ரோலையோ அல்லது 100% எத்தனால் கொண்ட E100 எரிபொருளையோ தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். E100 எரிபொருளின் விலை, சாதாரண பெட்ரோலை விட 30% வரை குறைவாக இருக்கும். இதனால், மைலேஜ் குறைந்தாலும் பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது. ஆனால், இந்தியாவில் அந்த வாய்ப்பே இல்லை என்பதுதான் நுகர்வோரின் மிகப்பெரிய ஆதங்கம்.

மொத்தத்தில், அரசின் நோக்கம் சரியாக இருந்தாலும், அதை அவசரமாக அமல்படுத்திய விதம்தான் சிக்கலை உருவாக்கியுள்ளது. மைலேஜ் குறைவு, பழைய வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கவலை, தேர்வு செய்யும் வாய்ப்பின்மை என அனைத்துச் சுமைகளும் நுகர்வோர் மீதே திணிக்கப்பட்டுள்ளன. 'மைலேஜ் கிங்'களாக வலம் வந்த வாகனங்கள், இப்போது பெட்ரோலை அதிகம் குடிப்பதைப் பார்த்து உரிமையாளர்கள் புலம்புவது நாடு தழுவிய யதார்த்தமாக மாறியுள்ளது.!

டாடா டியாகோவின் 10 ஆண்டுக்கால பயணம்: அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் டாடா மோட்டர்ஸ் CTO!

டாடா டியாகோ நாட்டில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய சாலைகளில் ஏழு லட்சம் டாடா டியாகோ கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டாடா மோட்டர்ஸின் CTO விவேக் ஶ்ரீவத்சவ் உடன் இந்த நீண்ட... மேலும் பார்க்க

கி.மீ-க்கு ரூ.8, AI கண்காணிப்பு கேமரா.. 7 சீட்டரில் அட்டகாசமான சொகுசு டாக்ஸி - டெல்லியில் அறிமுகம்!

டெல்லி-என்.சி.ஆர் சாலைகளில் இனி சத்தம் இல்லாமல் ஒரு எலக்ட்ரிக் புரட்சி நடக்கப்போகிறது. இந்தியாவின் டாக்ஸி சந்தையில் நீண்டகாலமாக முன்னணியில் இருக்கும் ஓலா, உபெர் நிறுவனங்களுக்குப் போட்டியாக, வியட்நாம் ... மேலும் பார்க்க

ஜீப் (Jeep) பெயர் எப்படி வந்தது? ஒரு வரலாற்றுப் பார்வை! - இது தெரியாமப் போச்சே? - 27

உலக வாகன வரலாற்றில், ஒரு சாதாரண போர் வாகனமாகத் தொடங்கி, இன்று சாகசப் பயணிகளின் அடையாளமாக மாறியிருக்கும் மிக முக்கியமான வாகனத்தின் பெயர் 'ஜீப்' (Jeep). 'ஜெனரல் பர்ப்பஸ்' (General Purpose) என்பதன் சுருக... மேலும் பார்க்க