கடலூர்: கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் திட்டம்; அரசுக்கு அன்புமணியி...
கி.மீ-க்கு ரூ.8, AI கண்காணிப்பு கேமரா.. 7 சீட்டரில் அட்டகாசமான சொகுசு டாக்ஸி - டெல்லியில் அறிமுகம்!
டெல்லி-என்.சி.ஆர் சாலைகளில் இனி சத்தம் இல்லாமல் ஒரு எலக்ட்ரிக் புரட்சி நடக்கப்போகிறது. இந்தியாவின் டாக்ஸி சந்தையில் நீண்டகாலமாக முன்னணியில் இருக்கும் ஓலா, உபெர் நிறுவனங்களுக்குப் போட்டியாக, வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன ஜாம்பவானான 'வின்குரூப்' தனது டாக்ஸி சேவையான 'கிரீன் எஸ்.எம் லிமோ' திட்டத்தை டெல்லியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு 'புளூஸ்மார்ட்' டாக்ஸி சேவை நிறுத்தப்பட்ட பிறகு, சொகுசான எலக்ட்ரிக் டாக்ஸிக்காகக் காத்திருந்த டெல்லி மக்களுக்கு, சுமார் 1,000 கார்களுடன் இந்த வியட்நாம் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

இந்த புதிய டாக்ஸி சேவை, பயணிகள் வழக்கமாகச் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமைந்திருக்கிறது. பொதுவாக மற்ற டாக்ஸி செயலிகளில் அதிக டிராஃபிக் அல்லது மழை நேரத்தில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திவிடுவார்கள். ஆனால், இந்த டாக்ஸியில் அப்படி இருக்காது; ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ₹8 என்ற நிலையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
மேலும், ஓட்டுநர்கள் சவாரியை திடீரென ரத்து செய்யும் தொந்தரவும் இதில் இருக்காது. இதில் ஓடும் அனைத்து கார்களும் நிறுவனத்திற்கே சொந்தமானது என்பதால், காரின் தூய்மையும், ஏசி வசதியும் எப்போதும் தரமாகப் பராமரிக்கப்படும்.
இந்தச் சேவைக்காக வியட்நாமின் புகழ்பெற்ற எலக்ட்ரிக் காரான 'வின்பாஸ்ட் லிமோ கிரீன்' (VF 7 மாடல்) பயன்படுத்தப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இது பெரிய குடும்பங்கள் மற்றும் ஏர்போர்ட் செல்லும் பயணிகள் தாராளமாக அமர்ந்து செல்லும் வகையிலான 7-சீட்டர் சொகுசு காராகும்.

இதில் உள்ள சக்திவாய்ந்த பேட்டரி மூலம், ஒரே சார்ஜில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். சாலைகளில் எளிதாக அடையாளம் காணும் வகையில், இந்தக் கார்கள் தனித்த நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக காரின் உள்ளேயும் வெளியேயும் AI கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் எமர்ஜென்சி பட்டன்கள் உள்ளன. மேலும், காரின் உள்ளே பயணிகளுக்கு இலவச குடிநீர் பாட்டில் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.
வின்பாஸ்ட் நிறுவனம் தனது எலக்ட்ரிக் கார்களை இந்தியச் சந்தையில் நேரடியாக விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு முன்பாக, இந்த டாக்ஸி சேவை மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்குத் தன் காரின் தரத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. டெல்லி அமைச்சர்களால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்தச் சேவை, டெல்லியின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதோடு, மக்களுக்கு ஒரு நிம்மதியான பயணத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















