Fengal Cyclone: கரையைக் கடந்து புதுச்சேரியில் நிலைகொண்ட புயல்; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு 11:30 மணியளவில் கரையைக் கடந்தது. இந்த நிலையில், கரையைக் கடந்த புயல் தற்போது புதுச்சேரியில் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்துப் பேசியிருக்கும் வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன், `` ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில் நேற்று மாலை 5:30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கி நேற்றிரவு 10:30 மணிக்கும் 11:30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. தொடர்ந்து அது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு சுமார் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த 3 மணி நேரத்தில் பெரும்பாலும் நகராமல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிக கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. புதுச்சேரியில் 46 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது." என்று கூறினார். மேலும், வானிலை மைய அறிக்கையின்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் அப்படியே தொடர்கிறது." என்று தெரிவித்தார்.