Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக இணையத்தில் ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.

முதல் போட்டியின் மூன்றாவது நாளான இன்று (நவம்பர் 16) இந்திய அணி 125 ரன்கள் இலக்கைத் துரத்த முடியாமல் தோல்வி அடைந்ததால் 1-0 என தொடரில் பின் தங்கியிருக்கிறது. கொல்கத்தாவின் சர்ச்சைக்குரிய பிட்சில் ஹோஸ்ட்கள் சைமன் ஹார்மர் (4/30) மற்றும் மார்கோ ஜான்சன் (3/35) பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரணடைந்துள்ளனர்.
ஈடன் கார்டன் பிட்சில் இரண்டாம் நாள் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தது முதல் கிரிக்கெட் உலகில் பேச்சுப்பொருளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈடன் கார்டன் பிட்சின் தன்மைக் குறித்து ரசிகர்கள் அதிருப்தியுடன் கேள்வி எழுப்பியபோதும், கௌதம் கம்பீர் இதுவே தாங்கள் கேட்டது தேவையான ஆடுகளம் என்றும் பேட்ஸ்மேன்கள் சவாலை எதிர்கொள்ளத் தவறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
Gautam Gambhir என்ன கூறினார்
போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில், "இது விளையாட முடியாத விக்கெட் அல்ல. இது (பிட்ச்) நாங்கள் கேட்டதுதான், இதுதான் எங்களுக்குக் கிடைத்தது, இங்குள்ள கியூரேட்டர் (சுஜன் முகர்ஜி) மிகவும் ஆதரவாக இருந்தார். நன்றாக டிபன்ஸ் விளையாடியவர்கள் ரன்கள் எடுத்ததால், இது உங்கள் மன உறுதியை மதிப்பிடக்கூடிய ஒரு விக்கெட் என்று நான் நினைக்கிறேன்." எனப் பேசியிருந்தார்.
மேலும், பிட்சில் எந்த பிசாசும் இல்லை, வேகப்பந்து அதிக விக்கெட் வீழ்த்தியது வீச்சாளர்களே என்றவாரும் பேசியுள்ளார்.
"நாங்கள் தேடிக்கொண்டிருந்த ஆடுகளம் இதுதான். இதில் பேய்களோ அல்லது விளையாட முடியாத வகையிலோ இல்லை. அக்சர், டெம்பா, வாஷிங்டன் ஆகியோர் ரன்கள் எடுத்தனர். இது பந்து திரும்பும் வகையிலான விக்கெட் என்று நீங்கள் சொன்னால், பெரும்பாலான விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர்.
நாங்கள் வென்றிருந்தால், பிட்ச் பற்றி இவ்வளவு கேட்கவோ விவாதிக்கவோ மாட்டீர்கள். எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்பட எங்களிடம் வீரர்கள் உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
கம்பீரின் கருத்துகளை இந்திய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே சமூக வலைத்தளங்கள் காட்டுகின்றன. ரசிகர்கள் அவரது பதவிக்காலத்தில் டெஸ்டில் ஏற்பட்டுள்ள மோசமான சாதனையைக் குத்திக் காட்டுகின்றனர்.
கம்பீர் பயிற்சியாளரான பிறகு இந்திய அணி விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 7-ல் வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இரண்டு போட்டிகள் சமன் செய்யப்பட்டுள்ளன. அடுத்த வரும் இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் அதிக அழுத்தத்துடன் இரண்டாவது போட்டியை எதிர்கொள்வார் கௌதம் கம்பீர்.


















