செய்திகள் :

India AI Summit 2026: ஏ.ஐ வந்தால் அரசியல்வாதிகளின் வேலை பறிபோகுமா? - ஒரு ஜாலி ரிப்போர்ட்!

post image

டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏ.ஐ உச்சி மாநாடு பாரத மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. உலகில் இப்போது எங்கு திரும்பினாலும் ஏ.ஐ... ஏ.ஐ... என்ற சத்தம்தான் கேட்கிறது. உலகத் தலைவர்கள் எல்லாம் கூடி, "இந்த ஏ.ஐ-யால் மனிதர்களுக்கு வேலை போய்விடுமோ?" என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் முதல் கண்டக்டர்கள் வரை எல்லோருக்கும் அந்த பயம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கும் ஒரே கூட்டம் நம் அரசியல்வாதிகள்தான்.

ஏன் தெரியுமா? "எங்களை ரீப்ளேஸ் பண்ண அந்த ஆண்டவனாலயே முடியாது, இதுல அல்காரிதம் எம்மாத்திரம்?" என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான்!

இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் இல்லையா? அதனால், நம் அரசியல்வாதிகளுக்கு உதவும் வகையில் சில பிரத்யேக AI Tools அறிமுகப்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்... சின்ன கற்பனை!

gemini AI
gemini AI

கூட்டணி கால்குலேட்டர்

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை, எந்தக் கட்சியோடு சேர்ந்தால் எத்தனை சீட் கிடைக்கும், டெபாசிட் போகுமா என்று குழம்பத் தேவை இல்லை. இந்த AI, காலை 6 மணிக்கே, "இன்னைக்கு இந்தக் கட்சியோட சேருங்க, நாளைக்கு அந்தக் கட்சியோட சேருங்க" என்று துல்லியமாகச் சொல்லலாம்.

ஊழல் ஸ்கேனர்

"எவ்வளவு அடித்தால் மாட்டிக்கொள்ள மாட்டோம்?" என்று கணக்கு போடுவது கஷ்டம். இந்த AI, உங்கள் வருமானம், அமலாக்கத்துறையின் (ED) தற்போதைய வேகம், நீதித்துறையின் தாமதம் ஆகியவற்றை கணக்கிட்டு, "சார், இந்த டெண்டர்ல 10% ஓகே, அதுக்கு மேல போனா திஹார் ஜெயில்தான்" என்று எச்சரிக்கலாம்.

இதுபோல் யாராவது டூல்களை அரசியல்வாதிகளுக்கு கண்டுபிடித்து கொடுக்கலாம்.

AI வந்தால் அரசியல்வாதிகளின் வேலை பறிபோகுமா? என்று கேட்டால் வாய்ப்பே இல்லை ராசா தான்!

ஏனென்றால், AI என்பது 'லாஜிக்' மற்றும் 'டேட்டா' அடிப்படையில் இயங்குவது. ஆனால் இந்திய அரசியல் என்பது 'மேஜிக்' மற்றும் 'எமோஷன்' அடிப்படையில் இயங்குவது.

ஒரு ரோபோவிடம் போய், "இல்லாத ஆத்துக்குப் பாலம் கட்டுவேன்" என்று சொல்லச் சொன்னால், "Error 404: Logic Not Found" என்று சொல்லி வெடித்துச் சிதறிவிடும். ஆனால், நம் அரசியல்வாதிகள் அதைச் சொல்லி ஓட்டு வாங்குவார்கள்.

gemini AI
gemini AI

தேர்தல் நேரத்தில் குடிசைப் பகுதிக்குச் சென்று, கையில் குழந்தையை வாங்கி கொஞ்சுவது போலவும், ரோட்டுக்கடை டீயைக் குடிப்பது போலவும் நடிக்க AI-யால் முடியாது. அதற்கு 'பேட்டரி' தான் முக்கியம், பிரியாணி அல்ல.

சீட் வாங்குவதற்காகத் தலைமை இடும் கட்டளைக்கு ஏற்ப டயரில் விழுவதோ, காரின் பின்னால் ஓடுவதோ ரோபோக்களுக்குச் சாத்தியமில்லை.

ஆகவே, எப்பேர்ப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் வந்தாலும், வெள்ளை வேட்டிகளை வீழ்த்த முடியாது.

AI வந்தால் அரசியல்வாதிகள் ஸ்மார்ட் ஆவார்களா?

இதுதான் இருப்பதிலேயே பெரிய ஜோக். தொழில்நுட்பம் வளர்ந்தால் அரசியல்வாதிகள் வளர்வார்கள் என்று நினைப்பது, "ஜிம்முக்குப் போனா சிக்ஸ் பேக் வரும்" என்று நினைப்பது போன்றது.

உண்மையில் அரசியல்வாதிகள் ஸ்மார்ட் ஆக மாட்டார்கள்; அவர்கள் AI-யையே கெடுத்து விடுவார்கள்.

நீங்கள் ஒரு AI ரோபோவை அரசியல்வாதிக்கு உதவியாளராக அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்தில் அந்த ரோபோ என்ன செய்யும்?

gemini AI
gemini AI

* சிக்னலில் நிற்காமல் போகும்.

* போலீஸ் பிடித்தால், "நான் யாருன்னு தெரியுமா? நான் மினிஸ்டரோட லேப்டாப்!" என்று மிரட்டும்.

* "சார்ஜ் போட கரன்ட் இல்லையா? பரவாயில்லை, பக்கத்து வீட்டுல இருந்து திருடு" என்று ஐடியா கொடுக்கும்.

* கடைசியில் அந்த AI, "எனக்கு சம்பளம் வேண்டாம், கமிஷன் மட்டும் கொடுங்க" என்று கேட்கும் அளவுக்கு மாறிவிடும்.

சாதகங்களும் பாதகங்களும் (Pros & Cons)

* "அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே..." என்று ஆரம்பித்து மணிக்கணக்கில் பேச இனி ரைட்டர் தேவையில்லை. "டாபிக்: தக்காளி விலை உயர்வு, டார்கெட்: மத்திய அரசு" என்று டைப் செய்தால் போதும், அடுக்குமொழி வசனம் தானாக வரும்.

* டீப் ஃபேக் (Deep Fake): ஒரிஜினலாகவே தேர்தல் பிரசாரத்திற்குப் போக வேண்டாம். தலைவரின் உருவத்தை வைத்து ஒரு வீடியோவை உருவாக்கி, எல்லா வாட்ஸ்அப் குரூப்பிலும் அனுப்பிவிடலாம். தலைவர் வீட்டில் படுத்துத் தூங்கலாம்.

gemini AI
gemini AI

தவறுதலாக AI உண்மையை உளறிவிட வாய்ப்பு அதிகம். "தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்வீர்களா?" என்று கேட்டால், "அதெல்லாம் சும்மா லுலுலாயிக்குச் சொன்னது" என்று AI உண்மையைச் சொல்லித் தொலைத்துவிடும்.

ஹேக்கிங் பயம்: எதிர்க்கட்சிக்காரர்கள் ஆளுங்கட்சியின் AI-யை ஹேக் செய்து, முதலமைச்சர் பேசுவது போலவே, "என்னை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்" என்று டப்பிங் பேசிவிடலாம். இது பெரும் குழப்பத்தை விளைவிக்கும்.

தொழில்நுட்பம் வளரலாம், செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடலாம். ஆனால், "அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே" என்று பாட்டுப் பாடி ஓட்டு கேட்பதையும், "இந்தி தெரியாது போடா" என்று டீ-ஷர்ட் போடுவதையும் எந்த அல்காரிதமும் டிசைன் செய்ய முடியாது.

gemini AI
gemini AI

ஆகவே, டெல்லியில் நடக்கும் ஏ.ஐ மாநாட்டைப் பார்த்து ஐடி ஊழியர்கள் வேண்டுமானால் பயப்படலாம். ஆனால், நம் அரசியல்வாதிகள் ஒரு ஓரமாக நின்று, "தம்பி, அந்த ரோபோட்டுக்கு நம்ம கட்சிக் கரையோட ஒரு துண்டு போர்த்தி, உறுப்பினர் அட்டை கொடுப்பா... அடுத்த எலக்‌ஷன்ல அதுதான் பூத் ஏஜென்ட்!" என்று சொல்வார்கள்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க செயற்கை நுண்ணறிவு.