Celebrities share their memories with AVM Saravanan at his funeral | Cinema Vika...
MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!
உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்குவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
MH370 விமானத்துக்கு என்ன ஆனது?
2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, தோராயமாக 12.40 மணியளவில் (மலேசிய நேரப்படி) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேருடன் புறப்பட்டது அந்த போயிங் 777 ரக விமானம்.

ஆனால் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் புறப்பட்ட MH 370, பறக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள், அதாவது மலேசிய நேரப்படி காலை 1:20 மணிவாக்கில் கடைசியாக விமான போக்குவரத்து அதிகாரிகளோடு தொடர்பு கொண்டது. அப்போது MH 370 தென் சீனக் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தது. சில நிமிடங்களில் ராணுவ ரேடாரிலிருந்தும் மாயமானது. எவ்வித தடயமும் இல்லை.
21ஆம் நூற்றாண்டில் மனித வளர்ச்சியின் உச்சமாகக் கருதப்படும் செயற்கைக் கோள், தொழில்நுட்பம் என எல்லாவற்றையும் கேள்விக்கும் கேலிக்கும் உட்படுத்தியது ஒரு விமானம். இதுகுறித்து நெட்ஃப்ளிக்ஸில் ஆவணப்படம் கூட உருவாக்கப்பட்டது.
இந்தப் பயணத்தில் மாயமானவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சீன நாட்டவர்கள். மற்றவர்கள் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் விமானம் மாயமானதற்கான காரணம் தெரியவில்லை என்று 495 பக்க அறிக்கை சமர்பித்திருந்தனர். மேலும், விமானிகள் அல்லாத வேறு யாரேனும் திட்டமிட்டு விமானத்தை அதன் பாதையிலிருந்து திசை திருப்பி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் அப்போது எழுப்பியிருந்தனர்.

ஆனால், விமானம் திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி, தெற்கு நோக்கிப் பயணித்து, தொலைதூரத்தில் உள்ள தென்னிந்தியப் பெருங்கடலை நோக்கிச் சென்றதை செயற்கைக்கோள் தரவுகள் காட்டின. அங்கேயே எரிபொருள் தீர்ந்து விமானம் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
தேடுதல் பணிகள்
ஆரம்பத்தில் ஆஸ்திரேலியா தலைமையிலான தேடுதல் நடவடிக்கையில், மூன்று ஆண்டுகளில் 120,000 சதுர கிலோமீட்டர் (46,300 சதுர மைல்கள்) கடற்பகுதி ஜல்லடை போட்டு சலித்தது போல அலசி ஆராயப்பட்டது. மொசாம்பிக், மடகாஸ்கர், ரீயூனியன் தீவு போன்ற கிழக்கு ஆப்பிரிக்க மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளின் கடலோரப் பகுதிகளில் சில உடைந்த பாகங்கள் மட்டுமே கண்டறியப்பட்டன.
மிக சமீபத்தில், கடல்சார் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி (Ocean Infinity) பல வாரங்கள் ஆழ்கடலில் தேடுதல் நடத்தியது. ஆனால் அதனால் பயன் ஒன்றும் இல்லை. மோசமான வானிலை காரணமாக கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது.
கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்
முன்னதாக 2018-ம் ஆண்டிலும் தேடுதல் பணியை மேற்கொண்ட இந்த ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம், இப்போது டிசம்பர் 30-ம் தேதி முதல் மீண்டும் தேடலைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தியா மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம், "கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்" (no-find, no-fee) என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணிகளை தொடங்கவிருக்கிறது.
இதன்படி, விமானத்தின் கணிசமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனத்துக்கு 70 மில்லியன் டாலர் கட்டணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக விபத்துக்கான காரணத்தைத் தெரிவிக்கும் கருப்பு பெட்டி போன்றவை.
Nine years ago today, flight MH370 disappeared just 38 minutes after it took off. But how does a flight with 239 passengers just disappear?
— Netflix (@netflix) March 8, 2023
MH370: The Plane That Disappeared is now on Netflix pic.twitter.com/HS0MTIcs2G
இதற்காக ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம், இந்தியப் பெருங்கடலில் இதுவரை தேடப்படாத 15,000 சதுர கிலோமீட்டர் (5,800 சதுர மைல்கள்) பரப்பளவில் ஆழ்கடல் தேடுதல் பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளதாக அசோசியேட் பிரஸ் செய்தி தளம் தெரிவிக்கிறது.
விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக இந்தத் தேடுதல் பணி தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன், மலேசிய ஏர்லைன்ஸ், போயிங் நிறுவனம், என்ஜின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், அல்லியன்ஸ் காப்பீட்டுக் குழுமம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோரியும் வருகின்றன.
இப்போது இந்த விமானம் கிடைக்க அதிகபட்ச வாய்ப்புள்ள பகுதிகளில் மீண்டும் தேடுதல் தொடங்குகிறது. விமானத்துடன் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஒரு முடிவை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது மலேசிய அரசு.














