`மின் தடை பிரச்னைகளுக்குக் காரணம் இதுதான்..!' - அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதென...
NEET: `இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை!' – மத்திய அரசு, NTA-வை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!
2026-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் யுஜி (NEET UG 2026) வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று மிகவும் அதிரடியான மற்றும் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது.
"கடந்த முறை நாங்கள் பல உத்தரவுகளைப் பிறப்பித்து, உயர்மட்டக் குழுக்களை அமைத்த பிறகும், மத்திய அரசு மற்றும் தேசியத் தேர்வு முகமை இன்னும் எந்த ஒரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று நீதிபதிகள் தங்களது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் யு ஜி வினாத்தாள்கள் கசிந்து மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது மறுதேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல மனுக்களில் நாட்டின் மிக முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மனுதாரர்களின் முக்கியக் கோரிக்கைகள்
1. தேசியத் தேர்வு முகமையை நீக்கிவிட்டு மாற்று அமைப்பை உருவாக்க வேண்டும்.
2. நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் புதிய ஒரு நம்பகமான குழு வேண்டும்.
3. வினாத்தாள் கசிவைத் தடுக்க நீட் தேர்வை முழுமையாகக் கணினி வழித் தேர்வாக மாற்ற வேண்டும்
இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் தொடக்கத்திலேயே, இந்த வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாகத் தேசியத் தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மறுபுறம் அடுத்த தேர்வுக்கான தேதியும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது, எனவே இந்த வழக்கின் அவசரத் தன்மையைக் கருத வேண்டும்" என்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, கல்வி அமைச்சகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டிக்கும் வகையில் மிகவும் உணர்ச்சிமிக்க வரிகளைப் பதிவு செய்தது. நீதிபதிகள் கூறுகையில், ``நாங்கள் இப்போது தேர்வு தேதியைப் பற்றிப் பேசவில்லை. கடந்த முறை இதே போன்ற முறைகேடுகள் நடந்தபோது நாங்கள் தலையிட்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தோம். அதன்பிறகு ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது; அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, அதை முறையாகக் கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.
இவ்வளவு பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கப்பட்ட பிறகும், மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது என்றால், அவர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தங்களது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில் தற்காலிகத் தீர்வுகளை ஏற்க மறுத்த நீதிபதிகள், உடனடியாக இரண்டு மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்:
முதலாவது உத்தரவு: கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் தற்போதைய நிலைப்பாடு என்ன, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது குறித்துத் தேசியத் தேர்வு முகமை உடனடியாகப் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இரண்டாவது உத்தரவு: உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதற்காக என்னென்ன உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து, அக்குழுவின் தலைவரான கே. ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் பிரமாணப் பத்திரம் மற்றும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்குகளின் முழுமையான நகல்களை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரவிருக்கும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

``ஒவ்வொரு முறையும் தேர்வு முறைகேடுகள் நடக்கும்போது ஒரு குழுவை அமைத்துவிட்டு அரசு தப்பித்துக் கொள்ள முடியாது, முறையான தீர்வு வேண்டும்" என்ற உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி அணுகுமுறை, லட்சக்கணக்கான மருத்துவக் கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு மிகப்பெரிய தார்மீக நம்பிக்கையைத் தந்துள்ளது.
வரவிருக்கும் வெள்ளிக்கிழமை NTA மற்றும் ராதாகிருஷ்ணன் குழு தாக்கல் செய்யவுள்ள அறிக்கைகள், இந்தியாவின் மருத்துவ நுழைவுத் தேர்வு முறையில் ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.















