மேகதாது: `தமிழர்களுக்கு எந்த வகையிலும் துரோகம் இழைக்கக் கூடாது என்பதில்...' - அம...
மேகதாது: `எந்த முகாந்திரமும் இல்லை'- தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
"கடந்த 2025 நவம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு எந்தவிதமான புதிய முகாந்திரமும் இல்லை" என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது ஏன்? உச்ச நீதிமன்ற அறையில் நடந்த விவாதங்கள் என்ன? முழுப் பின்னணியையும் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்குச் சற்று மேலே, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை அமைக்கும் முயற்சியைக் கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக DPR எனப்படும் திட்ட வரைவு அறிக்கையைத் தயாரித்து, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் கர்நாடகா சமர்ப்பித்திருந்தது. இதற்கு எக்காரணம் கொண்டும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தித் தமிழக அரசும், அதற்கு ஆதரவாகப் புதுச்சேரி மற்றும் கேரள மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. மறுபுறம், அணை கட்ட அனுமதி கோரிக்கையோடு கர்நாடகாவும் களம் இறங்கியது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், `மேகதாது திட்ட வரைவு அறிக்கையின் மீது மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்காததால், தமிழக அரசு இப்பொழுதே நீதிமன்றத்தை நாடியிருக்கத் தேவையில்லை. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதால், இந்த இரு அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மத்திய நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும், தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது' எனக் கூறி தமிழக அரசின் மனுவை அப்போது தள்ளுபடி செய்தது.
கடந்த 2025 நவம்பர் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு அண்மையில் 15.04.2026 அன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வின் அறையில் பரிசீலனைக்குப் பட்டியலிடப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் நீதிமன்ற அமர்வில் ஒரு முக்கியக் கோரிக்கை வைக்கப்பட்டது. "மேகதாது விவகாரம் என்பது கோடிக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் சார்ந்தது. எனவே, இதனை நீதிபதியின் தனி அறையில் விசாரிக்காமல், வழக்கமான நடைமுறையில் திறந்த நீதிமன்ற அறையில் Open Court விசாரிக்க வேண்டும்; ஏனெனில், இதில் பல்வேறு விரிவான வாதங்களை நாங்கள் எடுத்து வைக்க வேண்டியுள்ளது" எனத் தமிழக அரசு வலியுறுத்தியது. குறிப்பாக, கடந்த 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்பில், மேகதாது அணை திட்டத்திற்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசு, 2025 நவம்பர் 13 உத்தரவு முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதால், அதை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் எனத் தீவிரமாக வாதிட்டது.

தமிழக அரசின் இந்தக் கோரிக்கையைத் தங்களது தனி அறையில் விரிவாகப் பரிசீலித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, இறுதியாகத் தமிழக அரசின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: "தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் நாங்கள் மிகவும் கவனமாகப் பரிசீலித்தோம். ஆனால், கடந்த 13.11.2025 அன்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் மறுஆய்வு செய்வதற்குப் போதுமான எந்தவொரு புதிய சட்ட முகாந்திரமோ அல்லது வலுவான காரணங்களோ இந்த மனுவில் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். எனவே, தமிழக அரசின் இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது."– என நீதிபதிகள் தங்களது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, மேகதாது விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த தமிழக அரசுக்கு ஒரு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகா அணை கட்ட முடியாது என்ற முந்தைய உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதால், அடுத்து வரும் நாள்களில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மற்றொரு பக்கம் மேகதாதுவில் விரைவில் பூமிப் பூஜை நடத்தப்படும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்திருப்பது, தமிழ்நாடு அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
உடனடியாக இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆளும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக் கட்சிகளாக உள்ள இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் முதல்வர் விஜய்யை வலியுறுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.













