Sreenivasan: "ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்!" - மோகன்லால் உருக்கம...
T20 WC: "மகிழ்ச்சியாக இருக்கிறது; அணியை சரியாக தேர்வு செய்திருக்கிறோம்"- கேப்டன் சூர்யகுமார் யாதவ்
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல்( துணை கேப்டன்), ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, ஹர்ஷிப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.
இந்த அணியில் சுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார் யாதவ், " இந்த முறை டி20 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது ஒரு நல்ல ஊக்கமாக இருக்கும்.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் இதனை அனுபவித்தோம்.

அந்த சமயத்தில் நாங்கள் அனுபவித்த உணர்வை மறக்க முடியாது. சொந்த மண்ணில் விளையாடுவது சவாலாக இருக்கும். அணியை சரியாக தேர்வு செய்திருக்கிறோம்.
அனைத்து இடங்களுக்கும் சரியான வீரர்களைத் தேர்வு செய்திருக்கிறோம். இந்த அணியை அறிவித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.












