U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் - அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவ...
T20 WC: "வங்கதேசத்திடம் சொன்னதுபோல் இந்தியாவிடம் ஐசிசி சொல்லுமா?" - நாசர் ஹுசைன் கேள்வி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது.
முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎலில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வங்கதேச அணி, "இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை" என்று கூறி இலங்கையில் விளையாட அனுமதி கோரியது.
விலகிய வங்கதேச அணி
ஆனால் ஐசிசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்க டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.
அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

புறக்கணித்த பாகிஸ்தான்
இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தது.
"டி20 உலகக்கோப்பையில் இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" என்று பாகிஸ்தானின் இந்தப் புறக்கணிப்பிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.
கேள்வி எழுப்பிய நாசர் ஹுசைன்
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான நாசர் ஹுசைன் ஐசிசியின் செயல் குறித்து பேசியிருக்கிறார்.
"வங்கதேசம் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததை நான் வரவேற்கிறேன். அவர்கள் தங்கள் வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்காகக் குரல் கொடுத்தனர்.
அதேபோல, வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் களமிறங்கியிருப்பதையும் நான் வரவேற்கிறேன்.

அரசியல் தலையீடு வாடிக்கையாகிவிட்டது
'போதும் இந்த அரசியல்' என்று யாராவது ஒரு கட்டத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
முன்பு விதிவிலக்காக இருந்த அரசியல் தலையீடு இப்போது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பதையும், கோப்பையை வாங்க மறுப்பதையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. கிரிக்கெட் நாடுகளை இணைக்க வேண்டும், பிரிக்கக் கூடாது.
ஐசிசி அவர்களைத் தொடரிலிருந்து நீக்கியிருக்குமா?
"ஒருவேளை இந்தியா இதே கோரிக்கையை வைத்திருந்தால் ஐசிசி என்ன செய்திருக்கும்?
ஒரு தொடருக்கு ஒரு மாதம் முன்பு, 'எங்கள் அரசு அனுமதி மறுக்கிறது; நாங்கள் அந்த நாட்டில் விளையாட மாட்டோம்' என்று இந்தியா கூறியிருந்தால், ஐசிசி அவர்களை தொடரிலிருந்து நீக்கியிருக்குமா? விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

வங்கதேசத்தையும், பாகிஸ்தானையும், இந்தியாவையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இந்தியாவிடம் பணம் இருக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால், அதிகாரத்துடன் பொறுப்பும் இருக்க வேண்டும். தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை நசுக்கினால், கிரிக்கெட்டின் தரம் குறைந்துவிடும்" என்று பேசியிருக்கிறார்.


















