செய்திகள் :

Tere Ishq Mein Review: `எங்கயோ பார்த்திருக்கேன்!' - பாலிவுட் ஹிட் வரிசையை தக்க வைக்கிறாரா தனுஷ்?!

post image

ஷங்கரும் (தனுஷ்), வழக்கறிஞராக இருக்கும் அவருடைய தந்தையும் தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தவர்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது அடி, தடி, உதை என கெத்து டிராகனாக வலம் வருகிறார் ஷங்கர். அங்கு முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் முக்தி (கிருத்தி சனோன்). அவருடைய பிஹெச்டி ஆராய்ச்சிக்காக ஷங்கரை நல்லவனாக மாற்ற முயல்கிறார். இதற்கிடையில் ஷங்கருக்கு முக்தி மீது காதல் மலர்கிறது.

Tere Ishq Mein Review
Tere Ishq Mein Review

ஆனால், பெரிய ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் முக்தியின் தந்தை, ஷங்கரிடம் 'முடிந்தால் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு என் மகளைத் திருமணம் செய்துகொள்' என சவால் விடுகிறார்.

'அபாலஜி' என்ற ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்வதையே கடினமாக எண்ணும் ஷங்கர் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றாரா, முக்தியை கரம் பிடித்தாரா, அதற்குப் பின் ஷங்கரின் வாழ்க்கையில் வரும் திருப்பங்கள் என்னென்ன, என்பதை ஆக்ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ் என மூன்றையும் கலந்து கதை சொல்கிறது 'தேரே இஷ்க் மே'.

உருகி உருகி காதல் செய்யும் இடங்களில் ரொமான்டிக் இளைஞனாக கவரும் தனுஷ், ஆக்‌ஷன் களத்திலும் தன்னுடைய அக்மார்க் தடத்தைப் பதிக்கிறார். துள்ளல் மிகுந்த இளைஞன், இறுக்கமான முகம் காட்டும் விமானப்படை வீரர் என இரண்டு தோற்றத்திற்கும் கச்சிதமாகத் தயாராகி 'பகுத் அச்சா' சொல்ல வைக்கிறார். ஆனால், நாயகியுடன் எமோஷனலாக உரையாடும் அந்த மொட்டை மாடி காட்சி உட்பட சில இடங்களில் ஓவர்டோஸ் போவதைத் தவிர்த்திருக்கலாம்.

ஷங்கரின் வன்முறைப் பக்கத்தை அழிக்க நினைப்பவராகவும், குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவிப்பவராகவும் நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டி ஹார்ட்டின்களை வாங்கிக் கொள்கிறார் கிருத்தி சனோன். ஆனாலும் கிருத்தியும் சில இடங்களில் அந்த மிகைநடிப்பைக் குறைத்திருக்கலாம்.

Tere Ishq Mein Review
Tere Ishq Mein Review

மகனைக் கண்டிக்கும் ஸ்ட்ரிக்ட் தந்தையாக இருந்தாலும் ஆங்காங்கே மகனுக்காக அன்பானவராக மாறும் பிரகாஷ் ராஜ் நடிப்பால் பார்வையாளர்களுடன் 'நம்ம வீட்டு அப்பா' என இணக்கமாகிறார். மகனைக் காப்பாற்ற அத்தனை அவமானங்களைச் சந்திக்க நேரிடும் காட்சிகளில் நம் இதயங்களையும் கனமாக்கி விடுகிறார். கிரேட் ஜாப்!

காதலுக்கு கறார் காட்டும் தந்தையாக டோட்டா ராய் சௌத்ரி, கல்லூரியில் கதாநாயகனின் ஹீரோயிச விஷயங்களுக்கு துணையாக இருக்கும் நண்பன் பிரயான்ஷு பயனூளி என டெம்ப்ளேட் கதாபாத்திரங்களில் வருபவர்களும் நல்லதொரு பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.

வான்வழி தாக்குதல் காட்சி, போர் சூழல் என கிராபிக்ஸில் நேர்த்தியான பணியைச் செய்திருக்கிறது ரெட் சில்லீஸ் நிறுவனம். கிராபிக்ஸுக்கு இடைவெளி தந்து முழுமையான திரையனுபவத்தைக் கொடுப்பதற்கு கரம் தந்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் துஷார் கண்டி ரே மற்றும் விஷால் சின்ஹா. அதுமட்டுமின்றி, கல்லூரி, குறுகிய வீதிகள், இரவு நேர டெல்லி நகரம் என லைட்டிங்குகளில் வண்ணங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

Tere Ishq Mein Review
Tere Ishq Mein Review

எமோஷனல் காட்சிகளை ஓவர் டோஸ் நிலைமைக்குக் கொண்டு செல்லாமல் கவனித்துக் கொண்ட படத்தொகுப்பாளர்கள் ஹேமல் கொதாரி மற்றும் பிரகாஷ் சந்திரா சாஹோ, தேவைக்கு அதிகமாக நீளும் முதற்பாதியை கவனிக்கத் தவறியிருக்கிறார்கள்.

'ஜிகர்தண்டாளே', 'தேரே இஷ்க் மே (டைட்டில் பாடல்)' பாடல்களில் நல்லதொரு வைப் தரும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், 'சின்னவரே' பாடலில் தாளம் போட வைக்கிறார். ஷங்கரின் காதல், தந்தை சென்டிமென்ட், முக்தியின் சோக நிலை போன்ற முக்கியக் காட்சிகளின் பின்னணி இசையில் தனது பியானோவால் மாயாஜாலங்கள் செய்து நம் கண்களில் கண்ணீரை மிதக்கச் செய்கிறார்.

வழக்கமான ரொமான்டிக் டிராமா பார்முலாவான 'நிகழ்காலம் டு ஃப்ளாஷ்பேக்' திரைக்கதை வடிவத்தையே ஆனந்த் எல்.ராயின் இந்தத் திரைப்படமும் பின்பற்றுகிறது. உருகி உருகி நாயகன் பின்தொடர்ந்து காதல் செய்யும் இடங்கள் பழக்கப்பட்டதாக விரிந்திருந்தாலும் எமோஷனல் காட்சிகளில் திரைக்கதையாசிரியர்கள் ஹிமான்ஷு ஷர்மா, நீரஜ் யாதவ் அழுத்தம் தந்து, திரையில் தாக்கம் உண்டாக்கும் காட்சிகளாக மெருகேற்றி இருக்கிறார்கள். அம்மாவின் பிளாஷ்பேக் சொல்லும் இடத்தில் அட்டகாசம் தனுஷ்! 'ராஞ்சனா' யுனிவர்ஸ் என்றே விளம்பரப்படுத்தப்பட்ட படம், அதனுடன் இணைக்கப்படும் காட்சி அழகான ஹைக்கூ!

ஆனால், கல்லூரியில் கெத்தாகச் சுற்றும் இளைஞனுக்கு மலரும் காதல், அந்தக் காதலுக்காக நாயகன் தியாகிப் பட்டம் வாங்கிக் கொள்வது, அதனால் அவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என பல காவியக் காதல் கதைகள் தொட்டுச் சென்ற விஷயங்களையே இந்தச் சினிமாவும் மீண்டும் பிரதிபலிக்கிறது.

Tere Ishq Mein Review
Tere Ishq Mein Review

கதாநாயகி எப்படியான வகையில் நாயகனை நல்வழிப்படுத்துகிறார், அவரை எப்படி வன்முறைப் பாதையிலிருந்து திருப்புகிறார் போன்ற காட்சிகளில் அழுத்தமில்லாமல் 'ஜெட்' வேகத்தில் பறப்பது ஏனோ!? இதுவே தொடக்கக் காட்சிகளில் ஷங்கர், முக்தியிடம் நம்மை நெருங்கவிடாமல் தூரமாகவே நம்மை நிற்க அனுமதிக்கிறது.

நாயகியின் விருப்பத்தைக் கேட்காமல் அவளைக் காதலிக்கிறேன் என நாயகன் ரிஸ்க் விஷயங்களைச் செய்து, அதற்கான எதிர்வினைகளில் தன்னை பலிகொடுத்து, அதனால் மீண்டும் நாயகியை குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குவது எனப் பழங்கால சினிமாத்தனங்கள் இங்கும் 'அட்டெண்டன்ஸ்' போடுவது நெருடல்.

காதலை 'நாகரிகமாக' மறுப்பதற்காக நாயகி ஆடும் டிராமா, நாயகனின் 'சாபத்தை' நிறைவேற்றுவதாக நாயகி எடுக்கும் முடிவுகள், இந்திய சினிமா விட்டொழித்த 'கேன்சர்' கலாசாரம் மீண்டும் தலைதூக்குவது என எதுவுமே நம்ப முடியாத வகையில் இருப்பது கூடுதல் நெருடல். அதேபோல படத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களும் 'எங்கயோ பார்த்திருக்கிறோமே' வைப்பை தருவது ஏனோ?!

இவை அனைத்திற்கும் 'காதலுக்கு எதுக்கு காரணம்? ப்யூர் லவ் என்பதே காரணம்தான்' எனச் சொல்வதெல்லாம் பார்வையாளர்களை நம்ப வைக்கும் காரணங்களாக இல்லை சாப்!

எமோஷனல் மீட்டரில் மட்டுமே நம்மை கவரும் இந்த `தேரே இஷ்க் மே', புதிய கோணங்களையும், திருப்பங்களையும் சேர்த்திருந்தால் அழியா காவியமாக மாறியிருக்கும்.

``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நடிகை ஜெயா பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்... மேலும் பார்க்க

Dharmendra: ``எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்'' - ரஜினி, கமல், மம்மூட்டி.. லெஜண்ட்ஸ் இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிராந்திய தலைவர்கள் முதல் திரையுலகின் பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் வரை அவருக்கு இரங்... மேலும் பார்க்க

Dharmendra: `ஷோலே' பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்ட... மேலும் பார்க்க