’டபுள் என்ஜின் மாநிலங்களின் வளர்ச்சி தமிழ்நாட்டில் இல்லை’ – சந்திரபாபு நாயுடு கு...
TOUSKA: எச்சரிக்கையை புறக்கணித்த ஈரான்; விளைவு, கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா - சம்பவத்தின் பின்னணி?
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஈரானின் கப்பல் ஒன்றை அமெரிக்கா பிடித்து வைத்துள்ளது.
ட்ரம்ப் பதிவு
இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், "ஈரானியக் கொடி ஏந்திய 'தூஸ்கா' (TOUSKA) என்னும் சுமார் 900 அடி நீளமும், ஒரு விமானம் தாங்கிப் போர்க்கப்பலுக்கு நிகரான எடையும் கொண்ட சரக்குக் கப்பல் எங்களது கடற்படை முற்றுகையைத் தாண்டிச் செல்லமுயன்றது.
ஆனால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை. ஓமன் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பலான 'யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ்' (USS SPRUANCE), தூஸ்கா கப்பலை வழிமறித்து, நிறுத்துமாறு முறையான எச்சரிக்கை விடுத்தது.

ஈரானிய மாலுமிகள் அதற்கு செவிசாய்க்க மறுத்ததால், எங்களது கடற்படைக் கப்பல் அதன் இயந்திர அறையில் துளையிட்டு, அந்தக் கப்பலை இருந்த இடத்திலேயே முடக்கியது.
தற்போது, அமெரிக்கக் கடற்படையினர் அந்த கப்பலைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். தூஸ்கா கப்பல் ஏற்கெனவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டிருப்பதால், அமெரிக்க நிதித்துறையின் தடைகளின் கீழ் உள்ளது.
தற்போது அந்தக் கப்பல் முழுமையாக எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் பதில்
'எங்களுடைய எந்தக் கப்பலும் அமெரிக்காவிடம் சிக்கவில்லை என்று முன்பு கூறிய ஈரான், பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "ஆக்கிரமிப்பு குணம் கொண்ட அமெரிக்கா, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும், கடல்சார் கொள்ளைச் செயலில் ஈடுபட்டதுடன், ஈரானின் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது... அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பல பயங்கரவாத கடற்படை வீரர்களைக் கப்பலின் தளத்தில் இறக்கி, அதன் வழிசெலுத்தல் அமைப்பை முடக்கியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் இந்த ஆயுதம் ஏந்திய கொள்ளைச் செயலுக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகள் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் மற்றும் பழிவாங்கும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.















