ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்ப...
தொகுதி மக்கள் வழங்கும் அமோக ஆதரவு; வெற்றிபெறப் போகும் மண்ணச்சநல்லூர் 'செல்லப்பிள்ளை' கதிரவன்!
மண்ணச்சநல்லூர் தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் தி.மு.க வேட்பாளர் கதிரவன், வெற்றிக்கனியை ருசிக்கத் தயாராகிவிட்டார். காரணம், அவர் பிரசாரம் மேற்கொள்ளும்போது அலை அலையாகத் திரளும் கட்டற்ற கூட்டமும், அவர்கள் தரும் உற்சாகமான வரவேற்பும் கதிரவனின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது என்றே சொல்லலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தராக அவரை மக்கள் பாவிப்பதும், பொதுமக்களே அவரது பிரசார வாகனத்தில் ஏறி, 'இவர் எனக்கு இந்த விஷயத்தை செய்துகொடுத்தார்' என்று நெக்குருகிப்போய் பேசி வாக்குகள் சேகரிப்பதும், தொகுதி மக்களுக்கும், அவருக்குமான பாங்கான பந்தத்தைக் காட்டுகிறது. தி.மு.க தந்த தேர்தல் வாக்குறுதி, தொகுதிக்கு தான் தரும் சொந்த வாக்குறுதிகள் எல்லாம் தாண்டி சொந்த பணத்தில் பல திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று அவர் தரும் வாக்குறுதிகள், மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. சொந்த பணத்தில் மருத்துவ வசதிகள், கல்வி உதவிகள் என்று செய்து வருகிறார். இரண்டாவது முறையாக வெற்றிக்கொள்ள காத்திருக்கும் அவரை தீவிர பிரசாரத்துக்கு இடையில் சந்தித்து, அவரது ஐந்தாண்டுக்கால செயல்பாடுகள் குறித்து பேசினோம்.

"திருச்சி மாவட்டத்தின் கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையை ஒட்டி, அமைந்துள்ள மண்ணச்சநல்லூர் தொகுதி, தொழில் வளமிக்கது என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இத்தனை சிறப்புமிக்க தொகுதிக்கு கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ரூ.1,119.27 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளையும் திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்து தந்துள்ளது. குறிப்பாக, தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு எனது பணிகளை ஆற்றி இருக்கிறேன். என்னுடைய மண்ணச்சநல்லூரின் பள்ளி மாணவ-மாணவியர் சிறப்பான கல்வியைப் பயின்று என்னைப் போன்று சிறந்த பொறியாளராக, கல்வியாளராக வர வேண்டும் என எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பேன். அந்த எண்ணத்துக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டாமா? அதற்காகத்தான் தொகுதிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் மொத்தமாக 140 வகுப்பறைகள் ரூ.54.70 கோடி மதிப்பீட்டில் கட்டித் தரப்பட்டுள்ளன. இதன் மூலம், மாணவர்கள் சிரமமின்றி சிறப்பான திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி கல்வி பயின்று வருகிறார்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள் மிகவும் நேசித்த துறைதான் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை. அவரைப் போன்றே இந்தத் துறையை நம்முடைய திராவிட நாயகனும் தனது கட்டுப்பாட்டில் வைத்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அவரின் வழி தொட்டு, நம்முடைய மண்ணச்சநல்லூர் தொகுதியிலும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் ரூ.19.37 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொழில் வளமிக்க நம்முடைய மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு தடையில்லாத சீரான மின்சாரம் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் எந்த இடத்திலும் மின் வெட்டோ, மின்சார பற்றாக்குறையோ ஏற்படவில்லை. இந்த தொகுதியிலும் அப்படித்தான்.

சீரான மின்சாரம் மற்றும் மின் விநியோகத்துக்காக மண்ணச்சநல்லூரில் மட்டும் ரூ.199 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதே போன்று, திருப்பைஞ்ஞீலியில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் துணைமின் நிலையம் அமைத்திட நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதேபோல், மண்ணச்சநல்லூர் தமிழ்நாட்டின் இதயப் பகுதியான திருச்சியில் இருந்து ரொம்ப பக்கத்தில் அமைந்திருக்கிறது.
இது, பெருநகரமாகவும் இல்லாமல், கிராமமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்டதாக அமைந்திருக்கிறது. இதனால், கிராமம், நகரம் என இரண்டிலும் இருக்கக் கூடிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கேற்ற வகையில், வாய்க்கால்கள் மீது பாலங்கள், சாலைகள் அமைத்துத் தரப்படுகின்றன. குறிப்பாக, புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால்களில் நான்கு பாலங்கள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. மக்களுக்காக குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் திராவிட மாடல் அரசு முதன்மையாகத் திகழ்கிறது. நமது மாவட்ட அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு அவர்கள் தலைமையில் செயல்படும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக சிறப்பாகத் திட்டங்களைச் செயல்படுத்தி காட்டியுள்ளோம். குறிப்பாக, குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக மட்டும் ரூ.12.18 கோடி செயல்படுத்தி உள்ளோம்.

உட்கட்டமைப்பு வசதிகளில் முதன்மையாக இருக்கக் கூடியது பேருந்து பயணியர் நிழற்குடைகள்தான். அதையும் நம்முடைய மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளோம். பிச்சாண்டார் கோவில் பகுதியில் திருச்சி, சேலம், நாமக்கல் பேருந்துகள் செல்லும் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட ரூ.51.43 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மண்ணச்சநல்லூரில் என்னுடைய கனவுத் திட்டங்களில் ஒன்றும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அது, இந்தத் தொகுதி மக்களின் 60 ஆண்டுகள் கால கோரிக்கையாகும். அதுதான், கோபுரப்பட்டி முதல் பாச்சூர் வரை இணைப்புச் சாலை அமைப்பதாகும். இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டு இதனை நிறைவேற்ற ரூ.1.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனால், 20 கிராமங்கள் பயன்பெறுகின்றன. இந்த தொகுதி அரிசி ஆலைகள் நிரம்ப இருக்கக் கூடியது. இதைக் கருத்தில் கொண்டு இங்கே நெற்களங்களை அமைத்துத் தந்துள்ளோம்.
திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய மாநிலம் மட்டுமல்ல, மண்ணச்சநல்லூர் தொகுதியும் பசுமைக் குறியீட்டை இலக்காக வைத்து இருக்கிறது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மரம் நடுதல், மரத் தோட்டம் அமைத்தல், நர்சரி அமைத்தல் போன்ற பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 'குடிசைகள் இல்லாத தமிழ்நாடு' என்பதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம். இதற்காக, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் 'கனவு இல்லம்' திட்டத்தை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நம்முடைய மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் பயன் பெற்றுள்ளனர். அப்படி இதுவரையிலும், 1,250 பயனாளிகளுக்கு ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மண்ணச்சநல்லூரில் நாம் சிறந்த முறையில் பாலங்கள், சாலைகளை கட்டித் தந்துள்ளோம். இதற்காக, இதுவரையிலும் ரூ.120.40 கோடி நெடுஞ்சாலைத் துறை சார்பில் செலவிட்டு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளோம்.
அதேபோல், நான் கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு செய்த மருத்துவ சாதனைகளை மறைக்கவே எனக்கு எதிரான பொய் பிரசாரத்தை எதிர்க்கட்சியினர் கையில் எடுக்கின்றனர். கடந்த 5 ஆண்டுக்காலத்தில் ஏராளமான மருத்துவ சாதனைகளை மண்ணச்சநல்லூர் தொகுதியில் செயல்படுத்தி உள்ளோம்.
1. தொகுதியில் 1,757 கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்பட்டது.
2. 9,047 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

3. 6,48,819 வெளி நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும், மருத்துகளும் இலவசமாக வழங்கப்பட்டன.
4. 25,795 உள்நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இத்தனை சிறப்பான மருத்துவ வசதிகளை அளித்து ஏற்பட்ட நற்பெயரைக் கெடுக்கவே கிட்னி விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கிளப்பி வருகின்றனர். என் மீது எதிர்க்கட்சியினர் அவதூறுகளை அள்ளி வீசினாலும், நான் என்னுடைய மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மருத்துவ சேவைகளை அளிப்பதை நிறுத்தப் போவதில்லை. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சிறப்பான மருத்துவ சேவைகளை அளிக்கவுள்ளோம். 'மருத்துவம் இலவசம் - மக்கள் நலனே முக்கியம்' இதுதான் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் எனது வாக்குறுதி.
அதேபோல், பூனாம்பாளையம், சித்தாம்பூர் ஏரிகளுக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தை செய்துள்ளோம். சமயபுரம் கோயிலுக்கு சிமெண்டில் பாதை மற்றும் ட்ரைனேஜ் வசதி செய்துள்ளோம். டோல்கேட்டில் இருந்து பாதை அமைக்க ஹைவேஸ் துறைக்கு அப்ளை செய்துள்ளோம். அறிவுசார் மையம், நூலகம் என்று மாணவர்களுக்கு 4 நூலகங்களை அமைத்துள்ளோம். வாத்தலையில் பாலம், இங்கு அரிசி ஆலைகள் அதிகம் உள்ளதால், அடிக்கடி மின்சார பிரச்னை ஏற்படுகிறது என்று சொன்னதால், இங்கு துணை மின் நிலையம் கொண்டு வந்துள்ளோம். ஓட்டு கட்டடங்களாக இருந்த பல பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டித் தந்துள்ளோம். எல்லா இடங்களிலும் சாலை வசதிகள் செய்துள்ளோம். அரசு பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளோம்.

7 பாலங்களை கட்டியுளேன். ரூ. 20 கோடியில் குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். மாதம் ஒரு கோடி வீதம் 55 மாதங்களில் சொந்த பணம் ரூ.55 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில், தொகுதி மக்களின் தேவைகள், கோரிக்கைகள் அனைத்தும் கேட்டறியப்பட்டு, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பல கோடிகள் நிதி பெற்று பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் கிராமங்கள் தோறும் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சாலை, குடிநீர், தெருவிளக்கு, வடிகால், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிச்சாண்டார் கோயிலில் ரூ.4.76 கோடியிலும், டோல்கேட்டில் 58 லட்சத்திலும், கூத்துாரில் ரூ.3.63 கோடியிலும், பளூரில் ரூ.82 லட்சத்திலும், பனமங்கலத்தில் ரூ.1 கோடியிலும், வில்வகுடியில் ரூ.29 லட்சத்திலும், வெங்கங்குடியில் ரூ.2.13 கோடியிலும், நங்கமலசத்திரத்தில் ரூ.10 லட்சத்திலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தெற்கு ஈச்சம்பட்டியில் ரூ.80 லட்சம், வடக்கு ஈச்சம்பட்டியில் ரூ.1.13 கோடியிலும், சக்திநகரில் ரூ.1.15 கோடியிலும், இனாம்கல்பாளையத்தில் ரூ.4.38 கோடியிலும், அக்கரைப்பட்டியில் ரூ.1.06 கோடியிலும், தேவிமங்கலத்தில் ரூ.4.76 கோடியிலும், தெற்கு தத்தமங்கலத்தில் ரூ.1.08 கோடியிலும், வடக்கு தத்தமங்கலத்தில் ரூ.2.43 கோடியிலும், தெற்குதளுதாளப்பட்டியில் ரூ.1.94 கோடியிலும், வடக்கு தளுதாளப்பட்டியில் ரூ.25 லட்சத்திலும், பாலையூரில் ரூ.15.20 கோடியிலும், ஸ்ரீபுரம்புதுாரில் ரூ,.2.53 கோடியிலும், கரியமாணிக்கத்தில் ரூ.2.47 கோடியிலும், கன்னியாகுடியில் ரூ.3.15 கோடியிலும், ஆய்குடியில் ரூ.1.76 கோடியிலும், மேல, கீழ வங்காரத்தில் ரூ.1.08 கோடியிலும் என இப்பகுதியில் மட்டும் கிராமத்திற்கு ரூ.1 கோடிக்கு குறைவில்லாமல் வளர்ச்சித் திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளது.

இதில், 10,000 மக்கள் பயனடைந்திருப்பார்கள். திண்ணகோணம் ஊராட்சி, சுதந்திரம் அடைந்ததிலிருந்து பேருந்து வசதி இல்லாத கருப்பு கோவில் கொட்டத்திற்கு பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளோம். இது போன்று பல புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளோம். அரசு கலைக் கல்லூரிக்காக சட்டமன்றத்தில் இருமுறை பேசியுள்ளேன். ஊருக்கு அவுட்டரில் பேருந்து நிலையம் அமைக்க முயல்வதால், தாமதமாகிறது.
பிச்சாண்டார் கோவிலில் சப்வே அமைப்பதற்காக ரயில்வே அதிகாரிகளுக்கு தனியாகவும், எம்.பி மூலமும் கடிதம் கொடுத்துள்ளோம். மீண்டும் உதிக்கப்போகும் திராவிட மாடல் ஆட்சியில் அந்த திட்டங்கள் யாவும் நிறைவேற்றப்படும்.
வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
தொகுதி மக்கலோடு மக்களாக, அவர்களில் ஒருவனான கலந்திருப்பதால், என்னை தொகுதி மக்கள் அனைவரும் குடும்பத்தில் ஒருவனாக, ரேஷன் கார்டில் பெயர் மட்டும் இல்லாத உறுப்பினராக பார்க்கிறார்கள். ஐந்தாண்டுக்கால திராவிட மாடல் ஆட்சியில் இங்கு நிறைவேற்றப்பட்டிருக்கும் எண்ணற்ற திட்டங்கள், அவர்களின் வாழ்வில் வசந்தத்தை பூக்க வைத்திருக்கிறது. முகத்தில் பரசவத்தை மலர வைத்திருக்கிறது. நான் வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம், என்னை அவர்கள் வரவேற்கும் விதத்திலேயே அவர்கள் என்மீது வைத்திருக்கும் அளப்பரிய பாசத்தையும், நம்பிக்கையையும் உணர முடிகிறது. அதனால், எனது வெற்றி உறுதியாகிவிட்டது. அவர்கள் முன் வைக்கும் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற அடுத்த ஐந்தாண்டுகளையும் பயன்படுத்துவேன்.
எம்.எல்.ஏ ஆகும் பட்சத்தில் தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை முதற்கட்டமாக செயல்படுத்த இருக்கிறீர்கள்?
மண்ணச்சநல்லூரில் உலகத்தரத்தில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் கொண்டு வருவேன். 'விவசாயம் வளம் பெற பாசன நீர் உறுதி' என்ற அடிப்படையில் திருத்தலையூர் ஏரியை முழுமையாக தூர் வாரி புதுப்பிப்பேன். கால்வாய்களை சீரமைத்து, நீர் சேமிப்பு சிஸ்டத்தை மேம்படுத்துவேன். ஆண்டு முழுவதும் அந்த ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு பாசன நீர் கிடைக்கும் வகையில் நீர் மேலாண்மை கட்டமைப்பை பலப்படுத்துவேன். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை செயல்படுத்துவேன். இதன்மூலம் விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்த வழிவகை செய்வேன். கூத்தூர்- மண்ணச்சநல்லூர் நேரடி பைபாஸ் இணைப்பு சாலை திட்டத்தை செயல்படுத்துவேன். வணிக மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இதன்முலம் பலன் கிடைக்கும். விவசாய மக்கள் நிறைந்த தொகுதி என்பதால், இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருக்கிறேன்.

சுயதொழில் தொடங்க உதவி திட்டங்களை கொண்டு வருவேன். தவிர, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்களை செய்வேன். ஒவ்வொரு யூனியனுக்கும் ஜே.சி.பி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை வழங்க இருக்கிறேன். வயல் வேலைகள், பொது வேலைகள், தனிப்பட்ட வேலைகளுக்கு மக்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் தூய்மையான குடிநீர் கிடைக்க 63 ஊராட்சிகளுக்கும் குடிநீர் மினரல் வாட்டர் வசதி செய்து தருவேன். கிராமங்களில் நேரடி மருத்துவ முகாம்கள் நடத்துவேன். அனைத்து மக்களுக்கும் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கு சிறப்பு சிகிச்சை திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கிறேன். இந்த தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே என் லட்சியம். மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு நாம் செய்த சாதனைகளைத் தொடர வேண்டும். இன்னும் பல சாதனைகளை அடுத்து வரும் நம்முடைய திராவிட மாடல் 2.0 ஆட்சியில் செய்திட வாக்காளர்கள் உதயசூரியன் மூலமாக இந்த கதிரவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் மண்ணச்சநல்லூரின் முகமாக நாம் தேர்ந்தெடுக்கப்படும் போது, மேலும் பல பணிகளைச் செய்து கொடுப்போம் என்பதை உறுதிமொழியாக அளிக்கிறேன்.
தொகுதி முழுவதும் மக்கள் தி.மு.க பிரசாரத்துக்கு ஆதரவு தந்து ஆர்ப்பரிக்கிறார்கள். உதயசூரியன் மறுபடியும் மண்ணச்சநல்லூரில் பிரகாசிக்கிறது. தி.மு.க வேட்பாளர் கதிரவன் வெற்றியை ருசிக்க தயாராகிவிட்டார்.

















