"முழுமையாக குணமடைய இன்னும்..." - பவன் கல்யாண் சிகிச்சை பற்றி சிரஞ்சீவி
ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, ராம்நகர் பகுதியில் உள்ள காகோர்ட் கிராமத்திற்கு அருகே காலை 10 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து விழுந்து உருண்டது. அப்போது கேட்ட அலறல் சத்தத்தால் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிதறிய பேருந்தில் சிக்கியிருந்த காயமடைந்த பயணிகளை வெளியேற்றி, மீட்புப் பணிகளைத் தொடங்கினர். பின்னர், காவல்துறையினரும் பிற மீட்புக் குழுவினரும் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் மற்றும் சம்பவ இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பேருந்திலிருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்துப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்த பயணிகளுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் பேசியதாகவும், காயமடைந்தவர்களுக்கு உதவத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார். மேலும், உதம்பூர் மாவட்ட ஆட்சியர் மிங்கா ஷெர்பாவுடன் தொலைபேசியில் பேசியதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.














