Dindigul மாவட்ட தொகுதிகள்: பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டையில் யார் யார் போட்டி? |...
TTT: ``கிடா வெட்டி இந்தப் படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்கள்" - நெகிழ்ந்து பேசிய நடிகர் ஜீவா!
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜீவா,``நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாகக் குமிளியில் ஒரு குடும்பமாகத் தங்கி இந்தப் படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் எங்களுக்காகக் கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு, இந்தப் படம் 'விஸ்வரூப வெற்றி' அடையும் என்று வாழ்த்தினார்கள். படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பும்போது, அவர்கள் கண்கலங்கி வழியனுப்பியது இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. இந்த வெற்றிக்கு அந்த மக்களின் அன்பும் ஒரு முக்கியக் காரணம்.
இயக்குநர் நிதேஷ் சகாதேவ்தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் திறமையை வெளிக்கொண்டு வந்து, காட்சிகளை அவ்வப்போது மெருகேற்றினார். ஒரு நடிகராக எனக்குத் தமிழில் ஒரு பெரிய வெற்றியை இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் நிதேஷ் சாத்தியமாக்கியுள்ளார்.
எனது தந்தை ஆர்.பி. சவுத்ரி 99 படங்கள் தயாரித்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு யாரும் பாராட்டு விழா நடத்தியதில்லை. தயாரிப்பாளர் கண்ணன் ரவி முன்வந்து, தமிழ் சங்கம் மூலமாக எனது தந்தைக்கு ஒரு பெரிய பாராட்டு விழாவை நடத்தினார். அதை என் வாழ்வின் மிகப்பெரிய அச்சீவ்மென்ட்டாகக் கருதுகிறேன். தந்தையின் ஆசீர்வாதமே இந்த வெற்றிக்குக் காரணம்.
வி.டி.வி கணேஷ் தான் இந்தக் கதையை முதலில் சிபாரிசு செய்தார். தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றோம். கதை பிடித்திருந்ததால், 'படம் எப்போது வேண்டுமானாலும் பண்ணுங்கள்' என்று கூறி அப்போதே அட்வான்ஸ் கொடுத்தார். அந்த நம்பிக்கைதான் இன்று வெற்றியாக மாறியுள்ளது. இந்தத் தருணங்கள் இனிமையான நினைவுகளாக மாறியுள்ளன" என நெகிழ்தார்.














