UAE NRI வருமானத்தை நிரந்தர மாத வருமானமாக மாற்றுவது எப்படி? NRI Special
சமீபத்தில் துபாயில் வேலை பார்க்கும் ஒரு வாடிக்கையாளர் முதலீட்டு ஆலோசனை கேட்டு என்னைத் தொடர்புகொண்டார்.
"சார், 15 வருஷமா இங்க வேலை பார்க்கிறேன். வருமானம், வருடாந்திர போனஸ், கிராஜுவிட்டினு கொஞ்சம் சிறுகச் சிறுகச் சேர்த்து ஒரு கணிசமான பெரிய தொகையை (Lump sum) வெச்சிருக்கேன். ஆனா, திடீர்னு என் சம்பளம் நின்னுட்டா என்ன ஆகும்கிற கேள்விதான் இப்போ மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. என்னோட முதலீட்டை எப்படி மாத்தி அமைக்கலாம்?" என்றார்.
சம்பளம் நின்றால் என்ன செய்வது?
பல UAE NRI-களின் மனநிலையும் இதுதான். ஊரில் உள்ளவர்களுக்கு அவர்கள் சம்பாதிப்பது மட்டுமே தெரியும். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள உழைப்பும் பல வருடத் தியாகங்களும் தெரிவதில்லை.
"சம்பளம் நின்றால் என்ன செய்வது?" என்ற இந்தக் கேள்வி எழும்போது, நாம் முதலீடு செய்யும் நோக்கமே முழுமையாக மாறிவிடும்.
உண்மையான நிதிப் பாதுகாப்பு என்பது அதிக லாபத்தைத் தேடி ஓடுவதில் இல்லை; நாம் உழைக்காமலேயே, நம்முடைய முதலீடு நமக்குத் தொடர்ந்து வருமானத்தைத் தருவதில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள துவங்குவோம்.
அவரிடம் நான், "உங்கள் மொத்தப் பணத்தையும் சரியான திட்டங்களில் முதலீடு செய்து, அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்குத் தேவையான பணத்தை மாதச் சம்பளம் போலவே எடுக்கலாமே!" என்றேன்.
உடனே அவர், "அப்படியா? அப்போ 2 கோடி ரூபாய் முதலீடு செஞ்சா, மாசம் 2 லட்சம் எடுக்கலாமா?" என்று ஆர்வமாகக் கேட்டார்.
இதுதான் பெரிய தொகையைக் கையில் வைத்திருப்பவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு...
முதலீட்டிலிருந்து அளவுக்கு அதிகமாகப் பணத்தை எடுத்தால், உங்கள் அசல் தொகை சீக்கிரமே கரைந்து காணாமல் போய்விடும்!
நீண்ட கால வருமானத்துக்கு உண்மையான எதிரி தற்காலிகச் சந்தை வீழ்ச்சி அல்ல; உங்கள் வாங்கும் திறனைச் சத்தமில்லாமல் அழிக்கும் பணவீக்கம்தான் (Inflation).
அதே 2 கோடி ரூபாயில் இருந்து மாதம் 80,000 ரூபாய் எடுத்தால் (SWP முறை), உங்களின் மாதாந்திரச் செலவும் தடையின்றி நடக்கும்; முதலீடு செய்த அசல் தொகையும் காலப்போக்கில் தொடர்ந்து வளரும்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SWP என்றதும் கொஞ்சம் யோசித்த நபர், "சரி, இந்தப் பெரிய தொகையை வேறு எதிலாவது முதலீடு செய்யலாமா? ஊர்ல இடம் வாங்கிப் போடலாமா, அல்லது பேங்க்லயே வெச்சுக்கலாமா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.
வங்கிக் கணக்கில் அதிக பணத்தை முடக்கி வைப்பது பணவீக்கத்தால் அதன் மதிப்பை நாளுக்கு நாள் இழக்கச் செய்யும். எல்லாவற்றையும் ஒரே இடத்தில் போடக் கூடாது.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது தவறில்லை. ஆனால், மொத்தப் பணத்தையும் அதிலேயே முடக்கினால் அவசரத்துக்குப் பணமாக்குவது (Liquidity) மிகக் கடினம் என்றேன்.
எனவே, ஓரளவுக்குப் பாதுகாப்பான சீரான வருமானத்துக்கு டெப்ட் ஃபண்டுகள் (Debt Funds)
பணவீக்கத்தைத் தாண்டி நல்ல லாபம் கொடுக்க ஈக்விட்டி ஃபண்டுகள் (Equity Funds)
அவசரத் தேவைக்கு உடனே பணமாக எடுக்க லிக்விட் ஃபண்டுகள் (Liquid Funds)
என மூன்றாகப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
இன்னொன்று, என்.ஆர்.ஐ-கள் கவனிக்கத் தவறும் மிகப்பெரிய விஷயம் 'கரன்சி ரிஸ்க்' (Currency risk) மற்றும் வரித் திட்டமிடல்.
இன்று உங்கள் செலவுகள் திர்ஹாம்ஸில் (Dirhams) இருக்கலாம். நாளை ஊருக்கு வரும்போது இந்திய ரூபாயிலோ, அல்லது பிள்ளைகள் படிக்கும் வேறு நாட்டிலோ செலவு செய்ய வேண்டி வரும்.
அதேபோல, முதலீட்டில் எவ்வளவு லாபம் வருகிறது என்பதைவிட, வரி போகக் கையில் எவ்வளவு லாபம் (Post-tax returns) நிற்கிறது என்பதே முக்கியம். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முதலீட்டைத் திட்டமிட வேண்டும். ஆனால் வரி விஷயத்தில் GULF NRI-களுக்கு ஜாக்பாட். மியூச்சுவல் ஃபண்ட் வருமானத்துக்கு இந்தியாவிலும் சரி, UAE-லும் சரி வரி கிடையாது!
இந்த உரையாடலிலிருந்து என்ன புரிகிறது?
என்.ஆர்.ஐ-களின் உண்மையான கனவு "சீக்கிரமே ஓய்வு பெற வேண்டும்" என்பது அல்ல. பணத்தைப் பற்றிய எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாக இந்தியாவுக்குத் திரும்பும் சுதந்திரம், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு, பணத்துக்காகப் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டியதில்லை என்ற உரிமையை அடைவதுதான்.
சாதாரண மக்கள் முதலில் செல்வத்தைச் சேர்ப்பார்கள்; புத்திசாலி முதலீட்டாளர்களோ அந்தச் செல்வம் தானாகவே வருமானத்தை உருவாக்கும் ஒரு சிஸ்டத்தை அமைப்பார்கள்.
ஆக, கைநிறைய சம்பளம் வரும்போதே, உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும்போதே இப்படி ஒரு 'செகண்ட் இன்கம்' (Second Income) திட்டத்தை உருவாக்கிவிட்டால், எப்போது வேண்டுமானாலும் பணக் கவலையின்றி ஊருக்குத் திரும்பலாம், இல்லையா?
நீங்க UAE NRI-ஆ? இரண்டாவது வருமானம் பெற விருப்பமா?
பெரும் தொகை கையில் இருக்கும்போதே, அதனைச் சரியான வழிகளில் முதலீடு செய்து, நாளை நம் வாழ்வை அது காப்பாற்றும் வண்ணம் மாற்றியமைக்க வேண்டும்.
வாழ்நாள் சம்பாத்தியத்தை எங்கு, எப்படி முதலீடு செய்து பாதுகாப்பாக பெருக்க வேண்டும் என்ற குழப்பமா? நீங்கள் சேர்த்த தொகை, இந்தியா திரும்பும்போது மாதச் சம்பளமாக கைக்கு வர வேண்டுமா?
UAE NRI-களுக்கான சிறப்பு நிதி வழிகாட்டல் நிகழ்ச்சி மே 30, 2026 சனி அன்று மதியம் 12:30 மணிக்கு நடைபெறுகிறது. கலந்துகொண்டு உங்களின் முதலீடு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் பெறுங்கள். முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-may30-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may30_2026
(குறிப்பு: UAE NRI அல்லாதோர் இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்).




















