`தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு டு மேகதாது! - விஜய் மோடியிட...
`பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டா, அதான் கஷ்டமா இருக்கு!' - மறைந்த நடிகை தமிழ்செல்வியின் கணவர்
'சம்சார சங்கீதம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி தனது திருமணம் வரை சுமார் ஐம்பது படங்கள் வரை நடித்திருப்பவர் நடிகை தமிழ்செல்வி.
'காலம் மாறிப் போச்சு', 'பொற்காலம்', 'வெற்றிக் கொடி கட்டு' ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரங்கள் நன்கு ரெஜிஸ்டர் ஆகியிருக்கும்.
'பொற்காலம்' படத்தில் நடிகர் முரளி திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாகவும், 'வெற்றிக் கொடி கட்டு' படத்தில் பார்த்திபனின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
இவரது கணவர் பிரேம்நாத்தும் சினிமாவில் இருப்பவர்தான். ஆர்.வி.உதயகுமாரிடம் 'எஜமான்', 'பொன்னுமணி' உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் பிரேம், தமிழ்நாடு மேடை நடனக் கலைஞர்கள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.
டைரக்ஷன் தாண்டி நடிப்பு, தயாரிப்பு என சினிமாவின் பிற தளங்களிலும் இயங்கி வருகிற பிரேம்நாத் மூத்த கவிஞர் முத்துலிங்கத்தின் உடன் பிறந்த சகோதரியின் மகனும் கூட.
சில தினங்களூக்கு முன் தமிழ்செல்வி உடல்நலக் குறைவு காரணமாக இறந்து விட, இன்று அவரது படத்திறப்பு விழா மற்றும் மனைவியின் நினைவாக அன்னதானம் ஆகிய நிகழ்வுகளை நடத்தினார் பிரேம்நாத்.
அவரிடம் பேசினோம்.

''நான் என்னுடைய தாய்மாமாவை நம்பியே சினிமாவுக்கு வந்தேன். தமிழும் சினிமாவுல இருக்க ஒரே இடம்கிறதால் எங்களிடையே காதல் வந்தது. ஆனாலும் ரெண்டு தரப்புலயும் பெரியவங்க பேசியே எங்க திருமணம் நடந்தது. ஒரு பையன், ஒரு பொண்ணு. கல்யாணம் வரைக்கும் நடிப்பு, டான்ஸ்னு பிசியா இருந்தவங்க என்ன நினைச்சாங்களோ தெரியல, திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிட்டாங்க. அவங்க விருப்பம்னு நானும் விட்டுட்டேன்.
மகனையும் மகளையும் நல்லவிதமா வளர்த்து ஆளாக்கினாங்க. பையன் இப்ப ஐ.டி. கம்பெனியில வேலை பார்க்கிறான். பொண்ணு ஏர் ஹோஸ்டஸ் படிச்சிட்டிருக்கா.
சினிமா, ஸ்டேஜ் டான்ஸ்னு என்னுடைய முயற்சிகளுக்கு அவ்வளவு ஆதரவா இருந்தவங்களுக்கு கேன்சருக்கான அறிகுறி தெரிய, உடனடியா சிகிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டோம்.
நல்ல சிகிச்சை எடுத்ததுல முழுசா குணமாயிடுச்சுனு மருத்துவர்களே ஆச்சரியப்பட்டாங்க.

சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பி எல்லா வேலைகளையும் பார்த்திட்டிருந்தாங்க. எங்க சொந்த ஊரான சிவகங்கைக்கு காரை அவங்களே ஓட்டிட்டுப் போவாங்க.
எந்தப் பிரச்னையும் இல்லாத சூழல்லதான் அன்னைக்கு திடீர்னு கொஞ்சம் டயர்டா இருக்குன்னு சொன்னாங்க. ஏற்கனவே சிகிச்சை எடுத்தவங்கங்கிற காரணத்தால் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டோம். அங்க ஒருநாள் அட்மிட் ஆகி பார்த்துட்டுப் போயிடலாம்னு அட்மிட் ஆனோம்.
நார்மல் வார்டுதான். பேசிட்டே இருந்தவங்க கொஞ்ச நேரத்துல 'கொஞ்ச நேரம் படுத்துகிடுறேன்'னு சொல்லி படுத்தவங்கதான், பிறகு எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்துலயே உயிர் போயிருக்கு.
மருத்துவர்கள் வந்து பார்த்துட்டு 'மைல்டு அட்டாக்'னு சொன்னாங்க.
நோயுடன் போராடிக் கொண்டிருந்த காலத்தையெல்லாம் கடந்துட்டோம்னு நினைச்சு நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்துல தன் மூச்சை நிறுத்திக்கிட்டாங்க.
பசங்களை நல்லவிதமா வளர்த்து ஆளாக்கினவங்க அவங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போயிருக்கலாம். இது ஒண்ணுதான் எனக்கு பெரிய வலியா இருக்கு'' என்று கலங்கினார் பிரேம்நாத்.
















