மழைக்காலத்தில் வீசும் 'மண் வாசனை' - இதன் பின்னணியில் உள்ள அறிவியல் தெரியுமா?
Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின.
இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்!
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம்,
“உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது.
அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன்.

Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்?
ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது.
வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.
இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது.















