மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச்...
VanDyke : கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி; மர்மம் நிறைந்த கதைகள்! இந்தியாவில் சிக்கிய அமெரிக்கர் யார்?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி உட்பட இரண்டு இடங்களில் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டதாகவும், இந்தியாவில் உளவு பார்த்ததாகவும் 6 உக்ரைன் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அவர்களோடு அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ வான்டைக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் மியான்மரில் செயல்படும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக வந்திருப்பதாகவும், அவர்கள் இந்தியா வழியாக மியான்மர் சென்று வந்திருப்பதாகவும் தேசியபுலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதில் மேத்யூ வான்டைக் குறித்து கிடைத்திருக்கும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.
மேத்யூ, கொல்கத்தா விமான நிலையத்தில் கடைசி நேரத்தில் கைது செய்யப்பட்டார். அவர் இமிகிரேன் முடித்து லக்கேஜ்களையும் அனுப்பி வைத்து விட்டார். கடைசி நேரத்தில் உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர் பிடித்து செல்லப்பட்டு இரண்டு நாள் விசாரிக்கப்பட்டார்.

அதன் பிறகு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேத்யூ இதற்கு முன்பு பல தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். அவரது மொபைல் போன் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களை ஆய்வு செய்தபோது இத்தகவல்கள் தெரிய வந்துள்ளது. அவர் எப்படி இந்தியாவிற்குள் வந்து வடகிழக்கு மாநிலத்திற்கு சென்றார் என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது. மேத்யூ தன்னை பாதுகாப்பு ஆய்வாளராகவும், ஆவணப்பட தயாரிப்பாளராகவும், போர் நடக்கும் இடத்தில் நிருபராகவும் அடையாளப்படுத்திக்கொண்டார்.
லிபியா போரில் பங்கேற்பு
மர்மம் சூழ்ந்த மேத்யூ ஒரு கூலிப்படை பயிற்சியாளர் என்றும், அவருக்கு அமெரிக்க ராணுவத்துடன் பழைய தொடர்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் உள்ளிட்ட சில நாடுகளில் அவர் பணியாற்றியும் இருக்கிறார்.
மேலும், அவர் சிறப்பு படை பாணியிலான போர் பயிற்சிகளை வழங்கக்கூடியவர் என்றும், இதில் கொரில்லா போர் முறை, ட்ரோன் பயன்பாடு, நவீன போர் தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுப்பதிலும் சிறந்து விளங்கக்கூடியவர். லிபிய உள்நாட்டுப் போரின்போது வான்டைக் அதிக பேசப்பட்டார். பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பிறகு, அவர் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது, லிபிய மக்களுடன் அவருக்கு நெருக்கமான நட்பு உருவானது.
அங்கு புரட்சி வெடித்தபோது, அவர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்தார். அப்போது கைது செய்யப்பட்டு சுமார் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இருப்பினும், அங்கிருந்து தப்பித்த அவர், 2011ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்காவிற்குத் திரும்பினார். சிரியப் புரட்சி தொடங்கியவுடன் அது குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது நண்பர்களான அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் ஆகியோரை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கொடூரமாக கொலை செய்ததை தொடர்ந்து மாத்யூ தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்கிறார்கள்.
கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி
இந்தச் சம்பவத்திற்கு பிறகு ஆவணப்படம் எடுப்பதைக் கைவிட்டு, ஆயுத குழுக்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் பிறகு, உலகம் முழுவதும் உள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்குப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க ஒரு அமைப்பை அவர் நிறுவினார். அவரிடம் நடத்திய விசாரணையில் உலகெங்கிலும் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக வான்டைக் பேசிய பல குரல் பதிவுகளை அவரது மொபைல் போனில் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அவர் மணிப்பூர் போன்ற பகுதிகளில் இத்தகைய பயிற்சிகளை வழங்கினாரா என்பது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வான்டைக் தனது சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் காணொலிகள் மூலம் வெனிசுலா, மியான்மர், ஈரான் ஆகிய நாடுகளிலுள்ள கிளர்ச்சிக் குழுக்களில் பணியாற்ற வருமாறு உலகம் முழுவதிலுமுள்ள கூலிப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள ஆயுத குழுக்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும், அவர்களுக்கு ட்ரோன் பயிற்சி மற்றும் நவீன போர் தொழில்நுட்பங்களை வழங்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
உக்ரைனுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு நெருக்கமான தொடர்பு வைத்திருப்பதோடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உக்ரைனுக்கு பிடிக்கவில்லை. எனவே மாத்யூ மூலம் உக்ரைனின் சில அமைப்புகள் மூலம், இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.




















