திருப்பரங்குன்றம் விவகாரம்: ``அயோத்தி மாதிரி தமிழகம் மாறுவதில் தவறு இல்லை'' - நய...
இண்டிகோ சேவை ரத்து: மும்பை விமான நிலையத்தில் வேதனையை பகிர்ந்த பயணிகள்; சோக காட்சிகள்
நாட்டின் மிகப்பெரிய தனியார் ஏர்லைன்ஸ் நிறுவனமாக கருதப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திடீரென பைலட்டுகளுக்கான பணி நேரம், ஓய்வு தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு, பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1,000 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்தில் பயணிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இன்று மீண்டும் மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் டிக்கெட் கவுண்டர் முன்பு கூடிய பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு வயதான பெண், இண்டிகோ ஊழியர்களுடன் கடுமையாக வாதிட்டார்.

அதோடு விடாமல், அப்பெண் கவுண்டரின் மீது ஏறி நின்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு கூடி நின்ற பயணிகளிடம், இண்டிகோ ஏர்லைன்ஸ் குறித்து கடுமையான புகார்களையும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், மாற்று விமான வசதி செய்யப்படும் என்றும், தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் இண்டிகோ தரப்பு தெரிவித்துள்ளது.
அப்படி இருந்தும் பயணிகள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஒரு பெண் பயணி கூறுகையில், “17 மணி நேரமாக விமான நிலையத்தில் இருக்கிறேன். ஏற்கனவே இரண்டு விமான டிக்கெட்களை ரத்து செய்துவிட்டேன். இப்போது மூன்றாவது டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால், ஒரு பெண் பயணி கதறி அழுதார். விமான சேவை அடுத்த 10 நாட்களுக்குள் சரியாகும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் தெரிவித்துள்ளார்.
விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால், பயணிகள் விமான நிலையம் வருவதையே தவிர்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதிகமான பயணிகள் தங்களது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் பல மணி நேரமாக காத்துக் கிடக்கும் ஒரு தந்தை, தனது மகள் ரத்தப்போக்கால் அவதிப்படுகிறாள் என்றும், சானிடரி நாப்கின் கொடுக்கும்படி இண்டிகோ ஊழியர்களிடம் கெஞ்சிய காட்சி வைரலாகியுள்ளது.
இதேபோன்று, பெங்களூரு விமான நிலையத்தில் நம்ரதா என்ற பெண் தனது தந்தையின் அஸ்தியை கரைக்க ஹரித்வார் செல்லவேண்டும் என்பதால், அஸ்தியுடன் விமான நிலையம் வந்திருந்தார். ஆனால், அவர் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் டெல்லி சென்று அங்கிருந்து டேராடூன் செல்ல வேண்டும். என் தந்தையின் அஸ்தியை ஹரித்வாரில் கரைக்க வேண்டியுள்ளது,” என்றும் தெரிவித்தார்.
தொடர் விமான சேவை ரத்துகள் தொடர்ந்து நடைபெறுவதால், இது குறித்து மத்திய அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் 109 விமான சேவைகள், டெல்லியில் 86, அகமதாபாதில் 19, பெங்களூரு விமான நிலையத்தில் 50, ஐதராபாத்தில் 69 விமான சேவைகள் என, நாடு முழுவதும் 1,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.











