Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? - பிரான்ஸ் அதிபரின் சந்தே...
சங்கரன்கோவில்: மாற்றுத்திறனாளி விவசாயி படுகொலை; மனைவி படுகாயம் - நிலத்தகராறு காரணமா?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், மாற்றுத்திறனாளி விவசாயி. இவரின் மனைவி சுப்புத்தாய். நேற்று இரவு இவ்விருவரும் கரிவளம் பகுதியில் இருந்து சொந்த ஊரான நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது பாலம் அருகே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் எதிர்பாராத விதமாக இவர்களை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டித் தாக்கினர். கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த சங்கரலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மனைவி சுப்புத்தாயையும் விட்டுவைக்காத மர்மக் கும்பல் கடுமையாக வெட்டியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்தார்.
உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்புத்தாய், பின்னர் உயர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சங்கரலிங்கத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் பாலத்தில் மர்ம நபர்களால் இருவரை வெட்டி ஒருவர் பலியான இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் ஏற்பட்ட நிலத்தகராறு மற்றும் சொத்துப் பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று தெரியவந்தது.

குறிப்பாக, சங்கரலிங்கத்தின் சித்தப்பா குடும்பத்தினருக்கும் இவருக்கும் இடையே நிலம் மற்றும் சொத்து தொடர்பான நீண்ட கால பகைமை இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார். சிறப்புக் குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய 10 நபர்களிடம் (சங்கரலிங்கத்தின் சித்தப்பா குடும்பத்தினர் உட்பட) காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















