செய்திகள் :

`ஒரே ஒரு முகநூல் பதிவுக்கு, ரூ.50 லட்சம் செலவு?' - ஒருவழியாக விமானம் ஏறிய இந்திய வம்சாவளி மருத்துவர்

post image

பாஜக-வுக்கு எதிரான ஒரு முகநூல் பதிவிட்டதற்காகப் பதியப்பட்ட வழக்கால், கடந்த நான்கு மாதங்களாக இங்கிலாந்துக்குத் திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த 49 வயதான மருத்துவர் சங்கராம் பாட்டீல், இறுதியாகத் தனது குடும்பத்துடன் இணைந்தார். ஜனவரி 19 அன்று மும்பை காவல்துறையின் 'லுக் அவுட் நோட்டீஸ்' (LOC) காரணமாக விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட அவர், சுமார் 120 நாட்கள் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இப்போதுதான் இங்கிலாந்துக்கு விமானம் ஏறி உள்ளார்.

மே 5 அன்று, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அஸ்வின் டி போபே அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராவதாக மருத்துவர் பாட்டீல் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மே 11-ஆம் தேதிக்குள் அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸைத் திருத்துமாறு மும்பை காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவே அவர் நாடு திரும்புவதற்கான வழியை ஏற்படுத்தி தந்தது.

நீதிமன்றம்!
நீதித்துறை

என்ன நடந்தது?

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் (NHS) முழுநேர மயக்கவியல் ஆலோசகராகப் பணியாற்றும் பாட்டீல், இந்த எதிர்பாராத சிக்கலால் தனது வேலையை இழக்கும் அபாயத்தில் இருந்தார். "என் பணியிடத்தி இருந்து பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு முகநூல் பதிவிற்காக ஒருவர் எப்படி நான்கு மாதங்கள் ஒரு நாட்டில் தடுத்து வைக்கப்பட முடியும் என்பதை அவர்களால்கூட புரிந்துகொள்ள முடியவில்லை," என்று கூறும் பாட்டீல், இந்த அனுபவம் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தன்னை மிகவும் பாதித்ததாகக் குறிப்பிட்டார். சட்டரீதியான செலவுகள் மற்றும் நான்கு மாத சம்பள இழப்பு என கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்.

பாஜகவின் மகாராஷ்டிரா மாநில சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் நிகில் பாம்ரே என்பவர் அளித்த புகாரின் பேரில், கடந்த டிசம்பர் 18, 2025 அன்று இந்த முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. ஒரு தலைவர் மீதான சர்வதேச ஊழல் குற்றச்சாட்டு குறித்து நிலவும் மௌனம் பற்றி கேள்வி எழுப்பும் ஒரு பதிவும், 'ஷெஹர் விகாஸ் அகாதி' என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட மற்றொரு பதிவும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், அந்த 'ஷெஹர் விகாஸ் அகாதி' என்ற பக்கத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாட்டீல் மறுத்துள்ளார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு, அந்தப் பதிவிட்டதற்காக வருந்துகிறீர்களா என்ற கேள்விக்கு, "இல்லை, அப்படி நான் உணரவில்லை. ஏனெனில் அந்தப் பதிவு ஒரு குற்றமல்ல. பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 353 (2), அதாவது மத, இன, சமூகக் குழுக்களிடையே பகைமையை உருவாக்கும் பதிவுகளை வெளியிடுவது தொடர்பான சட்டப்பிரிவு என் பதிவுக்குப் பொருந்தாது. எனது பதிவு எந்தவொரு சமூகத்தையும் குறிவைக்கவில்லை; அதில் வெறுப்புப் பேச்சு எதுவும் இல்லை," என்று உறுதியாகக் கூறுகிறார்.

முகநூல்

ஜனவரி 10 அன்று அதிகாலை 2:30 மணியளவில் தனது மனைவியுடன் இங்கிலாந்திலிருந்து மும்பை வந்திறங்கியபோது, குடிவரவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். "உங்கள் மீது ஒரு வழக்கு உள்ளது, காவல்துறை வரும் வரை காத்திருக்கவும்" என்று கூறியபோது அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார். அன்று மாலை 6 மணி வரை குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஜனவரி 19 அன்று அவர் திரும்பிச் செல்ல இருந்த நிலையில், ஜனவரி 16 அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்ததும் லுக் அவுட் நோட்டீஸ் நீக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டும், விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

"கடைசியாக ஜனவரி 21, 2026 அன்றுதான் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த விசாரணையும் இல்லை. என்னை இங்கே வைத்திருப்பதன் நோக்கம் என்ன? விசாரணை நடத்துங்கள் அல்லது என்னைச் செல்ல அனுமதியுங்கள் என்று கூறி காவல்துறைக்கு சுமார் 15 முறை மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை," என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார் பாட்டீல்.

இறுதியாக, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காலை அவர் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். விமான நிலையத்தில் சில சோதனைகளுக்குப் பிறகு அவர் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். செவ்வாய் இரவு அவர் இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தை அடைந்து, தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்தார்.

தமிழக தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள்? - விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் இந்திய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களித்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் விவா... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: `ரூ.5-க்கு மீன் சாப்பாடு' - புதிய பா.ஜ.க அரசு அறிவிப்பு!

மேற்கு வங்க உணவில் மீன் பிரதானமாக இடம் பெறுவது வழக்கம். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் வெட்ட தடை விதிப்பார்கள் என்று முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரை செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வி... மேலும் பார்க்க

கர்நாடகா: விலக்கப்பட்ட தடை; பள்ளியில் மாணவர்கள் மீண்டும் ஹிஜாப், புனித கயிறு கட்ட அனுமதி!

கர்நாடகாவில் இதற்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவர்கள் யூனிபார்ம் தவிர எந்த வித மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக ஹிஜாப... மேலும் பார்க்க

முதலமைச்சர் விஜய்யின் காஷ்மீர் `லியோ' கஃபே - அலைமோதும் தமிழக சுற்றுலாப் பயணிகள்!

காஷ்மீரின் தெற்குப் பகுதியில், பஹல்காம் நகரில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் `சிஃபார் கஃபே' (Sifar Cafe) என்ற உணவகம் அமைந்துள்ளது. இதுதான் தற்போது தமிழ்நாட்டு சுற்றுலாப... மேலும் பார்க்க

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? ஒரே நாளில் ரூ.100 கோடி சம்பாதித்த கும்பல்?

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததால் ஒட்டுமொத்த தேர்வும் ரத்து ... மேலும் பார்க்க

பீகார்: ATM-க்குள் சென்று முடிவெட்டிக்கொள்ளும் மக்கள்; வைரலாகும் ஏடிஎம் சலூன் பற்றி தெரியுமா?

சமீப காலமாக ஆன்லைன் பணப்பரிவத்தனை அதிகரித்து இருப்பதால் மக்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பது குறைந்து இருக்கிறது. இதனால் அதிகமான ஏ.டி.எம்.கள் நகரங்களில் மூடப்பட்டு வருகின்றன. சில ஏ.டி.எம்.கள் பணம் நிரப... மேலும் பார்க்க