பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி
பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இது முற்றிலும் பொய்யான புகார் என்பது தெரியவந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 22 வயதான நர்சிங் மாணவி ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி மடிவாலா காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளிக்கிறார்.
அதில், "டிசம்பர் 2ஆம் தேதி இரவு சர் எம். விஸ்வேஸ்வரய்யா முனையத்திற்கு அருகே, கார் ஓட்டுநர் ஒருவரும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து என்னை காருக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்று புகார் அளிக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து,பெங்களூருவில் வசிக்கும் 33 வயதான கார் ஓட்டுநரை கைது செய்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த ஓட்டுநர், குற்றம் செய்யவில்லை என மறுக்கிறார்.
வழக்கை விசாரித்த போலீஸார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் ரயில் நிலையப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
டிசம்பர் 2-ம் தேதி இரவு 11:30 மணி முதல் மறுநாள் காலை 5:30 மணி வரை, அந்த மாணவியும் கார் ஓட்டுநரும் ரயில் நிலையத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தது பதிவாகியிருந்தது. மாணவி குறிப்பிட்டது போல எந்தவொரு 'கும்பலும்' அங்கு வரவில்லை. மாறாக இருவரும் இணக்கமாகப் பேசிச் சிரித்தபடியே காரில் ஏறுவதும், இறங்குவதும் காட்சிகளில் இருந்திருக்கிறது.
மேலும் ஓட்டுநரின் செல்போனை ஆய்வு செய்தபோது சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளுக்குப் பிறகும் அந்த மாணவி ஓட்டுநருக்கு இயல்பாக மேசேஜ்களை அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆதாரங்களுடன் போலீஸார் மாணவியை விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்று இரவு அவர் கார் ஓட்டுநருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அவரது கழுத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கேரளாவிற்குச் சென்ற பிறகு, இந்தக் காயங்களைப் பார்த்த அவரது காதலன் "இது எப்படி வந்தது?" என்று கேள்வி கேட்டுள்ளார். காதலனிடம் உண்மையைச் சொல்ல பயந்த அந்த மாணவி, காயங்களுக்குக் காரணம் பாலியல் வன்கொடுமைதான் என்று பொய் சொல்லி, நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

















