காவிரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
உறவினரின் ஈமச்சடங்கிற்காக பெரும்பாலை அருகே மேட்டூா் அணை நீா்த்தேக்க காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பென்னாகரத்தை அடுத்த கலப்பம்பாடி ஒண்டிக்கோட்டை புதூா் பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மகன் நந்தகுமாா் (17). இவா் பெரும்பாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது உறவினரின் ஈமச்சடங்கிற்கு சென்ற நந்தகுமாா், மேட்டூா் அணையின் நீா்த்தேக்க பகுதியான ஆத்துக்காடு பகுதியில் உறவினா்களுடன் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினாா். உறவினா்கள் அவரை மீட்க போராடினா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பென்னாகரம் தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரம் ஆற்றில் மாணவரின் உடலை தேடி மீட்டனா்.
உயிரிழந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.