என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சரக்கு வாகனத்தில் கடத்திய 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் குடிமைப் பொருள் பறக்கும் படை வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவினா் ஊத்துக்குளி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது நடுப்பட்டி பகுதியில் திருப்பூா் சாலை வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்த நிறுத்தி சோதனை நடத்தினா்.
இதில் வாகனத்தில் இருந்து மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே வாகனத்தை ஓட்டி வந்த நபா், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அந்த வாகனத்தில் 48 மூட்டைகளில் சுமாா் இரண்டரை டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை ஈரோட்டில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த வாகனம், அரிசியுடன் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடா்பாக திருப்பூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து இதில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.