செய்திகள் :

சர்ச்சை சுழலில் அமைச்சர் கீர்த்தனா; கடிந்து கொண்ட முதல்வர் விஜய்! - பதவிக்கு ஆபத்தா?

post image

29 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகி, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சராக உயர்ந்தவர் கீர்த்தனா. முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில், கீர்த்தனாவின் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

ஆனால், அமைச்சராகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, அவரது செயல்பாடுகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன.

அரசு வாகனம் யாருக்கு?

கடந்த ஜூன் 15-ல், தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு கீர்த்தனா சென்றபோது, அமைச்சருக்கான அரசு வாகனத்தில் த.வெ.க-வினர் ஏறிக்கொள்ள, கட்சிக்கொடி கட்டிய காரில் சிவகாசி புறப்பட்டார் கீர்த்தனா.

"அரசு வாகனத்தை கட்சியினர் பயன்படுத்த அனுமதிக்கலாமா..." என்று அப்போதே சர்ச்சைகள் வெடித்தன. அரசு அதிகாரிகளிடம் அதீத அதிகாரத் தொனியுடன் அமைச்சர் கீர்த்தனா நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன. அதையெல்லாம் கீர்த்தனா கண்டுக்கொள்ளவில்லை.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

புரோட்டோகால்...

அடுத்ததாக, கடந்த ஜூன் 26-ம் தேதி விருதுநகரில் நடந்த ஒரு அரசு விழாவில், 'புரோட்டோகால்' விவகாரத்தில் சக அமைச்சர் ஜெகதீஸ்வரியுடன் 'ஈகோ' மோதல் வெடித்தது. மேடையிலேயே, 'இந்த மாவட்டத்துக்கு நான் தான் பொறுப்பு அமைச்சர். என் பெயரை கீழே போட்டுவிட்டு, கீர்த்தனாவின் பெயரில் முதலில் போட்டிருக்கிறீர்களே...' என்று, மாவட்ட ஆட்சியரைக் கடிந்துக்கொண்டார் அமைச்சர் ஜெகதீஸ்வரி.

இந்த விவகாரம் பெரிதாக கோட்டை வரை புகாராகவும், கீர்த்தனாவும் ஜெகதீஸ்வரியும் ஒன்றாக செல்ஃபி எடுத்து, தங்களுக்குள் எந்த சச்சரவும் இல்லாததுபோல படத்தை வெளியிட்டனர்.

பக்குவமற்ற அணுகுமுறை!

பத்திரிக்கையாளர் சந்திப்புகளைக்கூட முறையாக நடத்த முடியாமல் ரொம்பவும் திணறுகிறார் கீர்த்தனா. சமீபத்தில், தமிழக முதலீடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துகிட்ட நீங்க பேசுறீங்களா?” என கிண்டலாக செய்தியாளர்களைப் பார்த்துக் கொந்தளித்தார்.

அமைச்சரின் பக்குவமற்ற அணுகுமுறையை அங்கிருந்த யாருமே ரசிக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் அலுவலகம் ரசிக்கவேயில்லை.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

அதிமேதாவித்தனமான அணுகுமுறை!

இந்தச் சூழலில்தான், அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் கீர்த்தனா. கடந்த ஜூலை 3-ம் தேதி, திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டவர், ஒரு மாணவியின் ஆங்கில அறிவை சோதிக்க போக, அது விவகாரமாகிவிட்டது.

'ஆங்கிலத்தில் ஒரு கேள்விக்குக்கூட பதிலளிக்க முடியவில்லை...' என்று அந்த மாணவியையும் வகுப்பு ஆசிரியையும் கடிந்துக்கொண்டவர், 'இவரே இப்படி என்றால், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் எப்படி...' என்று விமர்சித்துவிட்டு புறப்பட்டார். கீர்த்தனாவின் அதிமேதாவித்தனமான அணுகுமுறை, பலத்த கண்டனங்களை உருவாக்கியிருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, ஒட்டுமொத்த தி.மு.க-வும் இவ்விவகாரத்தை கையில் எடுத்து ஆக்ரோஷமாக பேசி வருகிறது. சோஷியல் மீடியாக்களிலுமே அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.

"நீங்களே அரைகுறை ஆங்கிலம்தான் பேசுறீங்க. இதுல, அந்த மாணவியின் தன்னம்பிக்கையை குறைக்குற மாதிரி நடந்துகிட்டது ரொம்ப தவறு" என நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அதையெல்லாம் முதல்வரும் நேரடியாக கவனித்திருப்பதுதான், கீர்த்தனாவுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

ஹிட்டாச்சி நிகழ்ச்சியில் கீர்த்தனா - முதல்வர் விஜய்

நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், "தேவையற்ற தொடர் சர்ச்சைகளில் கீர்த்தனா சிக்குவதால், அவர்மீது முதல்வர் விஜய் கோபத்தில் இருக்கிறார். இன்று ஜூலை 7-ம் தேதி, ஹிட்டாச்சி நிறுவனத்தின் தொழில் முதலீடு தொடர்பான நிகழ்ச்சி கோட்டையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கீர்த்தனாவும் வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து கீர்த்தனாவிடம் பேசிய முதல்வர், 'ரீல்ஸ் எடுப்பது உங்கள் வேலையல்ல. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், பணிகளிலும் கவனம் செலுத்துங்கள்' என்று அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார்.

பள்ளிகளில் ஆய்வு செய்வது தவறில்லை. ஆனால், ஒரு மாணவியின் தன்னம்பிக்கையை சீர்குலைப்பது போல பேசியதும், 'ஆங்கிலம் தெரியவில்லை என்றால் எதற்குமே லாயக்கில்லை' என்ற உடல்மொழியை வெளிக்காட்டியதும்தான் கீர்த்தனாவை சர்ச்சை சுழலுக்குள் இழுத்திருக்கிறது.

ஆனால், அது புரிந்தும் புரியாதவர் போல, 'நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. தமிழ்வழி கல்வியில் படித்தவள். நான் அப்படி நடந்துக்கொள்வேனா..' என்று, சிறுவயதில் தான் பரிசு பெறும் ஒரு படத்தோடு விளக்கமளித்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா. அதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அதாவது, 'கீர்த்தனா படித்தது அரசுப் பள்ளி அல்ல. விருதுநகரிலுள்ள மாங்கா மச்சி அரசு உதவி பெறும் பள்ளி. வித்யாஸாலா பள்ளிகள் குழுமத்தின் கீழ் அந்த பள்ளி இயங்குகிறது...' என்று ஆதாரங்களை எடுத்துப்போட்டு நெட்டிசன்கள் கீர்த்தனாவை வறுத்தெடுக்கிறார்கள்.

அமைச்சர் வெளியிட்ட அவரது சிறுவயது படம்

அதோடு, 'கல்வித்துறைக்கென அமைச்சர் ராஜ்மோகன் இருக்கும்போது, அந்த துறையிலுள்ள பிரச்னைகளை கீர்த்தனா ஏன் ஆய்வு செய்கிறார்... முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஏன் இவர் பதில் சொல்கிறார்... இதேபோல, தொழில் நிறுவனங்களில் ராஜ்மோகனோ, லோகேஷ் தமிழ்செல்வனோ ஆய்வு செய்து, தொழில்துறை அதிகாரிகளை கடிந்துகொண்டால், கீர்த்தனா ஏற்றுக் கொள்வாரா...' என்ற கேள்விகளும் சமூல வலைதளங்களில் எழுகின்றன.

மற்ற அமைச்சர்களின் துறைகளில் தலையிடுவதும், அதீத ரீல்ஸ் மோகத்தில் இருப்பதும் கீர்த்தனாவின் பொறுப்பற்ற செயலையே காட்டுகிறது. முதல்வரும் இதை துளியும் ரசிக்கவில்லை" என்றனர்.

"தனது செயல்பாடுகளை கீர்த்தனா மாற்றிக்கொள்ளவில்லை என்றால், இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில், அவர் பதவி இழக்க நேரிடும்" என்கிறார்கள் விவரமறிந்த த.வெ.க சீனியர்கள்.

அமைச்சர்களின் ஒவ்வொரு அசைவையும் முதல்வர் கவனித்து வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, இனியாவது தொழில்துறை வளர்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா கவனம் செலுத்த வேண்டும். ஆடிய பாதமும், பாடிய வாயும் சும்மா இருக்குமா என்பது போக போக தெரியும்.!

`வார்த்தை விளையாட்டு வேண்டாம்..!' - திருமாவளவன் பேச்சு குறித்து மாணிக்கம் தாகூர்

“அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது” எனக் கூறிய திருமாவளவனுக்கு, மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம்... மேலும் பார்க்க

`விளம்பர மோகம்; பள்ளிக் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறல்' கீர்த்தனாவுக்கு சீமான் கண்டனம்

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பப் பள்ளி மாணவி தயங்கியதால், ஆசிர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திமுக - காங்கிரஸார் தொடர் கருத்து மோதல்; கல் வீச்சு... போலீஸ் புகார் - என்ன நடக்கிறது?

தூத்துக்குடியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள வீடியோ, அரசியல் வ... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?

சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ். சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து 'அரப் லைட்' (Arab Light) எனும... மேலும் பார்க்க

"மு.க.ஸ்டாலினுடன் எங்களது நட்பு தொடர்கிறது, ஆனால்..!"- விசிக தலைவர் திருமாவளவன் சொல்வதென்ன?

எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வருகிறார். விசிக விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் (ஜூலை. 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவள... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. காலை இர... மேலும் பார்க்க