மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து, விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், பனங்குடி ஊராட்சியில் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை அமைந்துள்ளது. ரூ. 31,500 கோடியில் இந்த ஆலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து 620 ஏக்கா் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டன.
இந்த நிலத்துக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சாகுபடிதாரா்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களில் ஆலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நில எடுப்பில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயத் தொழிலாளா்களுக்கும் வேலை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், ஆலை விரிவாக்கப் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது விளைநிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பனங்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜமுனா செந்தில்குமாா், திமுக தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளா் சந்தோஷ் ஆகியோா் தலைமையில் சிபிசிஎல் ஆலை முன்பு காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டம் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்தது. வருவாய் கோட்டாட்சியா் அரங்கநாதன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். 2 மாதத்துக்குள் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.