வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
சிறை: ``அப்பா கூட நடிக்கணும்னு ஆசை இருக்கு... அதுக்கு ஒரு கண்டிஷன்" - நடிகர் விக்ரம் பிரபு
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை'. இப்படத்தில் எல்.கே.அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்' என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,
``லவ் மேரேஜ் படம் ஒன்றரை வருஷம் தாமதமாகிருச்சி. படம் ரிலீஸ் ஆகுறதே பெரிய விஷயம் என்ற மனநிலை வந்துவிட்டது. அந்தப் படத்தில் நான் நடிக்கும் பகுதி படப்பிடிப்பு எல்லாமே 35 நாள்களில் முடிந்துவிட்டது. அந்தப் படம் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் காட்டி படமும் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் காலில் அடிப்பட்டு பெட் ரெஸ்டில் இருந்தேன்.

அந்தப் படம் உருவான பிறகு ஒரே பிரச்னை... ஒரு படம் வெற்றிபெற வேண்டுமென்றால் படம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, சரியான நேரத்தில் படம் வெளியாக வேண்டும். சிறை படம் தமிழ் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவிலிருந்து சிறை மாதிரியான நல்ல படம் வந்திருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. சிறைப் படப்படப்பிடிப்பு எல்லாமே ரியல் லோகேஷனில்தான் எடுத்தோம். முன்பே அனுமதி வாங்கி, கேமராவை மறைத்து வைத்து எடுத்திருக்கிறோம். கஷ்டப்படமால் சினிமா இல்லை. கஷ்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்த ஒரிஜினாலிட்டி வரும். கொஞ்சம் மெனக்கெடல் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
ஒவ்வோர் ஆண்டும் சினிமாவின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. ஓடிடி வந்ததும் உலக சினிமா தரத்துக்கு நம்முடைய படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். இது ஆரோக்கியமான எதிர்பார்ப்பு, வரவேற்கிறேன். வாழ்வியல் சம்பந்தப்பட்ட, புதிய கதைகளைக் கேட்கிறார்கள். அந்த வகையில் இந்தச் சிறை சிறந்தப் படமாக அமையும். நான் காவல்துறை உடை அணிந்து நடிக்கும் நான்காவது படம். இன்னொரு போலீஸ் படமா என சாதாரணமாகிவிடக் கூடாது. அந்த விதத்தில் சிறை நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும்.

என்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் எனக்கு கதை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. புதுமையாகவும், ரசிகர்களை திருதிப்படுத்தும் கதையாக இருந்தால் நடிப்பேன். இதுவரை நான் நடித்த பெரும்பாலான படங்கள் அறிமுக இயக்குநர்களுடையதுதான்.
எனக்கு அப்பாகூட நடிக்க வேண்டுமென்று ஆசை. அப்பாவும் 'எப்போடா நாம சேர்ந்து வொர்க் பண்ணப் போறோம்'னு கேப்பாங்க. எங்களுக்கு ஏற்ற கதை வர வேண்டும். ஒருவேளை நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், அப்பாவின் கேரக்டரைதான் முதலில் பார்ப்பேன். அது நன்றாக இருந்தால்தான் ஒகே சொல்வேன். ஒருவேளை வரும் ஆண்டுகளில் அது சாத்தியமாகலாம் என நம்புகிறேன்.
ஒரு படம் ஹிட் ஆகிறதென்றால், அதுமாதியே எடுக்கப்பட்ட இன்னொரு படமும் ஹிட் ஆக வேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை. உலக சினிமாவைப் பார்க்கும் ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்தமாதிரியான கதைகளைத் தேடித்தான் பயணிப்பார்கள். ஒரு பீரியட் படம் எடுப்பதாக இருந்தால் அது காலத்துக்கும் நின்று பேசும். ஆனால் ஒரு வைரல் கன்டென்ட்டை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள், அடுத்த டிரெண்டிங் மாறிவிடும். அதனால், ஒரு நல்லப் படம் எடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் விருப்பம்.
குறிப்பாக தமிழ் மொழிதான் அனைத்து மொழிகளுக்கும் பூர்வீகம் என்கிறபோது, நம்மிடம் சொல்வதற்கென ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அதை முன்னெடுக்க வேண்டும். நம்மைப் பற்றி படம் எடுத்தால் ஆயிரம் கோடியை தட்டித் தூக்கிவிடலாம். நம்மை நினைத்து நாம் பெருமைபட்டால்தான் சாதிக்க முடியும் என நம்புகிறேன்" என்றார்.














