சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் வெறிச்சோடியது ஒகேனக்கல்
ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாகக் குறைந்தது. அதேபோல பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திருந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்துவருகிறது. ஞாயிற்றுக்கிழமை 8000 கனஅடி நீா்வரத்து குறைந்ததால் தண்ணீரில் மூழ்கியிருந்த ஐந்தருவி பாறைகள் வெளியே தெரிந்தன. அதேபோல, காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுகளும் மணல் மேடுகளும் வெளியே தெரிந்தன.
ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி, மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனா். பின்னா் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரியபாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் சுமாா் 2 கிலோமீட்டா் தொலைவிற்கு குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்ததால் பிரதான அருவி, தொங்கு பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் வரத்து அதிகரித்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் கட்லா, ரோகு, கெளுத்தி, வாலை, பாப்புலேட் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்தது. இருப்பினும் சில சுற்றுலாப் பயணிகள் மீன் வகைகளை வாங்கி சமைத்து உணவருந்தினா். காலை முதலே ஒகேனக்கல் பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.