மதுரை மாநகராட்சி: `ரூ.200 கோடி முறைகேடு' வரி மோசடி வழக்கில் மேயரின் கணவர் கைது -...
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு ரத்து: அமைச்சரின் மேல்முறையீடு நிராகரிப்பு
நமது நிருபர்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை ஏற்க மறுத்தது. இதையடுத்து, அந்த மனுவை அமைச்சர் தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது.
தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இதற்கு முன்பு தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும் (1996-2001) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராகவும் (2006-2011) பதவி வகித்தார்.
அப்போது தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சுமார் ரூ.21.22 லட்சம் (1996-2001) மற்றும் ரூ.3 கோடி (2006-2011) அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மற்றும் மகன் மீதும் தமிழக ஊழல் தடுப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இருந்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை கடலூர் சிறப்பு நீதிமன்றம் 2016-ஆம் ஆண்டு விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழகத்தில் பின்னர் அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் தடுப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன் கடலூர் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் மனுதாரரின் பின்புலம், அவர் வகித்த மற்றும் வகிக்கும் பதவிகள் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்,' எனக் குறிப்பிட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுவதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்தது.