NASA: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அறிகுறி; நாசா ரோவரின் புதிய கண்டுப...
ஜவ்வாது மலையில் அதானி நிறுவனம்: `337.452 எக்டேர் நிலப்பகுதிக்கு ஆபத்து'- பூவுலகின் நண்பர்கள் குழு!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம், அதானி குழுமத்திற்குச் சொந்தமான அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பெரும் பொருளாதார சிக்கலையும், பெரும் இயற்கை இழப்பையும் தமிழ்நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என பூவுலகின் நண்பர்கள் குழு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த திட்டத்துக்கான தமிழ்நாடு அரசின் ஒப்பந்தத்தை கைவிடுமாறும் வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``07.01.2024 அன்று தமிழ்நாடு அரசுடன் அதானி கிரீன் என்ற நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி அல்லேரி, தென்மலை, ஆழியார் ஆகிய இடங்களில் நீரேற்றுப் புனல்மின் நிலையம் அமைக்கும் திட்டங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அல்லேரியில் அமைக்கப்படவுள்ள நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட்(ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
அரசம்பட்டு காப்புக்காடு அமைந்துள்ள மலையில் 494.71மீ நீளமும் 64மீ உயரமும் கொண்ட 12.08 MCM கொள்ளளவு கொண்ட மேலணையும் அரசம்பட்டு மலையடிவாரத்தில் 1823மீ நீளமும் 34மீ உயரமும் கொண்ட கீழணையும் புதிதாகக் கட்டி 1800 மெகாவாட் (6*300 MW) உற்பத்தித் திறன் கொண்ட நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பதுதான் இத்திட்டமாகும். திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 10 ஆயிரம் கோடியாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் இரண்டும் அரசம்பட்டு காப்பு காட்டுக்குள் அமைந்துள்ளன.

இவ்விரண்டு நீர்த்தேக்கங்களுக்கிடையே தண்ணீரை சுழற்சி செய்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்களுக்காக எக்டேர் கணக்கிலான நிலம் நீரில் மூழ்கடிக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நீரானது கீழணையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் எனுமிடத்தில் பாலாற்றிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.
இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பகுதியில் 228.352 எக்டேர் நிலப்பகுதி அரசம்பட்டு காப்புக்காடுகளுக்கு உட்பட்ட பகுதி. அடர்க்காடுகள், புதர்க்காடுகள் ஆகியவற்றைக் கொண்ட இக்காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளதால் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மலையிலிருந்து வரும் தண்ணீர், ஏரி, கிணறுகளை நிரப்புகிரது. அதன் மூலம் மலையடிவாரத்தில் அதிகளவில் தோட்டப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. கடலை, கீரை, முள்ளங்கி, கத்தரிக்காய் ஆகியவை அதிகம் விளைவிக்கப்படுகிறது. இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள் கத்தரிக்காய் புவிசார் குறியீடு பெற்றது. மலையடிவாரத்தில் அமைக்கப்படும் நீர்த்தேக்கம் இவ்விவசாயத்தைப் பாதிக்கும்.
இந்த திட்டத்துக்காக குழாய் அமைக்கப்படும் இடங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாகும். வறட்சி அதிகமுள்ள, அதிகளவில் வெப்பநிலை பதிவாகக் கூடிய இடத்தில் நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பது சரியான முடிவில்லை. மேலும் அரிய வகையான அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்கள் வாழும் காட்டுக்குள் 228 எக்டேரை அழிப்பது ஏற்புடையதல்ல.

இக்காடுகளை அழிப்பதால் வெப்பம் அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். தமிழ் நாடு அரசு உடனடியாக அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
சூழல் ரீதியாக மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாகவும் இத்திட்டம் தமிழ் நாட்டுக்குப் பாதகமே. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு யூனிட்க்கு ரூ. 9.10 என்று திட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், இந்நிறுவனம் அதை மேலும் லாபம் வைத்து தமிழ்நாடு அரசிற்கு விற்கும் என்றால் அது யூனிட்டுக்கு ரூ. 10 க்கு மேல் வரும். ஆனால், சூரிய ஆற்றல் கொண்டோ, காற்றாலை மின்சாரம் கொண்டோ மின்சாரம் உற்பத்தி செய்தால் யூனிட் ரூ. 3க்கு உற்பத்தி செய்ய முடியும்.
தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் தேவை 21,000 MW, ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவுதிறனே 47,960 MW ஆகும். புதுப்பிக்கதக்க ஆற்றலின் நிறுவுதிறனே நமது மின் தேவையை விட அதிகம் (27,296 MW). எனவே, காப்புக்காடுகளை அழித்து மீண்டும் சரி செய்ய முடியாத பாதிப்புகளை இத்திட்டம் ஏற்படுத்துகிறது. இத்திட்டத்துக்குப் பதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு தேவையான மின்கல (battery) சேமிப்புத் திட்டங்களில் அரசு முதலீடு செய்தாலே குறைந்த விலையில் வளங்குன்றா மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
மின்கல சேமிப்பு கட்டமைப்புகளோடு காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தக்கு யூனிட்டுக்கு ரூ. 3.50 முதல் ரூ.4 வரைதான் செலவாகும். ஆனால் அதைவிட 2.5 மடங்கு அதிகம் செலவு செய்து சுற்றுச்சூழலையும் அழித்து இந்த நீரேற்று மின் திட்டத்தை நடைமுறைப்படுத்த என்ன தேவை உள்ளது.

ஏற்கனவே 2.47 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் TANGEDCO விற்கு இது கூடுதல் நிதிச் சுமையையே ஏற்படுத்தும் என்பதால் இத்திட்டத்தினை அரசு கைவிட வேண்டும்.
மேலும் கெளதம் அதானி மீதான லஞ்ச ஊழல் புகார் இன்னும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊழலை ஒழிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழக அரசு, அதானியின் நிறுவனத்தோடு தமிழ் நாடு அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம். அதானியின் திட்டமொன்றுக்கு ஒன்றிய அரசு நிச்சயம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவே அதிக வாய்ப்பிருப்பதால் தமிழ் நாடு அரசு இத்திட்டத்திற்கான வனத்துறை அனுமதி கோரப்படும் நேரத்தில் அதை நிராகரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.




















