செய்திகள் :

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7

post image

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'.

'ஜில்லா விட்டு' பாடல்
'ஜில்லா விட்டு' பாடல்

இன்றைய பகுதிக்கு, 'ஈசன்' திரைப்படத்தில் வரும் 'ஜில்லா விட்டு' பாடல் பற்றி பேசுவதற்கு பாடலாசிரியர் மோகன் ராஜனைச் சந்தித்தோம்.

இப்பாடல் சினிமாவில் அவருக்கு ஒரு நிலையான இடத்திற்குத் தளம் அமைத்துக் கொடுத்தது. மோகன் ராஜனின் சமீபத்திய ஹிட் பாடல்களுக்குக் கைகுலுக்கி வாழ்த்துச் சொல்லிவிட்டு 'ஜில்லா விட்டு' பாடல் குறித்து உரையாடத் தொடங்கினோம்.

"'ஜில்லா விட்டு' பாடல் முதன்முதலில் 'ஈசன்' படத்திற்காக எழுதப்பட்டது கிடையாது என்கிற தகவல் பலரும் அறிந்ததுதான். 'வெட்டாட்டம்' என்கிற படத்திற்காகத்தான் இந்தப் பாட்டை நான் எழுதியிருந்தேன். அந்தப் படத்தின் இயக்குநர் கண்ணன் எனக்கு இப்போதும் நெருங்கிய நண்பர்.

இந்தப் பாடல் பற்றி அப்போது படத்தின் தயாரிப்பாளர்களுக்குச் சில புரியாமை இருந்தது. இங்கு எவருடைய ஜட்ஜ்மென்ட்டும் தவறு கிடையாது. இந்தப் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகும் என்பது வெளியீட்டிற்கு முன்பு எங்களுக்கும் தெரியாது.

பாடலாசிரியர் மோகன் ராஜன்
பாடலாசிரியர் மோகன் ராஜன்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்பாடலைப் பதிவு செய்ய திட்டமிட்டிருந்தார்கள். தெலுங்கில் வேறொரு டியூன் இசையமைப்பாளர் போட்டிருந்தார். கொண்டாட்டமான சூழலுக்கு இந்தப் பாடல் சரியாக வராது என நினைத்திருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் எண்ணமும் தவறு கிடையாது" என்றவர், "எனக்கு எப்போதுமே ஒரு வாழ்க்கையைப் பாடலாக எழுதுவது மிகவும் பிடிக்கும். எனக்கு அதில் அப்படியொரு விருப்பம். திடீரென, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சார் என்னை அழைத்து, 'இது போன்ற ஒரு ஃபோல்க் பாடல் இருக்கிறது. நீ எழுதுகிறாயா?' எனக் கேட்டார். அப்படித்தான் இந்தப் பாடல் எனக்கு வந்தது" என்றார்.

"ஒரு வெள்ளிக்கிழமை அன்றுதான் 'வெட்டாட்டம்' படத்திற்காக இந்தப் பாடலை எழுத ஜேம்ஸ் வசந்தன் சார் என்னை அழைத்தார். பெரும் சிரத்தையைக் கொடுத்து இந்தப் பாடலை எழுத வேண்டும் என நூலகத்தில் புத்தகத்தை எடுத்து வைப்பதற்கு வரை நான் சொல்லி வைத்துவிட்டேன். ஆனால், மாலை நான்கு மணிக்கு டியூன் கொடுத்தவர் எட்டு மணிக்குள் பாடல் எழுதச் சொன்னார்.

இந்த வாய்ப்பை எனக்கு பரீட்சையாக எடுத்துக் கொண்டேன். வெறும் மூன்றரை மணி நேரத்தில் எழுதப்பட்ட பாடல்தான் இது. அந்தப் பாடலை பாலவாக்கம் கடற்கரையில் அமர்ந்துதான் எழுதினேன். இன்றும் அங்கு போகும்போதெல்லாம் அந்தப் பாடலின் நினைவுகளே நிறைந்திருக்கின்றன.

பாடலாசிரியர் மோகன் ராஜன்
பாடலாசிரியர் மோகன் ராஜன்

ஆனால், இதில் மற்றுமொரு ட்விஸ்ட் இருக்கிறது. உடனடியாக பாடல் வாங்கிய இசையமைப்பாளர் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் ரெக்கார்ட் செய்தார். ரெக்கார்ட் செய்யும் வேளையில், ஜேம்ஸ் வசந்தன் சார் என்னிடம், 'பாடல் எழுதி வைத்த பேப்பர் உன்னிடம் ஏதும் இருக்கிறதா? இங்கு இருந்ததைக் காணவில்லை' என்றார்.

அந்தப் பாடலை நினைவில் வைத்திருந்ததால் மீண்டும் எழுதிக் கொடுத்தேன். பிறகு, இப்பாடலை தஞ்சை செல்வி பாடினார். பாடலைக் கேட்ட பிறகு இயக்குநர், இயக்குநரின் ஓட்டுநர் என அனைவரும் என்னைப் பாராட்டத் தொடங்கிவிட்டார்கள்.

'உனக்கு இந்தப் பாடலுக்காக நிறைய விருதுகள் கிடைக்கும்' என்றார்கள். எந்த இடத்தில் வைத்து பாராட்டு வாங்கினேனோ, அங்கு வைத்தே 'இந்தப் படத்தில் (வெட்டாட்டம்) அந்தப் பாடல் இல்லை. ஜேம்ஸ் வசந்தனே இந்தப் படத்தில் இல்லை' எனச் சொன்னார்கள். மீண்டும் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அதே இடத்தில் வைத்து சசிகுமார் சார் என்னிடம், 'வரிகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்' எனக் கைகுலுக்கி வாழ்த்தினார். இதனை என்னவென்று விவரிப்பது! இதுதான் மேஜிக்." என்றபடி மென்மையாகச் சிரித்தார்.

'ஜில்லா விட்டு' பாடல்
'ஜில்லா விட்டு' பாடல்

"இந்தப் பாடல் என்றைக்கோ ஒரு நாள் வெளிவரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இந்தப் பாடல் நிராகரிக்கப்பட்டு விட்டதே என மூன்று நாள்களுக்கு வருத்தங்கள் இருந்தன. அதன் பிறகு, மீண்டும் அடுத்தடுத்து வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யத் தொடங்கிவிட்டேன். அந்தச் சமயத்தில், இந்தப் பாடலை உண்மையாக நாம் நன்றாக எழுதியிருக்கிறோமா, எதனால் இதனை நிராகரித்தார்கள் என்பன போன்ற சந்தேகங்கள் எழும்.

அப்படியான நேரத்தில் ஒரு நாள் மீண்டும் ஜேம்ஸ் வசந்தன் சார் என்னை அழைத்து, 'ஜில்லா விட்டு பாடல் சசிகுமார் படத்தில் வரவிருக்கிறது' என்ற தகவலைச் சொன்னார். அப்போது இந்தப் படத்தை நடிகர் விக்ரம் தயாரிப்பதாக இருந்தது. இந்தப் பாடல் அதற்கான பெரிய இடத்தை அதுவாகவே தேடிக் கொண்டது என அப்போது சிலாகித்தேன்.

இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் அழுகவே இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில், இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நான் இந்தப் பாடல் வெளிவராததை நினைத்து நிறைய அழுதுவிட்டேன். ஆனால், திடீரென ஒரு நாள் தனிமையில் எங்களுடைய வீட்டில் நான் அமர்ந்திருக்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எனக்கு அழுகை வந்துவிட்டது.

என்னுடைய வீட்டில் என்னுடைய பாடல் ஒலிக்கிறது என்ற நெகிழ்ச்சிதான் என் கண்களில் கண்ணீரை வர வைத்தது என நினைக்கிறேன்" என்றவர், "இந்தப் பாடல் பற்றி பலர் என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முரண்களையும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

பாடலாசிரியர் மோகன் ராஜன்
பாடலாசிரியர் மோகன் ராஜன்

அதில் ஒருவர், 'அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா, அரசன் கூட ஆண்டியாம், வாழ்க்கையில போண்டியாம், எட்டாவதா என்ன பெத்த, என் அப்பனுக்கு இது தெரியல, சொக்கனும் அதைச் சொல்லல' என்ற வரிகளைக் குறிப்பிட்டு 'இதில் ஏன் சொக்கன்தான் சொல்ல வேண்டுமா, யாரோ ஒருவர்கூட சொல்லியிருக்கலாமே!' என்றார். அது சரியானதுதான் என்று சிரித்துவிட்டு நான் கடந்து போய்விட்டேன்.

ஒரு வேளை நான் இலக்கிய வட்டத்தில் இருந்து வந்திருந்ததால், இந்தப் பாடல் இன்னும் என் பெயரை வைத்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் இருக்கிறது. இந்தப் பாடலை எழுதிய பிறகு நான் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனை அழைத்து இந்தப் பாடல் பற்றி சொன்னேன். அழைப்பில் இருந்த அவரும், 'என்னுடைய டெஸ்க்டாபில் உன்னுடைய பாடலைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.' என்றார். அந்தக் கணம் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது!" என்றார்.

முஸ்தபா முஸ்தபா விமர்சனம்: டிரெண்டில் இருக்கப் போராடும் அவுட்டேட்டட் காமெடி படம்!

கார்த்திக் (சதீஷ்) ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது, அவரது அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் பரவத் தொடங்குகிறது. இதனால் திருமணமே நின்றுவிடக்கூடிய சூழலில் நண்பன்... மேலும் பார்க்க

Kadhal Reset Repeat Review: 'அம்னீஷியா' நாயகி, 'ஒன் சைடு லவ்' நாயகன்; எப்படி இருக்கு இந்த லவ் படம்?

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா ஷங்கர்) 'ஃப்ளை ஹை' என்ற மியூசிக்கல் பேண்டில் பாடகியாக இருக்கிறார். அதில் இருக்கும் ஹரிச்சந்திரனுக்கும் (அர்ஜுன் அசோகன்) அ... மேலும் பார்க்க

வடம் விமர்சனம்: 'முரட்டுக் காளை' கதாநாயகனும், தேடிவரும் பகையும் - இது மற்றுமொரு மதுரை சினிமா!

சிங்கம்புணரியில் வசிக்கும் வெற்றி (விமல்), பாண்டி முனி என்கிற காளை மாட்டை அன்போடும் வளர்க்கிறார். மிகவும் நேர்மையானவராக இருக்கும் அவருடைய தந்தை சந்தனவேல்தான் (நரேன்) ஊருக்கே தலைவர். வடமஞ்சு போட்டியில்... மேலும் பார்க்க

Texla: 'அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது..!' - லதா ரஜினிகாந்த்

'லாம் சலாம்' படத்திற்கு பிறகு 'டெக்ஸ்லா' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். ... மேலும் பார்க்க

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகி பாபுவின் 'ஆன் ஆர்டினரி மேன்' ஷூட்டிங்! பரபர அப்டேட்ஸ்!

டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் 'an ordinary man'படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தி... மேலும் பார்க்க