தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆ...
டிரம்ப்பின் நெருக்கடியில் இந்திய ரஷ்ய உறவுகள் - புடின் பயணம் எதை சாதிக்கும் ?
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
ரஷ்ய அதிபர் புடினின் இரு நாள் இந்திய விஜயம் இந்திய ரஷ்ய உறவுகள் , அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்தால் முக்கியமான “சோதனைக் கட்டத்தில்” இருக்கும் சூழலில் வருகிறது.
வரும் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கவிருக்கும் புடினின் வருகை , இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பின் பேரில் நிகழும் ஒரு அரசுமுறை விஜயம்.
இது இந்திய ரஷ்யத் தலைவர்களுக்கிடையே ஆண்டுக்கொருமுறை நடக்கும் வழக்கமான சந்திப்புதான். இது இரு நாட்டுத் தலைவர்களிடையே நடக்கும் 23வது உச்சி மாநாடு. ஆனால் இந்த சந்திப்பு நிகழும் சர்வதேச அரசியல் தட்பவெப்ப நிலை காரணமாக இது முக்கியத்துவம் பெறுகிறது.
இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகள் முக்கியமானவை.
இந்திய ரஷ்ய நட்பு - புடின் இந்தியா வருகை
சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே இந்திய ரஷ்ய நட்பு என்பது பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. சோவியத் ஒன்றியம் உடைந்து, பனிப்போர் முடிந்த பின்னும் இந்திய ரஷ்ய உறவுகள் பலமாகவே இருந்து வந்துள்ளன.
புடின் அதிபரான பின்னும் இந்த சூழல் தொடர்கிறது.
புடின் கடந்த 2021ல் இந்தியாவுக்கு வந்த ஒரு சில மாதங்களுக்குப் பின் உக்ரெயின் மீது தாக்குதலைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ல் ரஷ்யா உக்ரெயின் மீது தொடுத்த போரை அடுத்து சர்வதேச அளவில் அது தனிமைப்பட்டு விட்டதாக ஒரு தோற்றம் நிலவினாலும், அவ்வாறு தனிமைப்படுத்தவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் இது போன்ற முக்கிய விஜயங்கள் புடினுக்கு தேவைப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருக்கடியையும் மீறி தன் கேந்திர அரசியல் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காத நிலையைக் காட்ட இந்த சந்திப்பு உதவும் என்ற கருத்து நிலவுகிறது.

புடினின் இந்தப் பயணம், உக்ரெயின் போரை அடுத்து மேற்குலகின் பொருளாதார தடைகளை எதிர்கொண்ட ரஷ்யாவிடம் தொடர்ந்து மலிவு விலை எண்ணெய் வாங்கிய காரணத்திற்காக இந்தியா அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் 25% அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்ட சூழலில் வருகிறது.
இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ரஷ்யா விமர்சித்திருந்தது. கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய எண்ணெயை மற்றும் எரி வாயுவை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் பெரிய வாடிக்கையாளர்கள் என்ற நிலையில் டிரம்ப்பின் இந்த முடிவு இந்திய-ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.
தடைகள் வரும் டிசம்பரிலிருந்து கடுமையாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக்குறைத்து வருவதுடன், அமெரிக்காவிடமிருந்து கடந்த சில மாதங்களாக எண்ணெய் வாங்கத் தொடங்கியிருக்கின்றன.
புடினின் இந்தியப் பயணத்தின் போது, இந்த பொருளாதாரத் தடைகளையும் மீறி , இந்தியாவுக்கு தொடர்ந்து எப்படி எண்ணெய் விற்பது என்பது பற்றி ஆலோசிப்பார் என்பது உறுதி. ஏற்கனவே ரஷ்யா இந்தியாவுக்கு விற்று வரும் எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி தரும் என்று செய்திகள் கூறுகின்றன.
சகாய விலையில் கிடைத்தாலும், இந்த ரஷ்ய எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குமா, அதன் பொருளாதார லாப நஷ்டக் கணக்கு என்ன என்பதை இந்திய நிதி அமைச்சகமும், மற்றும் இந்தியாவின் கேந்திர அரசியல் கொள்கை வகுப்பாளர்களும் ஆராய்ந்து முடிவெடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், பொருளாதாரத் தடையை மீறி எண்ணெய் கொள்முதலைத் தொடர்வது என்று இந்தியா முடிவெடுத்தால், இந்த இறக்குமதிக்கான பணத்தை அமெரிக்க டாலரில் தராமல் , ரஷ்ய ரூபிள் அல்லது இந்திய ரூபாய் போன்ற உள் நாட்டு கரன்சியையே பயன்படுத்தலாமா என்பது குறித்தும் இரு தரப்புகளும் விவாதிக்கக்கூடும்.
இந்தியாவின் Rupay , ரஷ்யாவின் Mir போன்ற பரஸ்பர கொடுக்கல் வாங்கல் அமைப்புகளை அங்கீகரித்து இரு தரப்பு வர்த்தகங்களில் பயன்படுத்துவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ தளவாட வர்த்தகம்
இந்த எண்ணெய் வர்த்தகம் மட்டுமின்றி இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ராணுவ தளவாட கொள்முதல் விஷயங்களும் முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ராணுவ தளவாடக் கொள்முதலுக்கு பல தசாப்தங்களாகவே ரஷ்யாவைச் சார்ந்திருக்கிறது.
போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகள் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து எஸ் யு 57 ரக விமானங்களை கூட்டாகத் தயாரிப்பது பற்றி பேசியிருக்கிறது. ஆனால் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை. இவை stealth fighters எனப்படும், எதிரியின் ராடார் கண்காணிப்பு சாதனங்களுக்கு “டிமிக்கி” கொடுத்து ஊடுருவித் தாக்கும் வல்லமை படைத்த விமானங்கள். அமெரிக்காவின் F 22 , F 35 ரக விமானங்களுக்குப் போட்டியாக ரஷ்யாவால் தயாரிக்கப்பட்டவை.
ரஷ்யா இந்த விமானங்களை இந்தியாவுக்கு விற்க விரும்பலாம். ஆனால் இந்தியா இந்த விமானங்களை உடனடியாக வாங்க ஒப்புக்கொள்ளும் என்று தோன்றவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று, இந்தியா இந்த விமானங்களை , ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பின் ஒரு பகுதியாக இந்தியா-ரஷ்யக் கூட்டுத்தயாரிப்பாக இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்ற கருத்தில் இருந்தது. இதற்கு ரஷ்யா உடன்பட்டதாக தெரியவில்லை. இதனிடையே இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானத் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் இருந்து இந்தியா சில ஆண்டுகளுக்கு முன் விலகிக்கொண்டது. இந்தப் பின்னணியில் இப்போதைய புடின் விஜயத்தில் இந்த Su57 குறித்த விஷயங்களை பேச ரஷ்யா விரும்பலாம்,
இரண்டாவது, ரஷ்யாவே இந்த விமானத் தயாரிப்புகளில் இன்னும் முழுமையான வேகம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது . ரஷ்ய விமானப்படையே சமீபத்தில்தான் இந்த விமானங்களை தனது படையில் சேர்த்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து இயங்குவதாகக் கூறப்படும் பயங்கரவாதத் தளங்களுக்கு எதிராக நடத்திய “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், அது பயன்படுத்திய போர்விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிரான S400 வான்பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து கூடுதலாகப் பெற விரும்புவதாகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்தியா பல பாகிஸ்தான ஆளில்லா தாக்குதல் விமானங்களையும், ஏவுகணைகளையும் இந்த “சிந்தூர்” நடவடிக்கையில் அழித்ததாக இந்திய விமானப்படை கூறியிருந்தது.

இந்த S400 வான் பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் அமைத்திருக்கும் இரும்புக்கூரை ( iron dome) போன்ற அமைப்பல்ல என்றாலும், இந்தியாவுக்கு ஏவுகணைத்தாக்குதல்களிலிருந்து ஓரளவு பாதுகாப்பைத் தரவல்லது.
ஏற்கனவே கடந்த 2018ல் இந்தியா சுமார் 5 பிலியன் டாலர் மதிப்பில் இந்த பாதுகாப்பு அமைப்பின் முதல் ஐந்து பிரிவுகளை வாங்க ஒப்புக்கொண்டது. இதில் மூன்று பிரிவுகள் தயாரிப்பு முடிந்து இந்தியாவுக்கு தரப்பட்டு, அவைதான் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. மீதி இரண்டு பிரிவுகள் வந்து சேரவேண்டும். இது தவிர மேலும் கூடுதலாகவும் இந்த பாதுகாப்புப் பிரிவுகளை வாங்க இந்தியா விரும்புகிறது.
விசா இல்லாத சுற்றுலா பயணம்
இது தவிர, இரு நாட்டு மக்களிடையே கலாசார மற்றும் பொருளாதார உறவுகளிய மேம்படுத்த , சுற்றுலா பயணங்களை விசா கெடுபிடிகள் இல்லாததாக்குவது பற்றியும் இரு நாடுகளும் சிந்தித்து வருகின்றன.
இந்த திட்டத்தின்படி, இரு நாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுக்களாக வரும்போது அவர்களுக்கு விசாவை தேவையற்றாதாக்கலாம் என்ற யோசனை விவாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இது குறித்து மாஸ்கோவில் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துணை அமைச்சர் ஆன்ட்ரே ருடென்கோ இது குறித்த விவாதங்கள் இரு தரப்புகளிடையே நடத்தப்பட்டுவருவதாகக் கூறியிருக்கிறார்.
இந்த விஷயங்கள் ஒரு புறமிருக்க புடினின் இந்த விஜயம் , அவருக்கு தனிப்பட்ட அளவில் மேலும் தனது சர்வதேச செல்வாக்கு குறைந்து விடவில்லை என்பதை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பத்தைத் தரும் என்று ராஜிய விவகார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

ரஷ்யா உக்ரெயின் போரால் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில், டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் வந்த பின், அவர் அழைப்பை ஏற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடத்தப்பட்ட சந்திப்பு புடினின் சர்வதேச இமேஜை உயர்த்தியது. இதன் பின் சீனாவில் கடந்த ஆகஸ்டில் நடந்த ஷாங்காய் கூட்டுறவு இயக்க உச்சி மாநாட்டிலும் புட்டின் கலந்து கொண்டார். ( அந்த மாநாட்டில் விளிம்பில் , புடினும் மோடியும் தனியே சந்தித்ததும் நினைவிருக்கலாம்).
கூர்ந்து கவனிக்கும் அமெரிக்கா
புடினும் தனிப்பட்ட வகையில் லாபமிருக்கிறதோ இல்லையோ, இந்த விஜயம் இந்திய அமெரிக்க உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம்.
டிரம்ப்பை பொறுத்தவரை, உக்ரெயின் பிரச்சனையில் அவர் புடினுக்கு எதிராக முந்தைய அமெரிக்க நிர்வாகங்களைப் போல கடும்போக்கு காட்டவில்லை என்பதே உண்மை.

ஆனால் , உக்ரெயின் போரை நிறுத்த டிரம்ப் கடைப்பிடிக்கும் சாம பேத தான தண்ட வழிமுறைகளில், ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்துக்கு இடைஞ்சல் செய்வதும் ஒன்று. இதை அவரால் முழுமையாக செய்ய முடியாவிட்டாலும், ( உதாரணத்துக்கு, ரஷ்யாவிடம் மிக அதிகமாக எண்ணெய் வாங்கும் சீனாவிடம் அவர் பாச்சா பலிக்கவில்லை) , இந்தியா மீது நெருக்கடி கொடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதிதான் இந்தியா மீது விதிக்கப்பட்ட 25% கூடுதல் இறக்குமதி வரி.
இந்த சூழலில் டிசம்பரில் நடக்கவுள்ள புடினின் இந்திய விஜயத்தின் முடிவுகளை டிரம்ப் நிர்வாகம் கூர்ந்து கவனிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.













.jpg)
