நெல்லை பள்ளிகள் திறப்பு: 'மலர் மாலைகள், கிரீடங்கள், இனிப்புகள்' - மாணவர்களுக்கு ...
டெல்லியில் முகாமிட்டுள்ள அண்ணாமலை; நயினாரிடம் தலைமை கேட்ட கேள்விகள்! - சென்னையில் அதிரடி அறிவிப்பு?
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் 'அண்ணாமலை விவகாரம்' இப்போது மிக முக்கியமான, இறுதித் கட்டத் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தியில், "தான் தொடர்ந்து தமிழக பாஜகவில் நீடிப்பதில் பயனில்லை" என மறைமுகமாக விலகல் கடிதத்தைக் கொடுத்துள்ள அண்ணாமலை, கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அதிமுக தலைவர்கள் மீதும் ஊழல் புகார்களை தெரிவிக்க, அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. பிறகு சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் இணைய வேண்டும் என டெல்லி பாஜக தலைமை யோசனைகளை முன்வைத்த போது, அதிமுக தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான்.

தேர்தல் கணக்குகளை போட்டு பார்த்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலையை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு வந்திருந்த நயினார் நாகேந்திரனை நியமித்திருந்தார்.
அப்பொழுதிலிருந்தே அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்ததற்கு பிறகு பாஜகவில் இருந்து முழுமையாக விலக முடிவு எடுத்தார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
இதற்காக டெல்லி வந்துள்ள அண்ணாமலை, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். வழக்கமாக டெல்லி வந்தால் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் இல்லத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த அண்ணாமலை, இந்த முறை தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். டெல்லி வந்த அன்று மாலை சுமார் 5 மணி நேரம் நீடித்த பாஜக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தையும் அண்ணாமலை புறக்கணித்தார்.
தொடர்ந்து, ஜூன் 2-ல் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, தமிழக தேர்தல் தோல்விக்கு உள்கட்சிப் பூசலே காரணம் என அதிருப்தி கடிதம் அளித்தார். தான் ஓரம் கட்டப்பட்டது ஏன் என கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் முன்வைத்து விரிவான கடிதமாக அதை சமர்ப்பித்து இருந்தார்.

இதையடுத்து அவர் சென்னை திரும்ப விமான நிலையம் சென்றபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. இதனை அடுத்து அவசரமாக அமித் ஷாவின் இல்லத்திற்கு திரும்பிய அண்ணாமலை, 20 நிமிடத்திற்கு மேலான சந்திப்பாக அதை மேற்கொண்டார்.
பொதுவாக இத்தகைய கட்சி அரசியல் சந்திப்புப் புகைப்படங்களை வெளியிடாத அமித் ஷா, இந்த முறை அண்ணாமலையுடனான சந்திப்புப் புகைப்படங்களை வெளியிட்டு, தேசியத் தலைமை அவரைச் சமாதானப்படுத்த விரும்புவதைப் பகிரங்கமாக உணர்த்தினார்.
இந்தச் சூழலில், நேற்று முன்தினம் மற்றொரு திருப்பமாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு அழைத்தது மேலிடம்.
அழைப்பை ஏற்று நேற்று நயினாரும் டெல்லிக்கு வந்திருந்தார் . தேசியத் தலைவர் நிதின் நபின் பீகாருக்கும், அமித் ஷா திரிபுராவுக்கும் அவசரப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அதிமுகவுடன் பேச்சுவார்த்தைகளில் அதிகம் பங்கெடுத்த மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகானை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அண்ணாமலையின் விலகல் முடிவு மற்றும் அது தமிழக பாஜகவில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து அவரிடம் கட்சித் தலைமை விரிவாகக் கேட்டறிந்துள்ளது.
தனது பிறந்தநாளுக்காக நேற்று இரவே அண்ணாமலை கோவை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி மேலிடத்தின் இறுதி முடிவை அறிந்துகொள்வதற்காகத் தனது பயணத்தை அவர் தள்ளி வைத்துள்ளார்.

இன்று டெல்லியிலேயே இருக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்துப் பெறுவதோடு தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் பேசத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று முழுமையாக டெல்லியில் இருந்துவிட்டு, நாளை அவர் சென்னை திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
டெல்லி தலைமையின் சமாதானத்தை ஏற்று அண்ணாமலை பாஜகவிலேயே நீடிப்பாரா? அல்லது நாளை சென்னை வந்ததும் அவர் வெளியிடப் போகும் அந்த 'முக்கிய அறிவிப்பு' தமிழக பாஜகவை உடைக்குமா? மில்லியன் டாலர் கேள்விக்கான விடை தெரிய கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்!
















