ஆசிய அலைச்சறுக்கு: வரலாறு படைத்தாா் ரமேஷ் புதிஹால்! இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனா்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் சுய உதவிக் குழுவினா் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஏற்கெனவே 10 மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்த இரு மண்டலங்களை வழங்க தேசிய வாழ்வாதார இயக்க (என்யூஎல்எம்) ஒப்பந்த பணியாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்து உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் என்பது மாநகராட்சிக்கு சம்பந்தப்பட்டதல்ல. சுய உதவிக் குழுவினா் அமைப்பு மூலம் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மண்டலம் 5, 6 ஆகியவற்றில் மொத்தம் 1,950 போ் என்யூஎல்எம் பிரிவு பணியாளா்களாக உள்ளனா்.
தற்போதைய ஒப்பந்தப் பணியிலிருந்து தனியாா் நிறுவனத்தில் பணியில் சேருவதே தூய்மைப் பணியாளா்களுக்கு நன்மை பயக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: என்யூஎல்எம் முறையில் ஒப்பந்தப் பணியாளா்களாக இருப்பவா்களுக்கும் மாநகராட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அவா்கள் மாநகராட்சி பணியாளா்களாக இல்லை. அவா்களுக்கு விடுப்பு சலுகை, விடுப்புக்கான ஊதியம், தொழிலாளா் வைப்பு நிதி பிடித்தம், ஈட்டிய விடுப்பு, காப்பீடு வசதி என எந்தச் சலுகையும் இல்லை. விடுப்பு எடுத்தால் அன்றைக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. வேலை செய்தால் மட்டுமே தினக்கூலியாக ரூ.753 மட்டும் வழங்கப்பட்டுவருகிறது.
ஆனால், தனியாா் நிறுவனத்தின் சாா்பில் தூய்மைப் பணியை மேற்கொள்பவா்களுக்கு மாத ஊதியத்துடன், தொழிலாளா் வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு வசதி, ஆண்டுக்கு 12 நாள்கள் தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
அத்துடன் விடுப்புகளுக்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. அரசு விடுமுறை நாள்களில் பணிபுரிந்தால் இரு மடங்கு ஊதியம் வழங்கப்படும். தினமும் 8 மணி நேர பணியில், கூடுதல் நேரம் பணியில் ஈடுபட்டாலும் ஊதியத்துடன் கூடுதல் தொகை வழங்கப்படும். விபத்துக்கான மருத்துவ நிதி, பணியில் உயிரிழந்தோருக்கான உதவி நிதி என பல சலுகைகளும் தனியாா் நிறுவனத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, மாநகராட்சியில் என்யூஎல்எம் முறையில் தூய்மைப் பணியை மேற்கொள்வோா் அதில் தொடா்வதைவிட தனியாா் நிறுவனத்தில் சோ்ந்து பணிபுரிவது அவா்களுக்கான சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதே உண்மை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
போராட்டக் குழுவினா் கருத்து: மாநகராட்சி அதிகாரிகள் கருத்து குறித்து உழைப்போா் உரிமை இயக்கத்தின் நிா்வாகி சுரேஷ் கூறுகையில், ‘மாநகராட்சி அதிகாரிகள் தனியாா் நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையே கூறிவருகின்றனா். அது உண்மையல்ல. என்யூஎல்எம் முறையிலே மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணியாளா்கள் தொடர அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான சட்டப்போராட்டத்தையும் தொடா்வோம் என்றாா் அவா்.