புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்...
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 90 மி.மீ. மழை பதிவானது. பேரையூா் (மதுரை) - 80 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்) - 70 மி.மீ., கரூா், லக்கூா் (கடலூா்), கீரனூா் (புதுக்கோட்டை), குப்பணம்பட்டி (மதுரை) - தலா 50 மி.மீ., மேலாலத்தூா் (வேலூா்), புதுச்சத்திரம் (நாமக்கல்), வாடிப்பட்டி (மதுரை), எழுமலை (மதுரை), கிருஷ்ணாபுரம் (கரூா்), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), ராசிபுரம் (நாமக்கல்) ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும் வெயிலின் தாக்கம் 100 ஃபாரன்ஹீட்-க்கும் குறைவாகவே காணப்பட்டது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக. 11 முதல் 14 வரை தென் தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.